``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓ...
சக்கர நாற்காலியில் வந்த பிரதிகா ராவலுக்கு மெடல் வழங்காதது ஏன்? ஐசிசி விதிமுறைகள் கூறுவது என்ன?
மகளிர் கிரிக்கெட்டில் அரை நூற்றாண்டு காலமாக இந்தியாவின் கனவாக மட்டுமே இருந்த உலகக் கோப்பை நேற்று முன்தினம் நனவானது.
தென்னாப்பிரிக்காவும், இந்தியாவும் தங்களின் முதல் உலகக் கோப்பையை ஏந்த நவி மும்பையில் மோதின.
இதில், ஷபாலி வர்மா (87 ரன்கள், 2 விக்கெட்டுகள்), தீப்தி சர்மா (58 ரன்கள், 5 விக்கெட்டுகள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.
இந்தியா கோப்பை வென்றது முழுக்க முழுக்க கூட்டு முயற்சி என்றாலும் அதில் முக்கியமானவர் பிரதிகா ராவல்.

லீக் சுற்றில் தனது முதல் இரு போட்டிகளில் வென்ற இந்தியா அதன்பிறகு ஹாட்ரிக் தோல்வியைப் பதிவுசெய்ததால் அரையிறுதிக்கு முன்னேறுவதே கடும் சிக்கலாகிப்போனது.
நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான சூழலில், அப்போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து 200+ பார்ட்னர்ஷிப் அமைத்து சதமும் அடித்து, இந்தியா வெற்றிபெற முக்கியப் பங்காற்றினார் பிரதிகா ராவல். இந்தியாவும் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
துரதிர்ஷ்டவசமாக வங்காளதேசத்துக்கெதிரான கடைசி லீக் போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்தே விலகினார் பிரதிகா ராவல்.
அவருக்கு மாற்று வீராங்கனையாகத்தான் இந்திய அணிக்குள் நுழைந்தார் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகி ஷபாலி வர்மா. ஒட்டுமொத்த அணியும் நேற்று வெற்றிக் கொண்டாட்டத்தில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தபோது பிரதிகா ராவலும் சக்கர நாற்காலியில் வந்து கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு நெகிழ்ச்சியடைந்தார்.
இறுதிப் போட்டியில் வென்றவர்களுக்கு வழங்கப்படும் மெடல் இந்திய வீராங்கனைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

ஆனால், பிரதிகா ராவலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. பிரதிகா ராவலுக்கு ஏன் மெடல் வழங்கப்படவில்லை என்று கேள்விகளும் எழுந்தன.
உண்மையில், ஐ.சி.சி விதிப்படி 15 பேர் கொண்ட வீராங்கனைகள் பட்டியலில் இருப்பவர்களுக்கு மெடல் வழங்கப்படும்.
அதன்படி, பிரதிகா ராவல் லீக் சுற்றில் ஆடியிருந்தாலும் காயத்தால் அவர் வெளியேறிய பிறகு அவருக்கு மாற்றாக ஷபாலி அணியில் இடம்பிடித்ததால் மெடல் அவருக்குச் சென்றது.

இவ்வாறு நடப்பது இது முதல்முறையல்ல, இதற்கு முன்னர் 2003-ல் ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றபோதுகூட, அந்தத் தொடரில் 4 போட்டிகளோடு காயத்தால் வெளியேறிய ஜேசன் கில்லெஸ்பிக்கும் மெடல் வழங்கப்படவில்லை.
காயமடைந்த கடைசி லீக் போட்டியில் பேட்டிங் கூட ஆட முடியாமல் பிரதிகா ராவல் தொடரிலிருந்து வெளியேறியிருந்தாலும், அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 308 ரன்களுடன் 4-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


















