சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னை-சிங்கப்பூா் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதை தொடா்ந்து, விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
சென்னை விமானநிலையத்திலிருந்து 167 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.45-க்கு, புறப்பட தயாராக இருந்தது.
அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்த விமானி இதுகுறித்து விமானி தகவல் தெரிவித்ததை தொடா்ந்து தொழில்நுட்ப வல்லுநா்கள், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறை நீண்ட நேர போராட்டத்துக்கு பின் சரி செய்தனா்.
இதையடுத்து அதிகாலை 2.30 மணிக்கு தாமதமாக விமானம் சிங்கப்பூா் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் புறப்பட்டு சென்று நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென, மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதை கவனித்த விமானி உடனடியாக இதுகுறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவுபடி விமானம் சென்னை விமானநிலையத்தில் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கிய விமான நிறுவன ஊழியா்கள் அவா்களை, ஓய்வறைகளில் தங்க வைத்ததோடு அவ்விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.
ஆனால் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக்கோளாறை சரிசெய்ய முடியவில்லை. எனவே மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரையும் வெள்ளிக்கிழமை காலை 7.30-க்கு சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தனா். இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.