ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!
தி ஹைவி கேம்ஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட்டரென புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர கிரிகெட்டர்களான சச்சின், விராட் கோலியைத் தேர்ந்தெடுக்காமல் ரிக்கி பாண்டிங் ஜேக் காலிஸை தேர்வு செய்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
ஜாக்ஸ் காலிஸ் 13,000க்கும் அதிகமான ரன்கள், 45 டெஸ்ட் சதங்கள், 292 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்து 338 கேட்சுகளுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அசத்தியுள்ளார். கிரிக்கெட் உலகிலேயே மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக அசத்தியுள்ளார்.
ஜாக்ஸ் காலிஸ் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி, கேகேஆர் அணியிலும் விளையாடியுள்ளார்.
அன்டர்ரேட்டட், மிகச் சிறந்த வீரர்
ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
13,000 ரன்கள், 45 சதங்கள், 300 விக்கெட்டுகள் இந்த மூன்றில் எதாவது ஒன்றுகூட மிகச் சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையைக் குறிப்பிடுகிறது. ஆனால், இவர் இந்த அனைத்தையும் வைத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடவே பிறந்தவர் காலிஸ். மற்றவர்கள் குறித்து கவலை இல்லை. வித்தியாசமான ஆனால் சிறந்த தொழில்நுட்பம் கொண்டவர். ஸ்லிப் ஃபீல்டிங்கில் சிறந்த ஃபீல்டர். மிகச்சிறந்த அதேசமயம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள (அன்டர்ரேட்டட்) வீரராக இருக்கிறார். ஏனெனில் அவரைக் குறித்து அதிகமாக பேசவில்லை. ஏனெனில் அவரது குணாம்சம், கதாபாத்திரம் அப்படிப்பட்டது.
அதிகமாக ஊடகங்களில் விருப்பம் இல்லாதவர். அதனால், சிறிது மறக்கப்பட்டவராக இருக்கிறார் என்றார்.