RBI-ல் வேலை; இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? ரூ.3 லட்சம் வரை சம்பளம் - எப்படி...
சக மாணவிகள், பேராசிரியரின் ராகிங், பாலியல் தொல்லை: கல்லூரி மாணவி உயிரிழப்பு, காட்டிக்கொடுத்த மொபைல்!
இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 29 வயது மாணவி, மன அழுத்தம் காரணமாக லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். அவர் இறந்த பிறகுதான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. இது குறித்து இறந்துபோன மாணவியின் தந்தை போலீஸில் அளித்துள்ள புகாரில், ''என் மகள் மிகவும் மன அழுத்தம் காரணமாகத்தான் இறந்து போனார். இதற்கு அவள் படித்த கல்லூரி பேராசிரியர் அசோக்குமார்தான் காரணமாகும். பேராசிரியர் அசோக்குமார் என் மகளுக்கு மனரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்தார். அதோடு வகுப்பறையில் தொடக் கூடாத இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டார்.

இதனால் என் மகளின் மன நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தோம். ஆனால் அவர் டிசம்பர் 26ம் தேதி லூதியானா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தபோது சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். எங்கள் மகள் இறந்த அதிர்ச்சியில் இது குறித்து இதுநாள் வரை எதுவும் தெரிவிக்காமல் இருந்தோம். எங்கள் மகள் இறக்கும் முன்பு மொபைல் போனில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். அதில்தான் வகுப்பிலும், கல்லூரி வளாகத்திலும் பேராசிரியர் அநாகரிகமாக தொட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு தெரிவித்த மகளை பேராசிரியர் மிரட்டி இருக்கிறார். டிசம்பர் 20ம் தேதி நான் ஆன்லைன் மூலம் போலீஸ் மற்றும் முதல்வருக்கு புகார் செய்தேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. மாணவிகள் சிலர் ராகிங் செய்து அடித்து உதைத்து அவமானப்படுத்தியுள்ளனர். அதோடு இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக செப்டம்பர் 18ம் தேதி போலீஸில் புகார் செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.
மாணவியின் தந்தை டிசம்பர் 20ம் தேதி கொடுத்த புகாரை தொடர்ந்து போலீஸார் ராகிங் கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி அசோக் ரத்தன் கூறுகையில், ``20ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். இப்போது பேராசிரியர் சம்பந்தப்பட்டு இருப்பதால் அது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மாணவி இறப்பதற்கு முன்பு அவர் சிகிச்சை எடுத்துக்கொண்ட அனைத்து மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.


















