நாகர்கோவில்: "கறுப்பு-சிவப்புக் கொடி பறக்க ஆரம்பித்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்...
செல்வப்பெருந்தகை Vs திருச்சி வேலுசாமி : ரத்தான ‘ஜனநாயக’ பொங்கல்; சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கில் வென்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததையடுத்து, அந்தத் தொகுதி தி.மு.க வசமாகியுள்ளது. இதனால், தற்போது காங்கிரஸிடம் 17 எம்.எல்.ஏ-க்களே உள்ளனர்.
இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 40 முதல் 70 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும்; ஆட்சியில் அதிகாரப்பூர்வ பங்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். இதனால் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணிக்குள் நெருக்கடி உருவாகியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான், திருச்சி வேலுசாமி, தி.மு.க-வை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கான வெளிப்பாடாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள காங்கிரஸ் பிரமுகருக்குச் சொந்தமான தனியார் ஓட்டலில் ‘ஜனநாயகன் பொங்கல்’ என்ற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்திருந்தார். காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள், ஆட்சியில் அதிகாரப் பங்கு வழங்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என வேலுசாமி தரப்பு சொல்கிறது.
இதையடுத்து, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸார் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் அந்த அறிவுறுத்தலை வேலுசாமி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் அருள் பெத்தையா, செல்வம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருடன் வேலுசாமி ஓட்டலுக்கு வந்தார். பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், காவல்துறையினர் ஓட்டலுக்குள் நுழைந்து, நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.
இதற்கு வேலுசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, 20-க்கும் மேற்பட்டோர் திடீரென ஓட்டலுக்குள் புகுந்தனர். அவர்களுக்கும் வேலுசாமி தரப்புக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இறுதியில், ‘ஜனநாயகன் பொங்கல்’ நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மாநில தலைவர் செல்வப்பெருந்தகைதான் அனுப்பியதாக வேலுசாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளதால், காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருச்சி வேலுசாமி, “ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தத்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். ஆனால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஓட்டலுக்குள் நுழைந்து எங்களை மிரட்டினர். ‘பெரிய குண்டர் படை வந்து உங்களைத் தாக்கப் போகிறது’ என்றும் அவர்கள் சொன்னார்கள்.
இதுவரை ரவுடிகள் கலாட்டா செய்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என நினைத்தேன். இப்போது, குண்டர் படை வருவதாக பொதுமக்களை மிரட்டுவதற்காகவே போலீஸ் இருக்கிறார்கள் என்பது புரிந்தது” என ஆவேசமாகக் கூறினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அருள் பெத்தையா கூறுகையில், “நிகழ்ச்சி நடத்தக்கூடாது என காவல்துறை எங்களையும், ஓட்டல் நிர்வாகத்தையும் அச்சுறுத்தியது. ரவுடிகள் ஊடுருவியிருப்பதாகச் சொன்னார்கள்.
அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் மாநில தலைவரின் டிரைவர் ஜார்ஸ் என்பவரைத்தான். ஜார்ஸ் 20-க்கும் மேற்பட்டோருடன் வந்திருந்தார். அவர்களது கோஷங்களும் வார்த்தைகளும் மிக மோசமானவை.
40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், இப்படி ஒரு சாதிய வன்மத்தை இப்போதுதான் பார்க்கிறேன். காங்கிரஸின் நிலைமை இவ்வளவு தாழ்ந்துவிட்டதா என நினைத்து வெட்கி தலைகுனிகிறேன். காவல்துறையும் முழுமையாக அவர்களுக்கே ஆதரவாக இருந்தது” என வெடித்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடமே விளக்கம் கேட்டோம், “அந்த சம்பவத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஜார்ஸ்’ என்ற பெயரில் என்னிடம் ஓட்டுனரும் இல்லை” என்றார்.















