Iran war: புதிய Supreme Leader - யார் இந்த Mojtaba Khamenei? | Decode | Middle E...
'சாண்ட்னர் செய்த அந்த ஒரு தவறு; வெளுத்துக்கட்டிய அபிஷேக்!' - இமாலய இலக்கை எட்டிய இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முக்கியமான போட்டி என்றாலே இந்திய ரசிகர்களுக்கு எப்போதும் பதைபதைப்பாகத்தான் இருக்கும். அகமதாபாத்தில் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியும் அதே பதைபதைப்போடுதான் தொடங்கியது. ஆனால், இந்திய அணி முதலில் பேட் செய்து ஒரு பெரிய டார்கெட்டை நிர்ணயித்து அசத்தியது.

சாண்ட்னர்தான் டாஸை வென்றிருந்தார். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கத்தை மனதில் வைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஒரு நல்ல மூவை தவிர ஆட்டத்தின் பெரும்பாலான சமயங்களில் சாண்ட்னர் சொதப்பவே செய்தார். மேட் ஹென்றி முதல் ஓவரை வீசியிருந்தார்.
சாம்சன் ஒரு சிக்சரை அடித்திருந்தாரே ஒழிய அது நல்ல ஓவர்தான். அடுத்த ஓவரில் அபிஷேக்கை மனதில் வைத்து ஆப் ஸ்பின் வீசக்கூடிய க்ளென் பிலிப்ஸை கொண்டு வந்தார். இதுவும் நல்ல ஓவர். மூன்றாவது ஓவரை மீண்டும் ஹென்றிக்கு கொடுப்பார் என நினைக்கையில் டஃபிக்கு ஓவரை கொடுத்தார். அடுத்த ஓவரை பெர்குசனுக்கு கொடுத்தார். இது அபிஷேக்குக்கு ஏதுவாக அமைந்துவிட்டது. சிக்சராக பறக்கவிட்டு வெளுத்துவிட்டார்.

முதல் 4 ஓவர்களுக்கு 4 வெவ்வேறு பௌலர்களை சாண்ட்னர் ஏன் பயன்படுத்தினார் என்றே புரியவில்லை. இந்த உலகக்கோப்பையில் இப்படியொரு பௌலிங் ரொட்டேஷனை சாண்ட்னர் எந்தப் போட்டியிலும் செய்யவில்லை. சாண்ட்னர் செய்த தவறினால் அடுத்த ரவுண்ட் ஸ்பின்னர்கள் வருவதற்குள்ளேயே அபிஷேக் சூறாவளியாக சுழன்றடித்து முடித்துவிட்டார். அரைசதத்தை கடந்து இந்திய அணியின் ரன்ரேட்டையும் 15க்கு மேல் ஏற்றிவிட்டு ரச்சின் ரவீந்திராவின் பந்தில் அ வுட் ஆகினார்.
மிடில் ஓவர்களில் சாம்சனும் இஷான் கிஷனும் கைகோர்த்தனர். வீடியோ கேமில் ஈசி மோடில் ஆடுவதைப் போல நியூசிலாந்து பௌலர்களை வெளுத்தெடுத்தனர். நியூசிலாந்து அணி செய்வதறியாது நின்றது. கடைசி 5 ஓவர்களில்தான் நியூசிலாந்து கொஞ்சம் ஆட்டத்துக்குள் வந்தது. நீஸம் வீசிய 16 வது ஓவரில் சாம்சன், கிஷன், சூர்யா என மூவரும் அவுட் ஆகினர். ஒரு 16 பந்துக்கு இந்திய அணிக்கு பவுண்டரி வராமல் இருந்தது. இந்திய அணி 250 யை தொடுவது சந்தேகமாகப்பட்டது.

கடைசி ஓவரில் கேமியோ நாயகன் துபே இறங்கி வெளுத்துவிட்டார். நீஸம் வீசிய அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை துபே சேர்த்திருந்தார். விளைவாக, இந்திய அணி 255 ரன்களை எட்டியது. டி20 உலகக்கோப்பைகளின் இறுதிப்போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
இந்த இலக்கை சேஸ் செய்வது கடினம்தான். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை நாம் மறந்துவிடக்கூடாது.




















