செய்திகள் :

சென்னை மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்: செல்வ வளம் தரும் வெள்ளிக்கிழமை வில்வார்ச்சனை!

post image

பேயாழ்வார் முதலாழ்வார்களில் ஒருவர். மகா விஷ்ணுவின் வாளின் அவதாரமாகக் கருதப்படும் பேயாழ்வாரின் அவதாரத் தலம் சென்னை மயிலாப்பூர். அப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் அமைந்திருக்கிறது, ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில்.

சென்னையின் மையமான மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

கிழக்கு நோக்கிய ஐந்துநிலை கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள் நுழைந்தால், கருடாழ்வாரும் துவஜ ஸ்தம்பமும் நமக்குக் காட்சி அருள்கிறார்கள். பெரிய திருவடியை வணங்கி முகப்பு மண்டபத்துக்குள் நுழைந்தால், மண்டபத்தின் வலதுபுறம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, லட்சுமணன், சீதை, அனுமத் சமேதராகக் காட்சியருள்கிறார். அடுத்ததாகப் பேயாழ்வாரின் சந்நிதி. இங்கு பேயாழ்வார் கூப்பிய கரங்களோடு காட்சி கொடுக்கிறார்.

மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்

இத்தலம் குறித்துப் பேசும்போது பேயாழ்வாரின் அவதார மகிமைகளைப் பேசாமல் செல்ல முடியாது. பேயாழ்வார் பெருமாளின் வாளாக இருந்தபோது ஒரு நாள் புருஷ ரூபம் கொண்டு தனக்கு மெய்ஞ்ஞான உபதேசம் வேண்டுமென்று மகாலட்சுமித் தாயாரை வேண்டிக்கொண்டார்.

பெருமாளுக்குக் கைங்கர்யமும் திருவாராதனமும் செய்வதற்கு மேலான மெய்ஞ்ஞானம் இல்லை. இதை உணர்த்தத் திருவுளம் கொண்டார் தாயார். ஆகவே, “நீர் பூலோகத்தில் மயூரபுரியில் அவதரித்துப் பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து வாரும். தக்க தருணத்தில் நான் அங்கு தோன்றி உமக்கு மெய்ப்பொருளை உபதேசிப்பேன்” என்று வாக்குக் கொடுத்தார்.

அதன்படியே, மயூரபுரியில் இருக்கும் கைரவணி தீர்த்தத்தில் அல்லிமலர்களுக்கு இடையே, ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அவதரித்தார் பேயாழ்வார்.

தான் சொன்னபடியே தாயாரும், அந்தத் தீர்த்தத்தில் ஓர் ஆம்பல் மலரில் அவதரித்தார். மயூரபுரியில் அவதரித்ததால் தாயாருக்கு, 'மயூரவல்லி' என்ற திருநாமம் ஏற்பட்டது. அவரை பிருகு முனிவர் கண்டு வளர்த்தார். ஞானத்திலும் தேஜஸிலும் வளர்ந்து வந்த தாயாரை அணுகி பேயாழ்வார் உபதேசம் கேட்டார்.

சகல ஞானங்களையும் அவருக்கு உபதேசித்த தாயார், பெருமாள் கைங்கர்யமே மெய்ஞ்ஞானம் என்றும், பெருமாளுக்குத் திருவாராதனம் செய்து முக்தி பெறுமாறும் உபதேசித்தார்.

அதன்படி, பேயாழ்வாரும்... துளசிக்காடாக இருந்த திருவல்லிக்கேணிக்கும், மயூரபுரி என அழைக்கப்பட்ட மயிலாப்பூருக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த கைரவணி ஓடையில் தினமும் பயணித்து பெருமாள் தரிசனம் செய்ததோடு திருவாராதனமும் செய்துவந்தார். இரு தலங்களும் அவருக்கு வேறுவேறல்ல.

‘தேனமர் சோலை மாட மாமயிலை திருவல்லிக்கேணி’ என்றும் ‘நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்’ என்றும், இரண்டு தலங்களையும் இணைத்தே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்
மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோயில்

இத்தலத்தில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் கொண்ட நிகழ்வும் அற்புதமானது. கேசி என்னும் அரக்கனை அழிக்க பிருகு மகரிஷியின் யாகத்தில் தோன்றியவர் இந்தப் பெருமாள். பெருமாள் தோன்றும்போது சுருள்சுருளான கேசத்தோடு எழிலோடு தோன்றியதால் கேசவன் என்று பெயர்பெற்றார்.

அரக்கனை அழித்த பின்பு, மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மயூரவல்லித் தாயாரைக் கரம்பிடித்து அந்தத் தலத்திலேயே கோயில்கொண்டார் பெருமாள் என்கிறது தலபுராணம்.

இங்கு உள்ள சந்திரபுஷ்கரணி ருண, ரோக நிவாரணம் தரும் தீர்த்தம். குருவின் சாபத்தால் தனக்கு ஏற்பட்ட தீவினைகள் நீங்கவேண்டி, சந்திரன் இந்தத் தலத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தார்.

பெருமாளும் மனமிரங்கி, 'கங்கை முதலான தீர்த்தங்களில் நீராட சந்திரனின் பாபம் தொலையும்' என்று சொல்லி, சந்திரனின் துயர் தீர்க்கத் திருவுளம் கொண்டு, அங்கிருந்த குளத்திலேயே கங்கை முதலான புண்ணிய நதிகளையும் எழுந்தருளக் கட்டளையிட்டார். நதிகளும் அங்கு எழுந்தருள, சந்திரன் அதில் நீராடித் தன் பாபம் தீர்த்தான்.

அதன்பின் பெருமாள் அந்த நதிகளிடம், அந்தத் தீர்த்தத்தில் நித்திய வாசம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அந்தத் தீர்த்தம் சர்வதீர்த்தம் என்றும் சந்திரக்குளம் என்றும் பெயர் பெற்றது. சந்திரக்குளமே நாளடைவில் மாறி சித்திரக் குளம் என்றானது.

இத்தலத்தில் ஸ்ரீகேசவப் பெருமாளின் திருமுகம் அனுதினமும் புதியதோர் உணர்ச்சி பாவத்தோடு தோன்றும் என்கின்றனர் பக்தர்கள். நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, ஒரு கரத்தால் அருள்பாலித்து மறுகரத்தைத் தன் தொடைமீது நிறுத்திக் கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார் கேசவன். கண்ணாரக் கண்டு அவரைச் சேவித்துப் பின் கருவறையிலிருந்து வெளியே வந்தால், தாயாரின் சந்நிதி.

மயூரவல்லித் தாயாரின் சந்நிதியும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. அன்னை மேலிரு கரங்களில் மலர்கள் தாங்கியும் கீழிரு கரங்களில் வலக்கரத்தில் அபயஹஸ்தம் காட்டியும், ‘தன் திருவடிகளில் சரணடைந்தால் சகலமும் அருள்வேன்’ என்பதுபோல இடக்கரத்தால் தன் திருவடியைக் காட்டியும் அமர்ந்திருக்கிறாள்.

இந்தத் தலம் தாயார் பேயாழ்வாருக்கு உபதேசித்த தலம் என்பதால், இங்கு அன்னையை வணங்குபவர்களுக்கு ஞானம் ஸித்திக்கும். இங்கு தாயார் சந்நிதியின் கதவுகளிலும், துவாரபாலகர்களைச் சுற்றியிருக்கும் கதவுகளிலும் சிறு சிறு மணிகள் தொங்குகின்றன. இங்கு வரும் பக்தர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த மணிகளைக் கட்டுகிறார்கள்.

ஆதிகேசவபெருமாள் கோயில் வில்வார்ச்சனை
ஆதிகேசவபெருமாள் கோயில் வில்வார்ச்சனை

மேலும், இங்கு அன்னைக்கு வில்வார்ச்சனை மிகவும் விசேஷம். பிரதி வெள்ளிக்கிழமை ஆலயத்தில் அன்னைக்கு, ஸ்ரீசூக்தம் முழங்க வில்வார்ச்சனை நடைபெறுகிறது.

இங்கு தாயார் கேட்ட வரம் அருளும் வரப்பிரசாதியாக இருக்கிறார். நெய்தீபம் ஏற்றி தாயாரின் சந்நிதியை 12 முறை வலம் வந்தால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது கண்கூடு.

மேலும், ஒவ்வொரு வெள்ளியன்றும் காலை ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்துகொள்பவர்களுக்கு, கடன் தொல்லைகள் நீங்கி செல்வவளம் சேரும். அதற்கு வாரம்தோறும் வந்து சங்கல்பித்துக் கொள்ளும் பக்தர்களே சாட்சி என்கிறார்கள்.

அகரம் ஸ்ரீ அஞ்சேல் தசாவதார பெருமாள்: பித்ரு சாபம் தீரும்; சுபங்கள் கூடிவரும்! | திருநெல்வேலி

பகவான் விஷ்ணு தன் பக்தர்களைக் காக்க நான்கு யுகங்களிலும் ஏராளமான அவதாரங்களை எடுத்தார். அவற்றில் தசாவதாரங்கள் புகழ்பெற்றன. அப்படிப்பட்ட அவதாரத் தலங்களைச் சென்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. பத்து அவ... மேலும் பார்க்க

சிவகங்கை: குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்; பேசாதவனைப் பேசவைத்த அற்புதம்!

5குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுவே சான்றோர் கூற்று. அப்படி முருகன் கோயில்கொண்ட மலைத்தலங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பும் புராணப் பெருமையும் உண்டு. அப்படிக் குமரன் அருளும் அ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை தலைச்சங்காடு நாண்மதியப்பெருமாள்: பிறைசூடிய பிரானாக பெருமாள் காட்சி கொடுக்கும் திருத்தலம்

ஈசனை வர்ணிக்கும்போது அவரைப் பிறைசூடி என்பார்கள் அடியார்கள். அதற்கேற்ப அவரின் சடையில் பிறைச்சந்திரன் இருப்பதாக வேதங்களும் உபநிடதங்களும் போற்றுகின்றன. எனவே அவருக்கு சந்திரமௌலி என்கிற திருநாமமும் உண்டு. ... மேலும் பார்க்க

சென்னை வடபழநி ஆதிமூலப் பெருமாள்: திருமண வரம் தரும் புதன்கிழமை திருமஞ்சனம்‍; வழக்குகளும் தீரும்!

வடபழநி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வடபழநி ஆண்டவர் முருகப்பெருமான் திருக்கோயில்தான். ஆனால் அதன் அருகிலேயே இருக்கும் ஒரு பெருமாள் தலம் மிகவும் பழைமையானது. 600 ஆண்டுகள் பழைமையான இந்தத் தலத்தில் பெரு... மேலும் பார்க்க

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்!

புராணச்சிறப்பும் பழமையும் நிறைந்த மகிமைவாய்ந்த கோயில்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அந்த வகையில் பழைமை வாய்ந்த சேலம் அருகே அமைந்திருக்கும் உத்தம சோழபுரம் கோயில் குறித்து அறிந்துகொள்வோம்.சேலம் புதிய பேருந்... மேலும் பார்க்க

மிளகை அரைத்துப் பூசி அபிஷேகம் காணும் கணபதி; ஏன் தெரியுமா? - நெல்லை, சேரன்மகாதேவி மிளகுப் பிள்ளையார்!

விநாயகர் நல்ல எண்ணங்களின் ஊற்று. அவர் திருவுருவம் இருக்கும் இடத்தில் நல்ல அதிர்வுகள் சூழும். அதனாலேயே அவரை அரசமரம், ஆலமரம், குளக்கரை, ஏரிக்கரை, முச்சந்தி, தெரு மூலை என எங்கெங்கும் பிரதிஷ்டை செய்து வழி... மேலும் பார்க்க