குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை' கொடுக்குமா கமலின் முயற்சி?!
கோவையில் வாழ்ந்த காண்டாமிருகங்கள் - கிடைத்த ஆதாரம்... தொல்லியல் ஆய்வில் வெளியான தகவல்கள்!
புல்வெளி, சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளில் வசிக்கும் ராட்சத விலங்கான காண்டாமிருகம் வேட்டையாடுதல் காரணமாக இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கிறது.
கோவையில் தற்போது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்திருந்ததற்கான எலும்புச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இதன் வழியாக தென்னிந்தியாவிலும் குறிப்பாக கோயம்புத்தூரை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளிலும் காண்டாமிருகங்கள் ஒரு காலத்தில் வசித்திருப்பதை உறுதி செய்யமுடிகிறது.

தென்னிந்தியாவில் காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான மூன்றாவது முக்கியச் சான்று இங்கு நடந்த ஆய்வில் கிடைத்துள்ளது. இந்த ஆராய்ச்சியைத் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை தலைவர் செல்வகுமார், கேரளா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறை ஆசிரியர் உறுப்பினர் அபயன் ஜி.எஸ், மாணவர் அஜித்.எம், இவர்களோடு பிறரும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் மூலம் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வரை காண்டாமிருகங்கள் இங்கு வாழ்ந்திருந்தன என்பதை அறிய முடிகிறது. இது பற்றி செல்வகுமாரிடம் பேசிய போது,
"தமிழ்நாட்டில் உள்ள புதிய கற்கால இடங்களில் மோளப்பாளையமும் ஒன்றாகும். மோளப்பாளையம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நொய்யலாற்றுப் பள்ளத்தாக்கில் பூலுவப்பட்டி ஊருக்குத் தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடிவேலம்பாளையத்திற்கு தென்கிழக்கே மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
மோளப்பாளையத்தின் புதிய கற்கால தொல்லியல் இடத்தைச் சுற்றி மலைகள் அரண் போல் அமைந்துள்ளன. இத்தொல்லியல் இடத்தின் மூன்று பக்கங்களிலும் மலைகளும், வடமேற்கிலும், வடக்கிலும் திறப்பாகவும் உள்ளது. நொய்யல் ஆற்றில் இருந்து அதன் வெள்ள நீர் பாதிக்கும் பகுதிகளில் இருந்து தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் மாடுகளின் பட்டித் தொழில்களை அமைக்கவும், வேளாண்மை செய்யவும் பொருத்தமான இடமாக இருந்தது.
இந்த இடத்தின் சுற்றுச்சூழல் வளத்தின் காரணமாகவே புதிய கற்கால மக்கள் இவ்விடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்கள் அங்கு கிடைத்த பொருள்களை carbon dating செய்தபோது மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பானை ஓடுகள், புதிய கற்காலக் கருவிகள், 47 ஆயிரம் எலும்புகள் போன்றவற்றைக் கண்டுபிடித்திருந்தோம்.

கேரளா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜி. எஸ் அபயன் மற்றும் அஜித் இருவரும் ஆய்வு செய்தபோது ஆய்வில் ஆடு, மாடு, நாய், பன்றி, முயல், உடும்பு முதலிய 28 வகையான விலங்குகளோடு, நான்கு எலும்புகள் காண்டாமிருகத்தினுடையதும் அடையாளப்படுத்தியிருந்தனர்.
விலங்கு வளர்ப்பு புதிய கற்காலத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது இதன் மூலம் அறிய முடிகிறது, அது மட்டுமன்றி காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளாக காண்டாமிருகத்தினுடைய எலும்புகள் பையம்பள்ளியில் கிடைத்ததாக எஸ் ஆர் ராவ் என்பவர் சொல்லியிருக்கிறார். இவற்றைப் பார்க்கையில் ஒரு காலத்தில் காண்டாமிருகம் வாழ்ந்ததற்கான கணிப்பிற்குள் வரமுடிகிறது.

திருநெல்வேலிக்கு அருகே உள்ள சாத்தான்குளத்திலும் காண்டாமிருகத்தின் தொல்லுயிர்ப் படிமம் கிடைத்துள்ளது. சென்னையிலும் ராபர்ட் ப்ரூஸ் என்பவர் காண்டாமிருகத்தின் சான்றுகளைக் கண்டெடுத்திருக்கிறார். அவை அனைத்தும் மிகவும் பழமையானவை. கோயம்புத்தூரில் மோளப்பாளையத்தில் கிடைத்தது புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை.
இவை அனைத்தையும் பெரிய விலங்குகள் என்பார்கள். இவை அனைத்தும் உயிர் வாழ்வதற்கு சரியான சுற்றுச்சூழல் அவசியம். புதிய கற்காலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்தது. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றம் போன்றவை இது போன்ற காண்டாமிருகங்கள் அழிவதற்கு காரணம் எனலாம்.
தமிழ்நாட்டில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பழங்காலப் பொருட்கள் வடக்கில்தான் அதிகமாக கிடைக்கிறது. வடக்குப்பகுதி என்று கூறுவது தர்மபுரி போன்ற இடங்களை... 2021 முதல் 2024 வரை நாங்கள் செய்த ஆராய்ச்சிகள் அத்தனையையும் ஒரு ஆய்வாக நாங்கள் தயார் செய்தோம். அதன் அடிப்படையில் தான் எங்களுக்கு இந்த தகவல்கள் கிடைத்தன.








அது மட்டுமன்றி கோயம்புத்தூரில் உள்ள மோளப்பாளையத்தில் தானியங்களும் கிடைத்துள்ளன. வரகு, கொள்ளு, உளுந்து, பயிர் வகைகள் அனைத்தும் கிடைத்துள்ளன.
மேலும் அம்மிக்கற்கள், அரவைக் கற்கள், கல் உருண்டைகள், தானிய விதைகள், கற்கோடரிகள், புதிய கற்காலப் பானைகள், சேமிப்புக் குழிகள், மூன்று மனித எலும்புக்கூடுகளோடு, கடல், சங்குகள், கிளிஞ்சல் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. இதன்மூலம் கடல் பகுதியிலிருந்து இங்கு வணிகத் தொடர்பு ஏற்பட்டிருந்ததையும் அறிய முடிகிறது.
மோளப்பாளையத்தை மிகவும் முக்கியமான தொல்லியல் தளம் என்றும் கூறலாம். இன்னும் அங்கு ஆராய்ச்சிகள் செய்வோம். இவை அனைத்தும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருக்கின்றண. எலும்புகள் மட்டும் கேரளா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன" என்று கூறினார்.

















