"தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது" - திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித...
குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை' கொடுக்குமா கமலின் முயற்சி?!
திமுக - காங்கிரஸ் விரிசல்!
கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மேடையிலும் ஆளும் திமுக தரப்பு `எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி... கொள்கை கூட்டணி' என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தது. அவ்வப்போது கூட்டணிக் கட்சிகள் ஆளும் அரசின் செயல்களை விமர்சித்தாலும் அதனை உடனடியாக சரிசெய்துகொண்டிருந்தது திமுக தரப்பு. இந்தச் சூழலில் அந்தக் கூட்டணி குளத்தில் 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற ஒரு கல் விழுந்தது. அந்த ஒரே ஒரு கல்லைத் தொடர்ந்து அடுத்தடுத்த கற்கள் இப்போதுவரை தொடர்ச்சியாக விழுந்து கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இப்போதிருக்கும் கட்சிகள் தொடருமா இல்லையா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

அதிலும் திமுக கூட்டணிக் கட்சியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் சில முரண்பாடுகள் இருந்தன. அந்த முரண்களைக் களைய திமுக தலைமை அடுத்தடுத்து டெல்லி காங்கிரஸ் தலைமையைச் சந்திக்கத் தூது அனுப்பிக்கொண்டே தான் இருந்தது. கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என்று இரண்டு கட்சிகளும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்தான் கூட்டணி ஆட்சி கிடையாது என்று முதல்வர் வெளிப்படையாகப் போட்டு உடைக்க... மீண்டும் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் உச்சமாக, காங்கிரஸ் மாவட்ட அளவில்... `கூடுதல் இடங்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு என்பதைத் தாண்டி நாம் விஜய்யுடன் கூட்டணிக்குச் செல்லவேண்டும்' என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
குழப்பத்தில் கூட்டணி!
ஒரு பக்கம் காங்கிரஸ் பிரச்னைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை அரவணைக்கும் வேலைகளையும் செய்துகொண்டிருந்தது திமுக. இப்போதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என்றாலும், அமைச்சர்களை வைத்து ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் பேசிக்கொண்டிருக்கிறது திமுக. அதில் சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு வரை உறுதிசெய்யப்பட்டிருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் போன்ற சில முக்கிய கட்சிகளுடன் இப்போதுவரை பேச்சுவார்த்தையே ஆரம்பிக்கவில்லை என்கிறது அறிவாலய வட்டாரம்.

இந்த விவகாரம் குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம். "திமுக-வின் தொடர் வெற்றிக்கு எங்கள் கூட்டணிக் கட்சிகளின் பலம் மிக முக்கிய காரணம். எங்கள் கூட்டணியில் பெரியளவில் எந்த பிரச்னையும் இல்லையென்றாலும், தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியில் குழப்பம் என்ற பிம்பம் உண்டாவது எங்கள் கூட்டணிக்கு நல்லதல்ல. இந்த நிலையை உடனடியாக மாற்றியே ஆகவேண்டும் என்று கருதியது திமுக தலைமை. ஏற்கெனவே ஒருபக்கம் முதல்வரின் மருமகன் சபரீசன், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மூத்த அமைச்சர் வேலு ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் கண்டிப்பாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து அனைத்தும் உறுதியாகிவிடும்.
"கமலின் முயற்சி!"
ஒரு பக்கம் திமுக பேசிக்கொண்டிருந்தாலும் சில கட்சிகள் விடாப்பிடியாக முறுக்கிக் கொண்டு நிற்கின்றன. இதனை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை வைத்து காய்நகர்த்துகிறது திமுக தலைமை. வரும் பிப்ரவரி 21-ம் தேதி திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு நடைபெறவுள்ளது. அதே தினம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரை காந்தி மண்டபத்தில் 'ரிமெம்பரன்ஸ் ஆஃப் பாபுஜி' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். இந்த கருத்தரங்கத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா, வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
மற்றக் கூட்டணிக் கட்சிகளைப் போலவே காந்தி தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைமையையும் அழைத்திருக்கிறது ம.நீ.ம. அதே நேரத்தில் காந்தி பெயரில் நடைபெறவுள்ள நிகழ்வை காங்கிரஸ் புறக்கணிக்கவும் முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைத்து கூட்டணித் தலைவர்களும் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் காந்தியைத் தாண்டி கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெற வாய்ப்புகள் அதிகம். இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக்குள் நிகழும் குழப்பத்துக்கான தீர்வு காணப்படும்" என்றார்கள் விரிவாக.
திமுக கூட்டணிக்காக கமல் முன்னெடுக்கும் இந்த முயற்சி கைகொடுக்குமா... 'கை' கூடுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.



.jpeg)










