பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கு...
கட்டளைக் கால்வாய் முதல் போற்றுதலுக்குரிய கர்னல் எல்லீஸ் வரை | அணை ஓசை - 5
காவிரி – மேட்டூர் திட்டத்தின் வடிவமைப்பு எளிதில் உருவானது அல்ல. பல தசாப்தங்களாக தொடர்ந்து நடந்த ஆய்வுகள், கருத்து வேறுபாடுகள், இடமாற்றங்கள், மற்றும் நிதி மதிப்பீடுகள் தான் பின்னர் இந்தப் பெரும் திட்டத்திற்கு வழிவகுத்தன.
முதல் நிலையில், கல்லணையில் இருந்து புதிய கால்வாய்கள் அமைக்கப்பட வேண்டுமா அல்லது மேல்புறம் எங்காவது அமைக்கப்பட வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்தன. ஆய்வுகளின் முடிவில், “கட்டளை” என்னும் இடத்தில் கால்வாய்கள் வெட்டுவதுதான் பயனுள்ளதாக இருக்கும் என முன்மொழியப்பட்டது.

அங்கிருந்து நீரை பாசனத்திற்கு எடுத்துச் செல்லும் செலவுகள் கணக்கிடப்பட்டபோது, ஆரம்பத்தில் திட்டமிட்ட 3,30,000 ஏக்கர் நிலத்திற்கு பதிலாக 4,90,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றால் மட்டுமே திட்டம் லாபகரமானதாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டது. “கல்லணை கால்வாய்” விரிவாக்கம் சாத்தியமில்லாத நிலையில், “கட்டளைக் கால்வாய்” மிகப்பெரும் திறனை காட்டியது.
கொள்கை முடிவு
1909-ல், கிளைநதிகளின் நீர் அளவுகளை துல்லியமாகக் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1910 ஜனவரியில் அதன் முடிவுகள் “சர் ஜான் பென்டன்” அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அதே ஆண்டில் (G.O. No.72, March 11, 1910) பதிவு செய்யப்பட்டது. பென்டன், H.E. CLERK என்பவரிடம் கல்லணைக் கால்வாய் திட்டத்தை முன்னெடுக்க உத்தரவிட்டார். இதனால், புதிய நிலங்களுக்கு பாசன வசதி உறுதியாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இவ்வேளையில், கட்டளை மற்றும் கல்லணைக் கால்வாய் ஆகிய இரு திட்டங்களும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. தஞ்சாவூர் டெல்டாவின் விரிவாக்கமான பாசன வசதி முன்னுரிமை பெற்றதால், பவானி திட்டம் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டு, காவிரி நீர்த்தேக்கத் திட்டம் முன்னேற்றப்பட்டது. இதுவே மேட்டூர் அணை உருவாகும் பாதையைத் திறந்த மிக முக்கியமான கொள்கை முடிவாகும். நீண்டதொரு போராட்டத்தில் இது மிகவும் முக்கியமான தருணம் என்றும் கூறலாம்.
"மனித உயிரை என்ன முயற்சி எடுத்தேனும், என்ன விலை கொடுத்தேனும் காப்பாற்றப்பட வேண்டும். எவரும் பசியால் மரணிக்கக் கூடாது. மக்களின் வாழ்வில் துயரம் இருந்தாலும், அவர்களின் உயிர்களை காப்பதிலும், கொடிய பாதிப்பிலிருந்து அவர்களை காப்பதிலும் அரசு திருப்திப்பட்டு கொள்ள வேண்டும்" என்று 1877 -ம் வருடம், ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட (பிரிட்டிஷ்) இந்திய அரசின் அறிக்கை தெளிவாக கூறுகிறது. இதை நன்கு உணர்ந்து கொண்டவரான ஒரு பொறியாளரை இயற்கை நமக்கு கொடையாக அளித்தது எனலாம்.

ஆம்! அடுத்து கர்னல் எல்லீஸ் (W..M. ELLIS) 1910-இல் சிறப்பு மேற்பார்வை பொறியாளராக நியமிக்கப்பட்டு, “Papers Regarding the Cauvery Reservoir Project” என்ற விரிவான அறிக்கையைத் தயாரித்தார். 1889 முதல் 1910 வரை, ஒவ்வொரு நாளும் காவிரியில் ஓடிய நீரின் அளவுகள், விளைநிலப் பகுதி விவரங்கள், மற்றும் சாகுபடி முறைகள் அனைத்தும் சேர்த்துப் பதிவானது. மிகுந்த மதிப்பு கொண்ட அறிக்கையாக அது கருதப்பட்டது.
எல்லீஸ், இரண்டு முக்கிய வாய்ப்புகளை முன்மொழிந்தார்:
1. “மேட்டூர்” என்னும் சிறிய கிராமத்தில், நெரிஞ்சிப்பேட்டைக்கு வடக்கே 11 மைல் தூரத்தில், 80,000 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணை அமைத்தல். இந்த இடம் பொறியாளர் திரு.மோஸ் அவர்கள் முன்னதாக குறிப்பிட்ட இடமாகும்
2. கல்லணையில் இருந்து புதிய கால்வாய் அமைத்து 2,85,304 ஏக்கர் நிலங்களுக்கு நீர் வழங்கல்; (“இதற்கு கல்லணை கால்வாய் திட்டம்” என்று பெயர்) மேலும் “வடவர் கால்வாயை” விரிவுபடுத்தி 43,999 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்தல்.

இதனுடன், பெருவெள்ள காலங்களில் சேமிக்கப்படும் நீர் மூலம் 10 லட்சம் ஏக்கர் புன்செய் நிலங்களுக்கு, 70,000 ஏக்கர் இருபோக நிலங்களுக்கு கூடுதலாக பாசனம் வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
சாகுபடிக்கான விளைவுகளை எல்லீஸ் தெளிவாகக் குறிப்பிட்டார்:
* இருபோகம், ஒருபோகம் ஆகிய பயிர்களுக்கு சரியான நேரத்தில் போதுமான நீர் வழங்குதல்.
* மழை குறைந்த காலங்களில் நெற்பயிர் பாதிக்காமல் காத்தல்.
* டெல்டாவின் கடை மடைப் பகுதிகளில் மழை குறைந்தாலும், தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீர் மூலம் நம்பகமான பாசனம் அளித்தல். இவையே முக்கிய நோக்கங்களாகும்.
எல்லீஸ் தனது அறிக்கையில் நீர் சேமிப்பு, விநியோகம், நிலப்பரப்பு கணக்கீடு ஆகிய அனைத்தையும் மிகத் துல்லியமாக மதிப்பிட்டு, இத்திட்டத்தை உறுதிப்படுத்தினார். “மேட்டூர் அணையின் சிற்பி” என மதிக்கப்படும் “கர்னல் எல்லீஸ்” மேட்டூர் அணையின் திட்டமானது பருவகாலத்தில் வரும் கூடுதல் காவிரி-நன்னீர், நீர்த்தேக்கத்தில் தேக்கி வைத்து பயிர்களுக்கு தேவையான சமயத்தில், சீராக பாசன வசதி அளிக்கும். எனவே, இந்த செயல்பாடுகள் அதிக பயனளிப்பை நல்கும் என்பதை உறுதி பட தெரிவித்தார்!
இதுபோன்ற, மேற்கண்ட சில குறிப்புகள் மிகத் தெளிவாக நீர்த்தேக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. மழைப்பொழிவு அதிகமாகி வெள்ளம் ஏற்பட்டு வீணாக நீர் கடலில் கலப்பதை தடுக்கவும் நீர் பற்றாக்குறைவின் போது, நீர் தேக்கத்தில் சேர்த்து வைக்கப்பட்டதன் மூலம் ஒரே சீரான உறுதியான கால அளவுக்கு, தேவையான நீரை பெறுவதில் அதிகரிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்த நீர்த்தேக்க கட்டுமான பணி அவசியமாகிறது என்பதையும் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த நேரத்தில் பெரியார் அணை குறித்த ஒரு குறிப்பு (G.O. எண் 1418 தேதி டிசம்பர் 1902) நம் கவனத்தை கவருகிறது. அதன்படி, C.J. USSHER, என்ற கண்காணிப்புப் பொறியாளர் தலைமைப் பொறியாளருக்கு எழுதிய குறிப்பு இவ்வாறு தெரிவிக்கிறது.
“பெரியார் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி முழுமையாக ஆராயப்பட்டதாகத் தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் நீர்ப்பிடிப்புப் பகுதி இன்னும் முழுமையாக அறியப்படாமலும், யூகிக்கப்படாமலும் உள்ளது. எனவே, மலைப்பகுதியில் உள்ள பம்பை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியை காட்டும் சர்வே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென எழுதிய கடிதம் தெரிவிக்கிறது.
ஆனால், காவிரி மேட்டூர் நீர்த்தேக்கத்தை இறுதி செய்வதற்கு முன்பு கர்னல் எல்லீஸ் பலவித விஷயங்களை வெகு கவனம் கொடுத்து கணக்கிட்டு எவ்வளவு நிலம் பாசன வசதி பெற வைக்க இயலும், ஒரு கன அடி தண்ணீர் கால்வாயில் பாய்ந்தால் எவ்வளவு பரப்பளவு நிலம் பாசன வசதி பெறும் என்பதைக் கூட சற்று அளவுக்கு கூட்டியே கணக்கிட்டு காவிரி மற்றும் வெண்ணார் ஆறுகளின் கடந்த கால நீரின் அளவுகளை கருத்தில் கொண்டு கணக்கிட்டு இந்த திட்டத்தை சிறப்பாக வடிவமைத்தார் என்பது மிகுந்த பாராட்டுக்குரிய செயலாகும். மேட்டூர் அணைத் திட்டத்தின் மிக மிக முக்கியமான மற்றும் போற்றுதலுக்குரிய பொறியாளர் திரு.கர்னல் எல்லீஸ் ஆவார்.
காவிரி நன்னீர் சிறப்பு
தொடரும்..!


















