மும்பை தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து! - 8 ஆண்டுகளில் ...
அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01
`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.
தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியிலிருந்துதான் தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியது என்பது கடந்த கால அரசியல் வரலாற்றை அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், திமுகவின் எழுச்சி மற்றும் அண்ணாவின் முதல் தேர்தல் வெற்றியின் பின்னணியில் தமிழக அரசியலின் அதிகம் அறியப்படாத இன்னொரு பக்கமும் உள்ளது - அது, கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சி. இரு கட்சிகளும் பொதுவுடமை கருத்துகளையும் சமத்துவத்தையும் வலியுறுத்தியபோதிலும், கம்யூனிஸ்ட் கட்சி சறுக்கியது எங்கே, இதில், அண்ணாவின் பங்களிப்பு என்ன?
அண்ணாவுக்கு முதல் தேர்தல் வெற்றியைக் கொடுத்த 1957-ஆம் ஆண்டுத் தேர்தலின் சுவாரஸ்ய பக்கங்கள் இங்கே...

அண்ணாவின் முதல் தேர்தல் தோல்வி
1935-ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதன் முதலாக தந்தை பெரியாரைச் சந்தித்தார் அண்ணா.
“எம்.ஏ படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறாயா?” எனக்கேட்ட பெரியாரிடம்,
“இல்லை, பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம்” என்றார் அண்ணா.
பெரியாரும் இது போன்ற கொள்கைகளைக் கொண்ட இளைஞர்களைத்தானே அன்றைய நாட்களில் தேடிக்கொண்டிருந்தார். அப்புறமென்ன, அன்று முதல் பெரியாரின் தளபதியானார் அண்ணா. அண்ணாவின் மேடைப் பேச்சு திறனும், ஆழ்ந்த அரசியல் கருத்துகளைப் பாமரர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலான அவரது அபாரமான எழுத்து நடையும், நீதிக்கட்சி சார்பில், சென்னை மாநகராட்சி உறுப்பினர் தேர்தலில் பெத்தநாயக்கன்பேட்டையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
மிகவும் எளிமையான உடையணிந்த, குட்டையான உருவம் கொண்ட அண்ணா, இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில், பட்டுடை அணிந்து ஆடம்பரமாய் வாழ்ந்த நீதிக்கட்சியினர் சிலருக்கே உடன்பாடு இல்லை. அவர்கள் அண்ணா போட்டியிடுவதை எதிர்த்தனர். ஆனால், செட்டிநாட்டு இளவரசர் எம்.ஏ.முத்தையா செட்டியார், அண்ணாவின் அறிவாற்றல், நேர்மை பற்றி அறிந்தவர் என்பதால், அவர் அண்ணாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தார்.
“அண்ணாதுரையின் ஆற்றலை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர் தேர்தலில் நிற்பதற்குப் பணம் இல்லாததுதான் தடை என்றால், அந்தப் பணத்தை நான் கொடுத்து, நம்மைப் போல் அவரையும் பணக்காரராக்கி, அந்தத் தடையைத் தகர்க்கத் தயாராக இருக்கிறேன்” என்று முழங்கினார்.
இன்னொரு பக்கம் தமிழ்த் தென்றல் திரு.வி.க., ராஜாஜி, சத்தியமூர்த்தி போன்றோரெல்லாம் அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மா.சுப்பிரமணியத்துக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டனர். தேர்தல் முடிவு, அண்ணாவுக்குச் சாதகமாக இல்லை. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தோல்விதான் என்றாலும், அண்ணா அதுகுறித்தெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.
தொடர்ந்து பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தில் தீவிரமாக இயங்கிய அண்ணா, பெரியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்குப் பின்னர், கருணாநிதி, ஈ.வி.கே. சம்பத் உள்ளிட்ட பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்த 16 பேருடன், 1949 செப்டம்பர் 17-ஆம் தேதி,சென்னை, ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தொடங்கினார்.
அப்போது, இந்த இயக்கம் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியலைப் புரட்டிப்போட்டு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு வித்திடும் என யாராவது சொல்லி இருந்தால், அது நகைப்புக்குரியதாகவே இருந்திருக்கும். ஆனால், காலம் வேறு ஒரு கணக்கைப் போட்டுக் காத்திருந்தது.

கட்சி உருவானதும் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள், கட்சியைப் பலப்படுத்துதல் மற்றும் பிரச்சார அரசியலிலேயே பயணித்ததால், ஒரு சில உள்ளாட்சி மற்றும் மாநகராட்சித் தேர்தல்களைத் தவிர்த்து, திமுக முதல் முறையாக போட்டியிட்ட பொதுத்தேர்தல் என்றால், அது 1957-ஆம் ஆண்டில், ஒரே நேரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்தான்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆன நிலையில், 1957-ஆம் ஆண்டு, நாடு தனது இரண்டாவது பொதுத் தேர்தலைச் சந்தித்தது. மொழி அடிப்படையிலான மாநில மறுசீரமைப்பின் காரணமாக தமிழ் பேசும் பகுதிகள் தனித்த மாநிலமாக வடிவம் கொண்டிருந்த அந்தக் காலகட்டம், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றுக்கு ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது. அந்தத் தேர்தலே அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் மேடையேற்றத்தையும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கை மாற்றத் தொடங்கிய முக்கிய நிகழ்வாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
1954-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜ், தனது நிர்வாகத் திறன், சாதனைகள் மற்றும் தனிப்பட்ட எளிய வாழ்க்கை மூலம் மக்கள் மத்தியில் அளவிட முடியாத வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், 1957 தேர்தலில் அவர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. போட்டியிட்ட 41 நாடாளுமன்ற தொகுதிகளில் 31 இடங்களிலும், சட்டமன்றத் தேர்தலில் 205 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களிலும் காங்கிரஸுக்கு அபார வெற்றிக் கிடைத்தது. அதே சமயம், திமுக 15 சட்டமன்ற இடங்களையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி, தனது முதல் அரசியல் கணக்கை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் தொடங்கியது. ஒரு அங்கீகாரம் கூட இல்லாத கட்சியாகவும், வெறும் போராட்ட மேடையாகவும் கருதப்பட்ட அமைப்பு, சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

இந்த வெற்றி, திமுகவுக்கு சட்டரீதியான அரசியல் கட்சி அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்தது. காங்கிரஸில் பலரும், திமுக ஒரு 'தேர்தல் வெற்றி காண முடியாத கிளர்ச்சி அமைப்பு' என்ற எண்ணத்திலிருந்த நிலையில், இந்த வெற்றி அவர்களுக்கு ஒரு அதிர்வாக இருந்தது.
காஞ்சிபுரத்தில் போட்டியிட்ட அண்ணாவுக்கும் அதுதான் முதல் தேர்தல் வெற்றியாக அமைந்தது. அண்ணா ஏன் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்தார்?
இது அவரது பிறந்த மண். அண்ணாவின் சொந்த ஊராக இருந்ததால், உள்ளூர் ஆதரவு எளிதாகக் கிடைக்கும் என்று அண்ணா கணித்தார். மேலும், காங்கிரஸ் ஆதிக்கம் உள்ள இடத்தில் போட்டியிடுவது திமுகவுக்கும் தனக்கும் மிகுந்த சவாலாக இருக்கும் என எண்ணியே அவர் அங்கு போட்டியிட்டார். `என் பிறந்த நிலத்தில் விதையை விதைக்கிறேன்’ என்று அவர் கூறியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனாலும், அண்ணாவுக்கு வெற்றி ஒன்றும் எளிதாக கிடைத்திடவில்லை.

காஞ்சிபுரத்தில் அண்ணாவின் முக்கிய எதிராளி இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பி.எஸ். சீனிவாசன். அவர் உள்ளூர் செல்வந்தர், காங்கிரஸ் பிரமுகர். மற்றொரு வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.எஸ். பார்த்தசாரதி. அண்ணாவைத் தோற்கடிக்க, காமராஜர் 'கே. பிளான்' உள்ளிட்ட கடுமையான உத்தியைப் பயன்படுத்தினார் . கே. பிளான் என்றால், மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, களத்திலே வேலை செய்ய வேண்டும் என்பது.
இது தவிர, சீனிவாசனுக்கு ஆதரவாக கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்ரமணியம் போன்ற மூத்த தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர். இருப்பினும், 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணா அபார வெற்றி பெற்றார். அண்ணாவுக்கு 31,861 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனுக்கு 20,718 வாக்குகளும் கிடைத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பார்த்தசாரதி 6,742 வாக்குகள் பெற்றார். அண்ணா எதிர்க்கட்சித் தலைவரானார்.
அண்ணாவின் வெற்றிக்கு கருணாநிதி, க.அன்பழகன், என்.வி.நடராஜன், சத்தியவாணி முத்து போன்றோர் சைக்கிள் பிரசாரங்கள் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அண்ணாவின் சகோதரி கண்ணம்மாள் கூட களத்தில் பணியாற்றினார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். நயமிக்க அரசியல் உத்தி, சமூக நீதி, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட அண்ணாவின் பேச்சுகள் புதிய தலைமுறையினரை ஈர்த்தன. திமுகவின் தலைவர்கள் பலர் அந்தக் காலத்திய தமிழ் திரைக்கு எழுதிப் படைத்தவர்கள். செய்தியை மக்கள் மனதில் ஊட்டுவதில் அவர்கள் கடைப்பிடித்த உத்தி, தேர்தல் பிரசாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. போதாதற்கு காங்கிரஸுக்கு மாற்று தேடத் தொடங்கிய மக்களின் மனநிலையும், குறிப்பாக நகரப்பகுதிகளில், அண்ணாவின் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்த்தது.

1957 தேர்தல் வெறும் எண்களின் போட்டி மட்டும் அல்ல; அது தமிழ்நாட்டின் அரசியல் DNA-வையே மாற்றிய தேர்தல் எனலாம். அண்ணா தலைமையிலான திமுகவின் எழுச்சி ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கிய முக்கிய கட்டமாகவும் பதிவாகியது. 1952-ல் தமிழ்நாட்டில் இருந்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1957 தேர்தலில் வெறும் 2 இடங்களையே பெற்று சரிவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. இத்தனைக்கும் இரு கட்சிகளும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் ஒருசேர வலியுறுத்தியபோதிலும், கம்யூனிஸ்ட் கட்சி சறுக்கியதன் பின்னணியிலும் அண்ணாவின் அரசியல் அணுகுமுறையே முக்கிய காரணமாக அமைந்தது.
1950-களின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வலுவான அரசியல், தொழிலாளர் இயக்க சக்தியாக திகழ்ந்தது. தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்றவற்றின் மூலம் கிராமங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேரூன்றியிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 1952 ல் நடைபெற்ற தேர்தலில், 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்து, தங்களது செல்வாக்கை நிரூபித்தது.
முடிவெடுப்பில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பை உயர்த்துவது, நிலசுவான்தாரர்ககளுக்கு எதிரான போராட்டங்கள், கல்வி-சமூக மறுசீரமைப்பை வலியுறுத்தல் போன்ற கொள்கைகள், அப்போது மாற்றத்தை எதிர்பார்த்த மக்களின் நம்பிக்கையை ஈர்த்தன. காங்கிரஸுக்கு மாற்றாக பல இளம் அறிவுஜீவிகளின் முதல் விருப்பத்துக்கு உரிய இயக்கமாகவும் கம்யூனிஸ்ட் கட்சியே இருந்தது.

காரணங்கள் என்ன?
அதே சமயம், திமுக சமூக நீதி, மொழி உரிமை, சாதி ஒழிப்பு எனக் கொள்கையாக பேசியபோதும், அதன் அரசியல் மொழி கம்யூனிஸ்டுகளின் கோட்பாட்டைவிட, மக்களுக்கு நெருக்கமாக இருந்தது. கம்யூனிஸ்டுகள் மார்க்சிய கோட்பாட்டை மையமாகக் கொண்டு பேசிய சிக்கலான அரசியல் சொற்பொழிவுகள், மக்களிடம் நெருக்கத்தைத் தவறிய நிலையில், அண்ணாவின் பேச்சு மிக எளிய தமிழில் சமூக அநீதியை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியது.
“மக்களின் உள்ளமே மேடை” எனக் கருதிய அண்ணா, மேடை பேச்சை அரசியல் ஆயுதமாக மாற்றினார். திரையுலகக் கதைகள், நாடகங்கள், கவிதைகள் எனப் பல வடிவங்களை ஒன்றிணைத்து, கம்யூனிஸ்டுகள் பேசிய அதே சமத்துவக் கருத்துகளை மக்கள் மனதில் ஆழமாக ஊட்டியதுதான் திமுகவை, கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. அந்த வகையில், 1957 தேர்தல் இதற்கு மிகத் தெளிவான சான்றாக அமைந்தது. சமூக நீதியைப் பேசிய இரு கட்சிகளும் ஒரே வாக்கு தளத்தைப் பகிர்ந்திருந்தபோதும், திமுகவின் எழுச்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு அடிப்படையையே சிதைத்தது. குறிப்பாக நகரத் தொழிலாளர் வர்க்கம் மற்றும் இளம் வாக்காளர்கள் கம்யூனிஸ்டுகளை விட்டு திமுகவை நோக்கி நகரத் தொடங்கினர். காரணம் எளிது...
கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடு கரடுமுரடானது; திமுகவின் கருத்து மக்களிடமிருந்து வந்ததுபோல் உணரப்பட்டது.
இதில் அண்ணாவின் பங்களிப்பு மிக விரிவானது. சமூக மாற்றத்தைப் பற்றிய அவரது சிந்தனைகள் மார்க்சிய கோட்பாட்டுடன் சில ஒற்றுமைகள் கொண்டிருந்தபோதும், அவர் அதனைத் தமிழரின் அனுபவ மொழியில் பேசினார். திராவிட சிந்தனையை 'அரசியல் பண்பாட்டாக' மாற்றினார்.பொதுமக்கள் பேசும் தமிழையே அரசியல் மொழியாக மாற்றிய முதல் தலைவர் அவர். இதனால் கம்யூனிஸ்டுகள் உருவாக்க முடியாத கலாச்சார அடையாளம் திமுகவின் பக்கம் உருவானது. 'சமத்துவத்தை' போராட்டக் கோஷத்திலிருந்து மக்கள் வாழ்வின் உணர்வாக மாற்றிய அண்ணாவின் அணுகுமுறையே கம்யூனிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அந்த வகையில் 1957-ஆம் ஆண்டு, கம்யூனிஸ்டுகளின் தேர்தல் அரசியலின் வீழ்ச்சியின் தொடக்கமாகவும், திமுகவின் பாய்ச்சலாகவும், அண்ணாவின் தலைமைக்கான அங்கீகாரமாகவும் அமைந்து, தமிழக அரசியலில், திராவிட அரசியலின் அதிகாரபூர்வ பிறப்புக்கு வித்திட்டது எனலாம். இருப்பினும் 1957-ல் காணப்பட்ட அதே வர்க்கபேதமும், சமத்துவமின்மையும், உழைப்புச் சுரண்டலும், மானுட விரோத போக்குகளும் இன்னமும் இந்த மண்ணில் நீடித்துக்கொண்டுதான் உள்ளன என்கிற சூழலில், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் அதன் சித்தாந்தத்துக்கும் ஏது வீழ்ச்சியும் தோல்வியும்?

















