கும்பகோணம்: `பிரசாரத்தில் ஹோலோகிராம் விஜய்; மக்கள் இயக்க பணி டு அமைச்சர்!' - யார...
கேலிச்சித்திரச் சர்ச்சை: மாறிவரும் உலக ஒழுங்கும், மேற்கத்திய நாடுகளிடம் மாறாத இந்திய பிம்பமும்!
மேற்கத்திய ஊடகங்களில் இந்தியாவைக் குறித்த ஸ்டீரியோடைப் மற்றும் இனவெறிச் சித்தரிப்புகள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகின்றன. அந்த வகையில், இந்தியப் பிரதமர் மோடியின் நார்வே பயணத்தின் போது அந்நாட்டின் முன்னணி நாளிதழ் வெளியிட்ட கேலிச்சித்திரம் சர்வதேச அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் தரையிறங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, நார்வேயின் முன்னணி நாளிதழான ஆஃப்டன்போஸ்டன்' (Aftenposten), 'புத்திசாலித்தனமான ஆனால் எரிச்சலூட்டும் மனிதர்' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கருத்துரைக் கட்டுரையை வெளியிட்டது. ஐரோப்பாவின் நோர்டிக் பிராந்திய நாடுகளுடன் இந்தியா ஏன் திடீரென இத்தனை நெருக்கம் காட்ட விரும்புகிறது என்பதை ஆராய்வதாக அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.
Stereotyping Indians. The snake charmer trope. Norways largest newspaper Aftenposten and the byline ‘a clever and slightly irritating man’ @Aftenposten
— Tara Deshpande (@Tara_Deshpande) May 19, 2026
What a disgrace. As I said earlier their contemptuous colonial mindset is so deeply entrenched they cant help themselves. pic.twitter.com/HV7olOpmHc
ஆனால், அந்தக் கட்டுரையுடன் அவர்கள் வெளியிட்ட கேலிச்சித்திரம் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் பிரதமர் மோடியை ஒரு 'பாம்பாட்டியாக' சித்தரித்திருந்தனர். அவர் கையில் வைத்திருக்கும் மகுடியிலிருந்து எழும் பாம்பாக, கச்சா எண்ணெய் அல்லது எரிபொருளை நிரப்பும் குழாய் காட்டப்பட்டிருந்தது. உக்ரைன் போருக்குப் பிந்தைய உலகச் சூழலில் இந்தியா ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதையும், அதே சமயம் ஐரோப்பிய நாடுகளுடன் ஆற்றல் சார்ந்த வர்த்தகத்தை விரிவுபடுத்த முயல்வதையும் கிண்டல் செய்யும் நோக்கில் இந்தச் சித்திரம் வரையப்பட்டிருந்தது.
இந்தக் கேலிச்சித்திரம் வெளியான உடனே இணையவாசிகள் மற்றும் இந்தியத் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதற்கு மிக முக்கியக் காரணம், 'பாம்பாட்டி' என்ற குறியீட்டிற்குப் பின்னால் இருக்கும் மேற்கத்திய நாடுகளின் பழைமைவாத, இனவெறி சார்ந்த பார்வையாகும். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்தே இந்தியாவை ஏழைகள் வாழும், மூடநம்பிக்கைகள் நிறைந்த, பாம்பாட்டிகளும் புனித யானைகளும் மட்டுமே நடமாடும் ஒரு பின்தங்கிய நாடாகக் காட்டுவதை, மேற்கத்திய ஊடகங்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
தற்கால நவீன உலகில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா உலகிற்கே சவால் விடும் அளவிற்கு வளர்ந்த பிறகும், இத்தகைய பழமையான குறியீடுகளைப் பயன்படுத்துவது திட்டமிட்ட அந்நியர் வெறுப்புமற்றும் இனவெறியின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் பலரும் சுட்டிக்காட்டினர்.

இதற்கு முன்பும் அக்டோபர் 2022-ல் ஸ்பெயின் நாட்டின் 'லா வாங்குவார்டியா' நாளிதழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதும்போது இதேபோன்ற பாம்பாட்டிப் படத்தை வெளியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு ஆளானது. 2014-ல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன. அப்போது அதற்குப் பதிலடி கொடுத்த மோடி, "இந்தியா இப்போது பாம்புகளை வைத்து வித்தை காட்டவில்லை, கணினி மவுஸைக் கொண்டு உலகையே மாயாஜாலம் செய்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் மோடி தனது நார்வே பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தருவாயில், இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை எட்டியது. நார்வே செய்தித்தாள் வர்ணனையாளரான 'ஹெல் லிங்' என்பவர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்ட பிரதமர் மோடி, அந்த இடத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் அதில் இருந்தன.
மேலும், அந்த வீடியோவில் அதில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை, நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. உலகின் மிகவும் சுதந்திரமான பத்திரிகைகளிடமிருந்து நீங்கள் ஏன் சில கேள்விகளை எதிர்கொள்ளக் கூடாது?" என்று அந்தப் பத்திரிகையாளர் உரத்த குரலில் கத்துவது பதிவாகியிருந்தது.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index) நார்வே நாடு முதலிடத்தில் இருக்கும் வேளையில், இந்தியா 154-வது இடத்திலிருந்து 157-வது இடத்திற்குச் சரிந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, 'இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறதே...' எனக் குறிப்பிட்டிருந்தார். நார்வே ஊடகங்கள் இந்தச் சம்பவத்தை விவாதப் பொருளாக்கின. இந்தக் காணொளி இணையத்திலும் இந்திய செய்தி ஊடகங்களிலும் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதங்களை வடித்தது.
பத்திரிகையாளரின் இந்தப் பதிவு மற்றும் கேலிச்சித்திர விவகாரம், பின்னர் நார்வேயில் இருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு வரை வந்துநின்றது. அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஹெல் லிங், ``இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக ஏற்கெனவே நார்வே அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. பிறகு ஏன் இந்தியாவை ஒரு கூட்டாளியாக நம்ப வேண்டும்" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நார்வேக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ், ``இந்தியாவை ஏன் உலக நாடுகள் நம்பலாம் என்றால், இந்தியாவின் பன்முகத்தன்மை, உலகின் மிகப்பெரிய ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் அதன் நீண்டகால நாகரிக வரலாற்றை ஆதாரமாக எடுத்துக்கொள்ளுங்கள்." என விரிவாக விளக்கமளித்தார்.
இந்த ஒட்டுமொத்தச் சம்பவமும் இந்தியா இன்னும் பழைமையில் நிலைத்து நிற்பதுபோன்ற பிம்பத்தின் எதிரொலியாகவே பார்க்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதேநேரம் ஊடக சித்தரிப்புப் படம் 'வளர்ந்துவரும் இந்தியாவை மீண்டும் ஒரு கட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கும் சில மேற்கத்திய ஊடகங்களின் மனநிலையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது எனவும் தெரிவித்திருக்கின்றனர்.














