செய்திகள் :

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' - கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

post image

அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of Caste) என்ற தனது நூலில், ``சொந்தச் சாதிக்குள்ளேயே திருமணம் முடித்துக்கொள்ளும் அமைப்புதான், இன்றளவும் 'சாதி' தப்பிப் பிழைப்பதற்குக் முதன்மைக் காரணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாதி எல்லைகள் என்பவை வெறும் சமூகப் பிரிவினையால் மட்டுமல்ல, மிக முக்கியமாகத் திருமணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமும் கடத்தப்படுகிறது. ஒரே சாதிக்குள் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற விதியைத் திணிப்பதால், சாதியமைப்பு தலைமுறை தலைமுறையாகத் தொடர்வது மட்டுமல்லாமல், அதன் மூலம், சமூகத்தில் உயர்வு, தாழ்வு, ஒதுக்குதல் உள்ளிட்ட பாகுபாடுகளைத் தக்கவைக்க முடிகிறது.

caste issues

இதற்கு நேர்மாறாக, சாதி மறுப்புத் திருமணங்கள் இந்தச் சாதியக் கட்டமைப்பையே நேரடியாக உலுக்குகின்றன. சமூக உறவுகளையும் விதிகளையும் மாற்றியமைக்கும் ஆற்றல் இந்தத் திருமணங்களுக்கு இருப்பதால்தான், இதற்கு சாதியச் சமூகம் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகிறது. அதன் உச்சக்கட்டமாகவே "சாதி ஆணவக் கொலைகள்" நிகழ்த்தப்படுகின்றன என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

இதற்கு உதாரணமாக இந்த வாரத்தில் மட்டும் நடந்த இரண்டு ஆணவப் படுகொலைகளைக் குறிப்பிடலாம்.

திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்தவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்த ராமலட்சுமி. இவர் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார். இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இவரின் குடும்பத்தினர், முற்றிலுமாக காதலைக் கைவிட கட்டாயப்படுத்திவந்தனர். ஆனாலும், காதலில் உறுதியாக இருந்த ராமலட்சுமி தன் சகோதரரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

 கொலை
கொலை

மற்றொரு சம்பவம்:-

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் அபிசெல்வி என்ற இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக, அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தபோதுதான், அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றச் செய்தி தெரியவந்தது. இந்தக் கொலைக்குப் பின்னணியிலும் காதலே முழுமுதற்காரணமாக இருந்திருக்கிறது. சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக அபிசெல்வி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரக் கொலையைச் செய்த அபி செல்வியின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் ஆகிய இருவரையும் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

இப்படி கடந்த 9 ஆண்டுகளில் (2025 வரை) 65 ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன.

இந்த இரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும், அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூகத்தின் இன்னொரு பிரிவு இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டிருப்பதும், இந்தக் கொலைகளை பாதிக்கப்பட்டவர்களின் ரத்த உறவே செய்திருக்கிறது என்பதும் 2026-லும் இந்த சமூகத்தில் சாதி எவ்வளவு ஊடுருவியிருக்கிறது என்பதற்கு சாட்சிகள். இதன் காரணமாக 'ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம்' இயற்ற வேண்டும் என்றக் கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தி.மு.க ஆட்சியில் கவின் கொலைக்குப் பிறகு வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்டக் கட்சிகள் சட்டமன்றத்தில் ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் குறித்து விவாதம் மேற்கொண்டனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், ``ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படும். அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தனிச்சட்டம் இயற்றப்படும். ஆணவப்படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் கொண்ட இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த ஆட்சி தொடரவில்லை என்பதால் அந்த ஆணையத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த செய்திகள் மௌனமாகிவிட்டன.

இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் 'ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம்' கோரிக்கை வலுத்திருக்கிறது.

ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றியதில் தமிழ்நாட்டுக்கு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது கர்நாடகா. கர்நாடகாவில் இந்தச் சட்டம் இயற்றுவதற்குக் காரணமும் இதே சாதியத்தின் ஆணவப் படுகொலைகள்தான்.

ஹுப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தில், 20 வயதான பெண் மான்யா பாட்டீல் அதே கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரான விவேகானந்த் தொட்டமணியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி மணந்தார். இந்தத் திருமணத்துக்குப் பிறகு மான்யா பாட்டீலின் தந்தை பிரகாஷ் கௌடா மற்றும் அவரது இரண்டு சகோதரர்களால், கர்பிணி மான்யா பரிதாபமாக பலியானார்.

சித்தராமையா
சித்தராமையா

இந்தப் படுகொலைக்குப் பிறகு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடக அரசு 'கௌரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம், 2026' (Eva Nammava Eva Nammava Act), சட்டத்தை நிறைவேற்றியது. கர்நாடகாவில் இயற்றப்பட்ட ஆணவக்கொலைக்கு எதிரான தனிச் சட்டம்: கர்நாடகாவில் ஆணவக் குற்றங்களுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பலமுறை விடுத்த அழைப்பினை ஏற்று, சமூக ஆர்வலர்களின் பலப் போராட்டத்தின் விளைவாகக் கர்நாடக அரசு, "திருமணத்தில் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை மற்றும் கௌரவம், பாரம்பரியத்தின் பெயரால் நடக்கும் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் தடை செய்தல் (இவ நம்மவ, இவ நம்மவ) சட்டம், 2026" என்ற சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

சாதி, மதம், சமூகம் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொரு நபருக்கும் தங்களுக்குப் பிடித்தவரைத் திருமணம் செய்துகொள்ளும் முழு சுதந்திரமும் சம உரிமையும் உள்ளது என்பதை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது.

இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

சுயவிருப்பத் திருமண உரிமை:

சாதி, மத பேதமின்றி ஒவ்வொருவருக்கும் தங்களுக்குப் பிடித்தமானவரைத் திருமணம் செய்ய முழு உரிமை உண்டு. அதைத் தடுப்பது குற்றமாகும்.

அனைத்து வகையான வன்முறைகளையும் தடுத்தல்:

கொலைகளைத் தாண்டி, கௌரவம் என்ற பெயரில் நடத்தப்படும் மிரட்டல்கள், சமூக மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்புகள் (ஊர்விலக்கம்) போன்ற உடல், மன ரீதியான அனைத்து சித்திரவதைகளும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வன்னி அரசு - VCK

அரசின் கடமைகள்:

அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வது அரசின் சட்டப்பூர்வ கடமையாக்கப்பட்டுள்ளது.

விரைவு நீதிமன்றங்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாமதமின்றி விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யத் தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

கண்காணிப்பு அமைப்புகள்: சட்டத்தை முறையாகச் செயல்படுத்தவும், குறைகளைக் களையவும் 'Eva Nammava Vedike' (இவ நம்மவ மேடை) மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்பது உள்ளிட்டவைகளை அந்தச் சட்டம் வரையறுத்திருக்கிறது.

தமிழ்நாட்டிலும் ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்றக் கோரிக்கை எழுந்திருப்பது குறித்து, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசிடம் சில தினங்களுக்கு முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்காக இப்போது இருக்கும் சட்டங்களை காட்டிலும் தனியொரு சட்டம் இயற்ற வேண்டி சூழல் உள்ளது. இந்த கோரிக்கையை வருகின்ற சட்டமன்றத் கூட்டத்தொடரில் மீண்டும் வலியுறுத்துவேன். மேலும், முதலமைச்சர் விஜய்யிடம் இது குறுத்து பேசுவதற்காக நேரம் கேட்டு இருக்கிறோம். கட்டாயம் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான தனிச்சட்டம் விசிக அமைச்சரவையில் பங்கெடுத்திருக்கும் இந்த ஆட்சியிலேயே நிறைவேறும்" என்றும் தெரிவித்து இருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதனுடன் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு செய்தியும் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ``சாதி மாறி காதலிப்பவர்களுக்கும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க காவல் நிலையங்களில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது. 

அதேப் போல சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால், ஆணவக் குற்றங்களுக்கு இலக்காகும் தம்பதிகளை தங்க வைப்பதற்கு பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதும் நீண்டகாலமாக இருக்கும் கோரிக்கைகள். எனவே, ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றக் கோரிக்கையுடன், மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்த ஆட்சியிலாவது சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படுமா?

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' - அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகப்... மேலும் பார்க்க

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க