விஜய்: 'தலைவருக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறது, ஏன்னா.!' - தவெக அருண்ராஜ்
சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி!
பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் உள்ளன.
அவ்வகையில் சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி என்னும் அற்புதத் தலம்.
விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் நோய் தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது.
இங்கு அருளும் ஈசனுக்கு பரியா மருதீஸ்வரர் என்பது திருநாமம். அது என்ன பரியா மருதீஸ்வரர்? இந்த ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம்.
கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் ஆதியில் இவருக்கு, 'பறியா மருந்தீஸ்வரர்' என்பதுவே திருநாமம்.

‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்துபவை மருந்து மற்றும் மூலிகைகள். ஆனால், பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்தாக இந்த ஈசன் திகழ்ப்வர்.
எனவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றியிருக்கிறார்கள். அதுவே காலப்போக்கில் `பரியா மருதீஸ்வரர்' என்ற திருநாமம் நிலைத்துவிட்டது என்கிறார்கள். மேலும் ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டும் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு பரியாமருதீஸ்வரர் ஆலயம். முதலில் தரிசிக்கவேண்டியது மருது விநாயகரை. கோயிலின் வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர்.
இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்துத் திருமேனிகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தல விருட்சமான மருதமரம் மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்டபத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயறனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது.
பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம்.

இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள்.
இங்கு ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள்.
திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல்கிறார்கள். முற்காலத்தில் மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்த நிலம் இது என்பதால் ஈசனுக்கு மூலிகைச் சாறு அபிஷேகம் மிகவும் விசேஷம்.
குறிப்பாக மகாசிவராத்திரியின்போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களைத் தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாக பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு.
கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார்.

இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம். (இதேபோன்று மற்றொரு நெய்நந்தித் தலமும் அந்த மாவட்டத்தில் உள்ளது)
இந்தக் கோயிலின் தீர்த்தம், சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள்.
இந்தத் தீர்த்தத்தை கர்ப்பிணிகள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.




















