"என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது; நிறைய கஷ்டப்பட்டோம்" - நட...
நாகர்கோவில்: "கறுப்பு-சிவப்புக் கொடி பறக்க ஆரம்பித்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்டன" - திருச்சி சிவா
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது.
விழாவிற்கு மாவட்டச் செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமை வகித்த இந்த விழாவில் 1049 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா வழங்கினார்.
பின்னர் திருச்சி சிவா பேசுகையில், "இந்த இயக்கம் வாழ வேண்டும், இது இயங்க வேண்டும், இது வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தமிழன் வாழ முடியும். கறுப்பு சிவப்பு கொடி பறக்க ஆரம்பித்ததற்குப் பின்னால்தான் தமிழ்நாட்டில் இன்றைக்கு நாம் காணுகின்ற மாற்றங்கள் ஏற்பட்டன.
ஒரு காலத்தில் எல்லா வகையிலும் தமிழ்நாடு பின்தங்கி இருந்தது. தொழில் துறையில் 29 வது இடத்தில் இருந்தது. இன்று இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். 50 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பின் விளைவாக மு.க.ஸ்டாலின் இன்றைக்கு ஒரு பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் 3 மாதங்களில் வரவுள்ளது. இந்தத் தேர்தல் மிக மிக முக்கியமானது. இதுவரை நடைபெற்ற தேர்தலில் இருந்து மாறுபட்டது. இதுநாள் வரை யார் ஆட்சிக்கு வரலாம் யார் வரக்கூடாது என்பதாக இருந்தது. இந்த முறை நடைபெறப்போவது ஒரு நாட்டு அரசாங்கத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, இது ஒரு தத்துவப் போர்.

திராவிட இயக்கத்தினால் இந்த மண்ணில் ஏற்பட்ட மாற்றங்கள், உருவான சமத்துவம், சமதர்மம், பொருளாதாரப் பேதம் அகற்றப்பட்டன. இதற்கு மாறான கொள்கை கொண்டவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றவர்களின் துணையோடு உள்ளே நுழையத் துடிக்கிறார்கள்.
இதனைத் தடுக்க வேண்டிய கடமை தி.மு.க-வுக்கு மட்டும் இல்லை. ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கிறது. தமிழ் வேண்டாம் சமஸ்கிருதம் வேண்டும் என்று சொல்கிற கூட்டம் உள்ளே வருகிறது. எல்லா இடங்களிலும் இந்திதான் என்றும், அதைப் படிக்கவில்லை என்றால் ஒரு மாநில அரசுக்கு நிதி தர மாட்டோம் என்றும் தங்களுடைய ஆதிக்கத்தைக் காட்டுகிற ஒரு கூட்டம் உள்ளே நுழைகிறது.
அதுமட்டுமல்ல மதச்சார்பின்மையை ஒன்றிய அரசு நசுக்கி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது தமிழகத்தில் நடக்காது.

தமிழகத்தில் வாழும் வட மாநிலத்தவர்கள் தி.மு.க ஆட்சியைக் கண்டு பிரமித்து உள்ளனர். தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது எனக் கூறுவதை விட, தி.மு.க-வை எதிர்கொள்ள முடியுமா என்ற நிலைதான் உள்ளது. உலகின் முக்கிய பொறுப்புகளில் தமிழர்கள் பதவி வகித்து வருகின்றனர்.
நமது விண்வெளித் துறையில் தமிழர்களின் பங்கு பெரும் அளவில் உள்ளது. அவர்கள் அனைவரும் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். தமிழகத்தின் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது" என்றார்.














