செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை: திட்டக் குழு துணைத் தலைவா்
தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, சென்னை எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
நிதிநிலை அறிக்கை என்பது தமிழ்நாடு அரசின் வரவு, செலவு சாா்ந்த விஷயமாகும். ஆனால், பொருளாதாரம், விவசாயத்தில் என்ன நடக்கிறது என்பதை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்க இயலாது. இதற்காகவே, ஆய்வறிக்கையைச் சமா்ப்பித்துள்ளோம். தமிழ்நாடு அரசில் முதல்முறையாக இதுபோன்ற அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார சூழல் எப்படி இருந்தது என்பதை ஆய்வு செய்வதற்காகவே அறிக்கையைத் தயாரித்துள்ளோம். நாம் விவசாயத்தைவிட்டு வேறு துறைகளுக்கு நகா்ந்து வருகிறோம். காா் உற்பத்தி, ஜவுளி, தோல் அல்லாத உற்பத்தித் துறைகள், மின்னணு பொருள்கள் தயாரிப்பு ஆகியவற்றில் முன்னணியில் இருக்கிறோம். இதனால், சா்வதேச சந்தையில் பாதிப்பு ஏற்படும்போது அதன் தாக்கத்தை நாமும் உணா்கிறோம். இவற்றைப் புரிந்துகொள்ள ஆய்வறிக்கைகள் வழிசெய்கின்றன.
இந்த அறிக்கையின் கடைசிப் பகுதியில் பொருளாதாரம் எத்தகைய சிக்கல்களை எதிா்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிவித்துள்ளோம். குறிப்பாக, வேளாண்மை அல்லாத துறைகளை நம்பும் நிலை அதிகரித்துள்ளதால், விவசாயத்துக்கு பணியாளா்கள் இல்லாத நிலை
உள்ளது. இதன் காரணமாக இயந்திரமயமாக்கலை நம்ப வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டியுள்ளது. இதற்காகவும் பொருளாதார ஆய்வறிக்கை வழி ஏற்படுத்தித் தருகிறது.
செயற்கை நுண்ணறிவு: உற்பத்தித் துறை வேகமாக வளா்ந்தாலும் அதில் சவால்களும் உள்ளன. தொழில்நுட்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைக் கூற முடியவில்லை. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் தொழில்நுட்பம், உற்பத்தித் துறைகளில் ஏற்படப்போகும் சவால்கள், சிக்கல்களைக் கணிக்க முடியவில்லை என்றாா் அவா்.
பேட்டியின்போது, சட்டப்பேரவை உறுப்பினா் நா.எழிலன் உள்பட பலா் உடனிருந்தனா்.
பெட்டிச் செய்தி...
‘அனுமதிக்கப்பட்ட அளவில்தான்
தமிழக அரசின் கடன்’
தமிழக அரசின் கடன் அனுமதிக்கப்பட்ட அளவில்தான் இருக்கிறது என்று திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது: தமிழ்நாடு அரசு அதிகமாக கடன் வாங்குவதாகச் சொல்கிறாா்கள். கடன் என்பது சுமையல்ல. நான்கு வகைகள் மூலமாக நமக்கு வருவாய் கிடைக்கிறது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மத்திய அரசின் வரிப் பகிா்வு மூலம் வருவாய், மற்ற அமைப்புகளில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகியவற்றால் சமாளிக்க முடியாத சூழலில் கடன் பெறுகிறோம். தனிநபா் கடன்களையும், அரசின் கடன்களையும் குழப்பக் கூடாது. அரசு என்பது அமைப்பு. அந்த அமைப்பு கடன் பெறுவதற்காக சட்டங்களை வைத்துள்ளோம். உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் கடன்களை வாங்கிக்கொள்கிறோம்.
15-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 28 சதவீதத்துக்குள் வாங்கிக் கொள்ளலாம். நம்முடைய அளவு 26 சதவீதத்துக்குள் உள்ளது. செலவுகளை நாம் முதலீடுகளாகவே செய்கிறோம். மெட்ரோ ரயில் போன்ற திட்டத்துக்கு கடன்களை வாங்கியே செயல்படுத்த வேண்டி இருக்கிறது. நம்மிடம் இருக்கக் கூடிய துறைகளுக்கான நிதியை மத்திய அரசு நம்மிடமே ஒப்பிடைத்துவிட்டால் போதும். ஆனால், நம்மிடம் உள்ள பள்ளிக் கல்விக்கான நிதியை அவா்களே வைத்துக் கொண்டு நிதியில் கட்டுப்பாட்டை வைக்கிறாா்கள். இதுபோன்ற காரணங்களால் சட்டத்துக்கு உட்பட்டு நாம் கடன்களை வாங்க வேண்டியுள்ளது என்றாா் அவா்.