Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவிய...
மும்பை தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து! - 8 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு
மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சபாநாயகர் சகோதரனான மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 20 மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் தான் மிகவும் பணக்கார வேட்பாளராக கருதப்படுகிறார்.
தனது சொத்து குறித்து அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிபிட்டுள்ளார். தென்மும்பையில் உள்ள 226வது வார்டில் போட்டியிடும் மகரந்த் நர்வேகர் 2017ம் ஆண்டு தேர்லில் போட்டியிட்டபோது அவரது சொத்து ரூ.6.3 கோடியாக இருந்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்துள்ள மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 8 ஆண்டில் ரூ.124 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
இதில் அசையும் சொத்துக்கள் 32.14 கோடியும், அசையா சொத்துக்கள் 92.32 கோடியும் இருக்கிறது. கடந்த 8 ஆண்டில் நிலம், வீடுகள் என அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

ரூ.16.68 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஒரு கவுன்சிலரின் சொத்து 8 ஆண்டில் 20 மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடற்கரை நகரமான அலிபாக்கில் மட்டும் 27 இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருக்கிறார்.
தேர்தலில் போட்டியிடும் 35 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். நர்வேகரின் மைத்துனி ஹர்சிதா நர்வேகர் 225வது வார்டில் போட்டியிடுகிறார். அவரது சொத்தும் கடந்த 8 ஆண்டில் ரூ.10 கோடியில் இருந்து 63 கோடியாக அதிகரித்துள்ளது. சொத்து மதிப்பு அதிகரித்து இருப்பது குறித்து மகரந்த் நர்வேகர் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
இத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மேயர் ஸ்ரத்தா ஜாதவ் தனக்கு ரூ.46 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மான்கூர்டு பகுதியில் போட்டியிடும் ஆட்டோ டிரைவர் கந்து நானா கண்டேகர் தனக்கு சொத்து எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
21 வயது முதல் 76 வயது வரை வேட்பாளர்கள்
மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களில் 133 பேர் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். இது தவிர 24 பேர் 70 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்களில் கலீனா பகுதியில் போட்டியிடும் கிருஷ்ணாவிற்கு 76 வயதாகிறது. இவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''தேர்தலில் போட்டியிடுவதற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
இதே போன்று போரிவலி பகுதியில் 73 வயது நரேந்திர குமார் என்ற டாக்டர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இதே போன்று வேட்பாளர்களில் சுமித் சாஹில் என்ற 21 வயது இளம் வேட்பாளர் ஜெரிமெரி பகுதியில் போட்டியிடுகிறார்.
அரசியலில் நுழைவது குறித்து சுமித் சாஹில் (21) கூறுகையில், ``அரசியலில் நுழைவது எனது லட்சியம் அல்ல, விரக்தியால் எடுத்த முடிவு. ஒவ்வொரு நாளும் மக்கள் நீண்ட வரிசையில் தங்கள் பிரச்னைகளை தீர்க்க வருவதை நான் காண்கிறேன். இவை பெரிய பிரச்னைகள் அல்ல. ஒருவரின் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை, யாரோ ஒருவரின் வீட்டிற்கு வெளியே ஒரு அடைப்புள்ள வடிகால் உள்ளது. ஆனால் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உண்மையில் யாருக்கும் ஆர்வம் இல்லை. அதனால்தான் நான் களத்தில் இறங்க முடிவு செய்தேன்'' என்றார்.
30 வயதுக்கு உட்பட்ட 189 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


















