சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை - தி.மு.க வழக்கறிஞர் கைது!
சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் குடும்பத்துடன் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரின் அம்மா, தமிழக காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக வேலை செய்கிறார். 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, கடந்த சில ஆண்டுகளாக டான்ஸ் கிளாஸிக்கு சென்று வருகிறார். அங்குள்ளவர்கள் சிறுமிக்கு குட் டச், பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அப்போதுதான் சிறுமி, தன்னுடைய உறவினர் ஒருவர், பேட் டச் செய்த தகவலை டான்ஸ் கிளாஸ் ஆசிரியையிடம் கூறியிருக்கிறார். உடனே அவர்கள், சிறுமியின் பெற்றோரை அழைத்து தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், என்ன நடந்தது என விசாரித்தனர். அப்போது கடந்த 5 ஆண்டுகளாக சிறுமியின் உறவினரும் தி.மு.க வழக்கறிஞர் பிரிவில் அமைப்பாளராக இருக்கும் பரத் என்பவர் தன்னை பேட் டச் செய்த தகவலை சிறுமி கூறியிருக்கிறார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சிறுமியிடம் விசாரித்தனர். சிறுமி அளித்த தகவலின்படி அவரின் உறவினரான வழக்கறிஞர் பரத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என கூறினார். இருப்பினும் சிறுமி, நடன பள்ளி ஆசிரியை, சிறுமியின் பெற்றோர் ஆகியோர் கொடுத்த தகவலின்படி வழக்கறிஞர் பரத் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை கைதுசெய்தனர்.




















