AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில...
கே.டி.ராகவனுக்கு விரைவில் தேசியப் பதவி? டு செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட்! | கழுகார் அப்டேட்ஸ்
தமிழக காங்கிரஸில் புதிய மாவட்டத் தலைவர் நியமனங்களில், வைட்டமின் ‘ப’ சகட்டுமேனிக்கு விளையாடுகிறதாம். தமிழக காங்கிரஸ், அமைப்புரீதியாக 74 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில், ‘பல மாவட்டத் தலைவர்கள் சரியாக வேலை செய்வதில்லை’ என டெல்லித் தலைமைக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து, புதிய மாவட்டத் தலைவர்களை நியமிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்து, நேர்காணலை நடத்திவருகின்றனர்.

ஆனால், மாவட்டத் தலைவருக்கான நேர்காணலுக்கு வரும் நிர்வாகிகளிடம், “குழுவிடம் நீங்கள் என்னதான் தம் கட்டிப் பேசினாலும் வேலைக்கு ஆகாது... அதுக்கு வேறு வழியிருக்கிறது...” என்று ரூட் போடுகிறார்களாம் நான்கு புள்ளிகள். மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பெயரைச் சொல்லி, மாவட்டத்தைப் பொறுத்து 50 லட்டுகள் வரையில் வசூல் தூள் பறக்கிறதாம்!
தமிழக பா.ஜ.க-வில், அணிப் பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளராக இருக்கும் கே.டி.ராகவனுக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வரப்போகிறதாம். ‘கும்பகோணத்தில், 30 அணிப் பிரிவு நிர்வாகிகளின் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி முடித்த வகையில், ராகவன் குறித்து பாசிட்டிவ் ரிப்போர்ட்டை டெல்லிக்குக் கொடுத்திருக்கிறாராம் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ்.

ஜே.பி.நட்டாவுக்கு மாற்றாக, தேசியத் தலைவர் பதவிக்குப் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்ட பிறகு, தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்படவிருக்கின்றனர். அந்த வகையில், ராகவனுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படவிருக்கிறது’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ராகவனுக்காகச் சிபாரிசு செய்வதால், விரைவிலேயே பலன் கிடைக்கும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் கமலாலய சீனியர்கள்!
‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், 175 தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறுதியாக சென்னை மண்டலத்தில் தனது பயணத்தை நிறைவுசெய்யத் திட்டமிட்டிருக்கிறார். சுற்றுப்பயணத்தின் நிறைவுப்பகுதி என்பதால், சென்னையிலுள்ள தொகுதிகளில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி. அதோடு நின்றாலும் பரவாயில்லை... சரியாகக் கூட்டத்தைக் கூட்ட முடியாத நிர்வாகிகளைக் கையோடு மாற்றவும் முடிவெடுத்திருக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட சீனியர்கள், ‘தேர்தல் நெருங்கும் வேளையில், மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என்பது விஷப்பரீட்சை போன்றது...’ என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள்.

பதிலுக்கு, ‘ஒரு கூட்டத்துக்குக்கூட ஆட்களைத் திரட்ட முடியாதவர்களை வைத்துக்கொண்டு, தேர்தலைச் சந்திப்பதுதான் விஷப்பரீட்சை... சில அதிரடிகளை மேற்கொண்டால்தான், சென்னை அ.தி.மு.க-வை மீட்க முடியும்’ என்றிருக்கிறாராம் எடப்பாடி.
இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, ‘பதவியை எப்படியாவது தக்கவைக்க வேண்டுமே... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... கூட்டத்தைக் கூட்டியே ஆக வேண்டும்’ என்று உதறலில் இருக்கிறார்களாம் சென்னை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில், வீரபாண்டி தொகுதி நிர்வாகிகளைச் சந்தித்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது, ‘மல்லூர் பேரூர் செயலாளர் பதவி ஏன் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது..?’ என்று மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்திடம் டென்ஷனாகியிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு, ‘பொறுப்பாளர் போட்டிருக்கிறோம்... விரைவிலேயே பேரூர் செயலாளர் போட்டுவிடுகிறோம் தலைவரே...’ என்றிருக்கிறார் மா.செ.

உண்மையில், “அங்கு, பா.ம.க-விலிருந்து ஒருவரை தி.மு.க-வுக்கு அழைத்துவரத் தீவிரமாக முயற்சி நடக்கிறது. அவருக்காகவே, நியமனத்தை நிறுத்திவைத்திருக்கிறார் மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு. இதற்கு மா.செ-வும் உடந்தை. சேலத்தில், தி.மு.க கோட்டையாக இருந்த வீரபாண்டி தொகுதியிலேயே, மாற்றுக்கட்சியிலிருந்து ஒருவரை அழைத்துவந்து போஸ்ட்டிங் போடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. தி.மு.க-வினரை ஓரங்கட்டுகிறார்கள். இந்த விவகாரத்தை மறைத்து, விரைவிலேயே போஸ்ட்டிங் போடுகிறோம் என்று தலைவரையே ஏமாற்றுகிறார்கள்...” என்று கொதிக்கிறார்கள் சேலத்து உடன்பிறப்புகள்!
நீண்டகாலமாக அரசியலில் இருக்கும் செங்கோட்டையனுக்கு, கட்சி பேதமின்றி பல்வேறு தலைவர்களும் நெருக்கமாக இருக்கின்றனர். அதை த.வெ.க-வுக்குச் சாதகமாக்கும் வகையில், செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தில். அதாவது, ‘அ.தி.மு.க தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் சீனியர் நிர்வாகிகளிடம் பேசி, அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும்’ என்பதுதான் அந்தப் புது அசைன்மென்ட்டாம். அதற்கான வேலைகளைத் தனது அ.தி.மு.க நண்பர்களிடமிருந்து செய்யத் தொடங்கிவிட்டாராம் செங்கோட்டையன்.

ஆனால், எதிர்பார்த்த ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லையாம். ஏனென்றால், தன்னிடம் பேசும் ஆட்களுக்கு என்ன உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லாததால்தான், அசைன்மென்ட்டில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். “இது தொடர்பாகத் தலைமையில் உள்ளவர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு, அசைன்மென்ட்டைத் தீவிரப்படுத்தவே சென்னைக்குக் கிளம்பி வந்திருக்கிறார் செங்கோட்டையன். இவையெல்லாம் த.வெ.க-வுக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள் பனையூர்ப் புள்ளிகள்!

















