AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில...
செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் தவெகவில் இணைந்தார்.
அந்த பரபரப்பு ஓய்வதற்குள் கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்த சின்னசாமி நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் அடுத்தடுத்து இரண்டு கொங்கு மண்டல சீனியர் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மண்டலம் அதிமுக மிகவும் வலுவாக உள்ள பகுதி. 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்வதற்கு கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு தான் காரணம்.
2026 சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்தில் முழுவதுமாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருகிறார்கள்.

ஆனால் தென் மாவட்டங்களை தொடர்ந்து கொங்கு பகுதி அதிமுக சீனியர்கள் திமுக, தவெகவுக்கு தாவுவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக, பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.
கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, வேலுமணியுடன் நெருக்கமாக இருந்த செந்தில் கார்த்திகேயன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர்.
இதில் ராஜ்குமார் தற்போது கோவை எம்பியாக இருக்கிறார். ஆளுங்கட்சி, செல்வாக்கான பதவி, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதால் திமுகவில் இணைந்து வருகிறார்கள்.

ஏற்கெனவே 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தப் பகுதியில் அதிமுக படு தோல்வியடைந்துள்ளது. அதனால் சீனியர்களின் கட்சி தாவல்கள் அதிமுக தொண்டர்கள், பொது மக்களிடம் அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை குறைக்கும். என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும்.

சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்தது எல்லாம் கடந்த காலம். சின்னசாமி ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைந்து அண்ணா தொழிற்சங்க பதவி போன பிறகு அவர் அமமுக, பாஜக கட்சிகளில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார்.
அவர் மீதிருந்த ஒரு மோசடி வழக்கை வாபஸ் வாங்குவதற்காக மீண்டும் அதிமுகவில் இணைந்து சிறிது காலம் இருந்தார். தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறபட்டுவிட்டதால் சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார்.
அவர் கடைசியாக எந்தக் கட்சியில் இருந்தார் என்று யாருக்குமே தெரியாதளவுக்கு தான் அவரின் செயல்பாடுகள் இருந்தன.
சின்னசாமி திமுக சென்றிருப்பதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததால் அவரை தங்கள் கட்சியில் இழுக்க திமுக முயற்சி செய்தனர். அது நடைபெறவில்லை என்பதால் திமுக சின்னசாமியை இணைத்து அவர்களின் தலைமையை சமாளித்துள்ளனர்.” என்றனர்.

















