'ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம்' ஊடகவியலாளர்களின் பார்வையில்...
`சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5
இன்று தொடுதிரையில் கணநேரத்தில் நாட்டு நடப்புகளை அறிகிறோம். தலைவர்கள் சமுக வலைதளம் மூலம் உடனுக்குடன் மக்களிடம் பேசுகிறார்கள். அனால் நாம் கடந்து வந்த தேர்தல் பாதை இத்தனை எளிதானதன்று! திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் இன்றும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் பா. முகிலன், தமிழக தேர்தல்களின் நினைவுச் சுவடுகள் தொடர் மூலம்!
தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் பிரசாரம் என்பது ஊடக அரங்குகளையும், டிஜிட்டல் மீடியாக்களையும், சமூக வலைத்தளங்களையுமே வெகுவாக சார்ந்துள்ளது. ஆனால், இவையெல்லாம் வருவதற்கு முன்னர், அரசியல் பிரசாரம் என்பது தலைவர்களின் மேடைப் பேச்சுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கைகள் போன்றவற்றைத் தாண்டி, பல தசாப்தங்களாக சுவர்களில்தான் வெகுவாக மேற்கொள்ளப்பட்டது.
தொலைக்காட்சி வீடுகளுக்குள் நுழைவதற்கும், கைபேசிகள் கைகளுக்குள் வருவதற்கும் முன்னர், இந்தச் சுவர்கள்தான் பலதரப்பட்ட அரசியலையும் பேசியது. அவை, அந்த நேரத்து நிகழ்கால அரசியலைப் பிரதிபலித்ததோடு மட்டுமல்ல; அதை உருவாக்கியும் வந்தன. கடை வீதிகளிலும் மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும், அமைதியாக வீற்றிருந்த சுவர்களே, அரசியல் கட்சிகளின் கருத்துகள், அடையாளங்கள், அதிகாரம் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்ற “மௌன பரப்புரையாளர்களாக” செயல்பட்டன.

1951 அக்டோபர் முதல் 1952 பிப்ரவரி வரை பல கட்டங்களாக நடைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் கட்சிகளுக்கு ஒரு பெரிய சவால் ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்ந்தனர். வாசிப்புத் திறன் குறைவு. செய்தித்தாள்களும் வானொலியும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. அந்தச் சூழலில்தான், அரசியல் கட்சிகளுக்கு சுவர்கள் ஒரு எளிய தீர்வாக மாறின.
1950களின் நடுப்பகுதியில், தமிழ்நாடு முழுவதும் சுவர் எழுத்துகள் பொதுவான காட்சியாக மாறத்தொடங்கின. அரசியல் கட்சிகள் தலைவர்களின் பெயர்கள், தேர்தல் சின்னங்கள், கட்சியின் முழக்கங்கள், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் சுருக்கமான வாசகங்கள், சுண்ணாம்பும் பிரகாசமான நிறக்கலவைகளும் கொண்டு சுவர்களில் எழுதப்பட்டன. இதைப் படிக்க யாருக்கும் அழைப்பு விடுக்கவோ விளக்கம் அளிக்கவோ தேவையில்லை. எழுதப்படும் சுவரின் உரிமையாளரிடம் மட்டும் முன்கூட்டியே அனுமதி வாங்கிக்கொள்ள வேண்டும். சில இடங்களில் அனுமதி வாங்காமலேயே எழுதிவிடுவார்கள்.
எழுதும் நபர்களின் பின்புலம் செல்வாக்குமிக்கதாக இருந்தால், சுவருக்கு உரிய வீட்டு உரிமையாளர்கள் 'வம்பு' ஏன் என வாயை மூடிக்கொண்டுவிடுவதும் உண்டு. மீறி கேட்பவர்கள், சண்டை போடத் தயாராக இருக்க வேண்டும். மேலும், எழுதப்படும் கட்சி அல்லது வேட்பாளர் நாளை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், அவர்களிடம் பகைத்துக்கொண்டு காலம் தள்ள முடியுமா என்கிற அச்சத்திலும், சுவர் உரிமையாளர்கள் எதுவும் கேட்காமல் விட்டுவிடுவார்கள்.
சில இடங்களில், குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இருக்கும் வீட்டு உரிமையாளர்கள், தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தங்கள் வீட்டுச் சுவர்களில் எழுதச் சொல்வதும் உண்டு. ஆனால், கட்சி விளம்பரங்கள் எழுதப்படும் சுவர்கள், எளிதில் அனைவரின் பார்வையை ஈர்க்கும் வகையில் அமைந்திருப்பது அவசியம்.
இவை தவிர, அரசு அலுவலகங்கள், பொதுக் கட்டடங்கள் போன்றவற்றின் சுவர்களிலும் இந்த விளம்பரங்கள் இடம்பிடிக்கும். ஆனால், முன்கூட்டியே இந்த இடத்தைப் பிடிக்க கட்சிகளுக்குள் போட்டா போட்டி நடக்கும். இந்தச் சுவர் விளம்பரங்கள் யாராலும் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்ததாக இருந்ததால், எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்குக் கூட, தலைவர்களின் படமும் சின்னமும் மனதில் பதிந்து, சம்பந்தப்பட்ட கட்சிக்கு ஆதரவான வாக்குகளைப் பெற்றுத்தர உதவின.
இந்த சுவர் எழுத்துப் பிரசாரங்களைத் திறம்படப் பயன்படுத்திக்கொண்டது திராவிட இயக்கங்கள்தான். குறிப்பாக திமுக, சுவர்களைப் பெரிதும் பயன்படுத்தியது.
சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, தமிழ் மொழி அடையாளம் போன்ற கருத்துகள், சுவர் எழுத்துகள் மூலம் மக்களிடம் சென்றடைந்தன. அதிலும் சொல்லில் சிலம்பம் ஆடிய அண்ணா, கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்களின் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்த திமுகவினருக்கு, சுவர்களில் தங்களது கருத்துகளை எழுதுவதற்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? எதுகை மோனையில் புகுந்து விளையாடினார்கள்.
1956–57 ஆம் ஆண்டுகளிலும், பின்னர் 1965 ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திலும், இந்தித் திணிப்புக்கு எதிரான வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்டன. தெருக்கள் அரசியல் பாடசாலைகளாக மாறின.
சுவர் அரசியலுக்கு வாதங்கள் தேவைப்படவில்லை. மக்களின் பார்வையில் மீண்டும் மீண்டும் தெரிந்ததால், அது நன்றாகவே வேலை செய்தது. ஒரு கட்சியின் முழக்கம் (slogan), அது தன்னை உயர்த்தியோ அல்லது எதிர்க்கட்சியை விமர்சித்தோ, எப்படி எழுதப்பட்டிருந்தாலும், ஒருமுறை பார்த்தால் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால், தினமும் வேலைக்குச் செல்லும் வழியில், கடைவீதிக்குச் செல்லும் பாதையில், குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வீதியில் தொடர்ந்து பார்த்தால், பார்க்கும் மக்களுக்கு அது முதலில் பழகி, பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இறுதியில் அவர்களின் மனதில் பதிந்தது.
இவ்வாறு சுவர்கள், கூட்டாட்சி, சமூக சமத்துவம் போன்ற சிக்கலான அரசியல் கருத்துகளை, தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றின. செய்தித்தாள்களைப் போல நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டிய அவசியமின்றி, சுவர்கள் உடனடியாக “பேசின”. அவை விளக்கவில்லை; மாறாக நேரடியாகக் கருத்தைத் திணித்தன.
சுவர் பிரசாரங்களில் தேர்தல் சின்னங்கள் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அவை மிகப் பெரிய அடையாளமாக இருந்தன. உதயசூரியன் (திமுக), கை (காங்கிரஸ்), அரிவாள்–சுத்தி (கம்யூனிஸ்ட் கட்சிகள்), பின்னர் இரட்டை இலை (அதிமுக) போன்ற சின்னங்கள் சுவர்களில் தெளிவாக வரையப்பட்டன.
1967 பிப்ரவரி மாத சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு கட்டி, திமுக ஆட்சியைப் பிடித்தபோது, அரசியல் அடையாளம் என்பதே சின்னங்களோடு ஒன்றாகிவிட்டது. வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன்பே, மக்கள் சுவர்களில் பார்த்தே கட்சிகளை அடையாளம் கண்டார்கள். அந்த வகையில் அரசியல், முதலில் காட்சியாக மாறியது. பின்னர்தான் அது வார்த்தைகளாக மாறியது.

1970களிலிருந்து, எழுத்துகளை விட போஸ்டர்கள் சுவர்களை அதிகமாக ஆளத் தொடங்கின. சுவர் எழுத்துகள் கருத்துகளைப் பரப்பினால், போஸ்டர்கள் தலைவர்களின் உருவத்தை உருவாக்கின.1972 அக்டோபரில் எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கிய பின்னர் வெளியான 'உழைக்கும் கரங்கள்', மீனவ நண்பன்', நேற்று இன்று நாளை, 'சிரித்து வாழவேண்டும்', 'இதயக்கனி', 'பல்லாண்டு வாழ்க', 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' போன்ற திரைப்படங்களின் காட்சி அமைப்புகளும் பாடல்களும் எம்.ஜி.ஆரையும் அதிமுகவையும் உயர்த்திப் பிடிப்பதாகவும், மறைமுகமாக திமுகவை சவாலுக்கு அழைப்பதாகவும் இருந்தன.
இதில் 'உழைக்கும் கரங்கள்', 'மீனவ நண்பன்', 'இதயக்கனி' போன்ற படங்களெல்லாம் எம்.ஜி.ஆரை ஏழைகளைக் காப்பாற்ற வந்த இரட்சகராகவும், மீட்பராகவும், அள்ளி அள்ளி வழங்கும் கொடை வள்ளலாகவும், நேர்மையானவராகவும் காட்டின. மீனவ நண்பன்' படத்தில் இடம்பெற்ற " நேருக்கே நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்..." என்கிற பாடல் கருணாநிதியை 'அட்டாக்' செய்யும் வகையில் இருப்பதாக கூறி, அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தங்களுக்குள் மகிழ்ந்துகொண்டனர்.அதேபோன்று 'நேற்று இன்று நாளை' படத்தில் இடம்பெற்ற "தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று..." என்கிற பாடலில் வரும்
"தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்"
என்கிற வரிகள், திமுகவினரை நையாண்டி செய்ய எழுதப்பட்டதாகவும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்போது பேசியதுண்டு.

மேலும், 'உழைக்கும் கரங்கள்' படத்தில் இடம்பெற்ற " நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே..." என்கிற பாடலில் வரும்,
"விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது"
என்கிற வரிகளும், அடுத்து எம்.ஜி.ஆர்தான் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார் என்பதற்கு கட்டியம் கூறுவதாகவும் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக, 'இதயக்கனி' படத்தில் இடம்பெற்ற " நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற..." என்கிற பாடலில், அதில் இடம் பிடித்த
"என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே"
என்கிற கோரஸ் வரிகளும், அப்பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் பாடுவதாக வரும்
"உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்"
போன்ற வரிகளெல்லாம், எம்.ஜி.ஆர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தவை.
அந்த வகையில், எம்.ஜி.ஆரின் இமேஜை உயர்த்திப் பிடித்த இத்தகைய படங்களின் போஸ்டர்களும் அவரது அரசியல் பிரசாரத்துக்கு கைகொடுத்து வந்தன. இது, நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற வாக்காளர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவும் இதே உத்தியைப் பின்பற்றினார். போஸ்டர்கள் அவரை அடுத்த வலிமை மிக்க தலைவராக காட்டும் கருவியாக மாறின.
இவ்வாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் எப்போதும் மக்களுக்கு அருகில் இருப்பவர்களாக சுவர்கள் மாற்றின. தெருக்கள், சந்தைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் தலைவர்களின் முகங்கள் தொடர்ந்து மக்களின் கண்பார்வையில் பதிந்துகொண்டே இருந்தன.
பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் 1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை அமலில் இருந்த நெருக்கடி நிலை காலத்தில், பத்திரிகைகள் கடும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவது மிகவும் கடினமானதாக மாறியது. சுவர் எழுத்துகளும் கண்காணிக்கப்பட்டன. ஆனாலும், மறைமுக வாசகங்கள், சின்னங்கள், குறியீட்டு சொற்கள் சுவர்களில் தோன்றின. நேரடியாகச் சொல்ல முடியாத கருத்துகள், சுவர் எழுத்துகள் வழியாக சொல்லப்பட்டன. சில இடங்களில், சுவர்களின் வெறுமையும் அரசின் அடக்குமுறையை உணர்த்தும் அரசியல் செய்தியாக மாறியது. நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும், சுவர் அரசியல் மீண்டும் வேகமடைந்து, அரசியல் எதிர்ப்பையும் விடுதலையையும் வெளிப்படுத்தியது.

தொடர்ந்து 1980களிலும் 1990களிலும், சுவர்கள் அரசியலுக்கான களமாக மாறின. ஒரு சுவரைக் கைப்பற்றுவது என்பது, ஒரு கட்சி அந்தப் பகுதியில் தங்களின் இருப்பை உறுதி செய்வது போல இருந்தது. ஏற்கெனவே இருந்த முழக்கத்தை அழித்து, புதிய முழக்கத்தை எழுதுவது என்பது எதிர்க்கட்சிக்கு சவால் விடுவது போன்று கருதப்பட்டது. மேற்கொண்டு அந்தச் சுவரில் வேறு யாரும் எதுவும் எழுதிவிடாதவாறு, சம்பந்தப்பட்ட கட்சித் தொண்டர்கள் சுவர்களைக் கண்காணித்துக் காத்தனர். மீறி ஏதாவது எழுதப்பட்டாலும், இரவோடு இரவாக அதை அழித்துவிட்டு, மீண்டும் தங்களது கட்சிக்கான முழக்கங்களை அந்தச் சுவர்களில் எழுதி வைத்தனர். அந்த வகையில், சுவர்கள் ஒரு அரசியல் சொத்தாக பார்க்கப்பட்டன. பல இடங்களில், எந்தக் கட்சியின் முழக்கங்கள் அதிக நாட்கள் சுவர்களில் நீடித்தன என்பதைப் பொறுத்தே, அந்தப் பகுதி யாருடைய அல்லது எந்தக் கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதற்கான அளவுகோலாக மதிப்பிடப்பட்டது.
இந்தப் போட்டிகள், பல நேரங்களில் இருதரப்பு மோதல்களையும் பதற்றங்களையும் உருவாக்கின. பின்னாளில், இந்தச் சுவர் அரசியலின் கடுமையான பக்கத்தை சினிமா வலுவாகப் பதிவு செய்தது.

சுவர் அரசியலைப் பேசிய 'மெட்ராஸ்' திரைப்படம் (2014)
கார்த்தி நடிப்பில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம், சுவர் அரசியலை நேரடியாகப் பேசிய முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. இந்த படம் 2014 செப்டம்பரில் வெளியானது. கதை வடசென்னைப் பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பை மையமாகக் கொண்டது. அதன் மையத்தில் இருப்பது ஒரு சுவர்.
அந்தச் சுவரில் எந்தக் கட்சியின் போஸ்டர்கள், முழக்கங்கள் இருப்பது என்பதே அந்தப் பகுதியின் அரசியல் ஆதிக்கத்தை தீர்மானிக்கிறது. ஒரு சாதாரண போஸ்டர் போட்டியாகத் தொடங்கும் மோதல், பின்னர் வன்முறைக்கும் கொலைக்கும் சென்று முடிகிறது.
இந்தக் கதை கற்பனை அல்ல. தமிழகத்தின் பல்வேறு நகர்ப்புறங்களில் நடக்கும் உண்மையான அரசியல் அனுபவங்களிலிருந்து உருவானது. உள்ளாட்சி அரசியல், வீட்டு உரிமை, மரியாதை போன்றவை, இங்கே சுவர்களின் வழியாகவே பேசப்படுகின்றன. அந்த வகையில், 'மெட்ராஸ்' படத்தில் சுவர்கள் அலங்காரத்துக்கானதாக அல்லாமல் அதிகாரத்துக்கான கருவிகள் என்பதை அப்பட்டமாக உணர்த்தியது.
முக்கியமாக, சாதாரண மக்கள் எப்படி அரசியல் உணர்வு பெறுகிறார்கள் என்பதையும் இந்தப் படம் காட்டியது. ஒரு வகையில் சொல்லப்போனால் புத்தக வாசிப்பு, மேடைப் பேச்சுகளைத் தாண்டி, சாதி, வர்க்கம், ஒதுக்கி வைப்பது போன்ற அநீதியை நேரில் அனுபவிப்பதன் வழியாகவே மக்கள் அரசியல் உணர்வு பெறுகிறார்கள் என்பதை உணர்த்தியது.
பா.ரஞ்சித் பல நேர்காணல்களில், " 'மெட்ராஸ்' என்பது மிகைப்படுத்தப்பட்ட கதை அல்ல; சமூக சமத்துவமின்மை மற்றும் உள்ளூர் அதிகாரப் போராட்டங்களின் பிரதிபலிப்பு" என்றே கூறியுள்ளார். அந்த வகையில், இந்தப் படம் சுவர் அரசியல் நீண்ட காலமாக சொல்லி வந்த உண்மைகளை உறுதிப்படுத்தியது என்றே கூறவேண்டும்.
சுவர்கள் எளிதாகக் கடக்க முடியாதவை. கவனத்துக்கு உரிய ஓர் இடத்தில் இருந்தாலே போதும். அதில் காணப்படும் எழுத்துகளோ அல்லது சின்னமோ அல்லது தலைவர்களின் படமோ, எதுவானாலும் சொல்ல வந்த விஷயத்தை மக்களிடத்தில் எளிதில் கடத்திவிடும். அதற்குப் பெரிய அளவில் வாசிப்புத் திறனோ அல்லது தொழில்நுட்ப அறிவோ தேவையில்லை. அதனால்தான், சுவர் அரசியல், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரையும் ஒரே நேரத்தில் சென்றடைந்தது.
திரைகளில் அரசியல் தோன்றுவதற்கு முன்பே, அது சுவர்களில் வாழ்ந்தது. இன்றும், அது முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஏனெனில் அதிகாரம், எப்போதும் கண்ணுக்குப் புலப்படும் இடத்தையே தேடும். இன்றைய இணையதள அல்காரிதங்கள் (Algorithms) அரசியல் நினைவுகளை வடிவமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, சுவர்கள் மக்களின் மனதில் அரசியலைப் பதித்துவிட்டன.
இன்றும், தேர்தல் நெருங்கும்போது புதிதாக எழுதப்படும் சுவர் எழுத்துகள், அந்த நீண்ட அரசியல் மரபை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றன.!
















