சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்
சமைக்க நேரமில்லை எனக் கூறிய மனைவி; அடித்துகொன்ற கணவன்; நாக்பூரில் கொடூரம்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் யாமினி.(38). இவரது கணவர் கிருஷ்ணா லால்(41). கிருஷ்ணா நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். வீட்டில் சாப்பிட நினைத்தார். ஆனால் அவரது மனைவி சமையல் செய்திருக்கவில்லை.
எனவே சமையல் செய்யும்படி தனது மனைவியிடம் கிருஷ்ணா கேட்டுக்கொண்டார். ஆனால் யாமினி டான்ஸ் கிளாஸுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். எனவே எனக்கு டான்ஸ் கிளாஸ் போகவேண்டும் என்றும், இப்போது சமையல் செய்ய நேரமில்லை என்றும் யாமினி தெரிவித்தார்.
ஏற்கனவே கிருஷ்ணா மது போதையில் இருந்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் கிருஷ்ணா தனது மனைவியைச் சரமாறியாக அடித்து உதைத்தார்.

இரண்டு குழந்தைகள் முன்னிலையில் அவர் யாமினியை கழுத்து மற்றும் அடி வயிற்றில் அடித்து உதைத்தார். இத்தாக்குதலுக்குப் பிறகு கழுத்து மற்றும் வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி தனது கணவரிடம் சொல்லி மருந்து வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டார் யாமினி.
ஆனால் மருந்து வாங்க சென்ற கிருஷ்ணா மருந்து எதுவும் வாங்காமல் வந்தார். அதற்குள் யாமினியின் அடி வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. உடனே அவரை கிருஷ்ணா மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் யாமினி இறந்து போனார்.
இதையடுத்து யாமினியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்ததில் யாமினிக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதோடு அடிவயிற்றில் குடல் சேதம் அடைந்து இருந்தது.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணாவிடம் விசாரித்து பின்னர் அவரைக் கைது செய்தனர்.



















