செய்திகள் :

ஞாயம் பாடி சொத்து; வெள்ளிப் பணம் மூட்டையில்... | அணை ஓசை 17

post image

இன்றைக்கு சுமார் 120 வருடங்களுக்கு முன்பாகவே மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதிகளிலிருந்து மக்கள் குடி பெயர்ந்து அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளேகால் பகுதியில் உள்ள மார்ட்டள்ளி மற்றும் சுற்றுபட்ட கிராமங்களில் வாழத் தொடங்கினார்கள். சில பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வருபவர்களும் உண்டு. ஆனால், அணை கட்டிய பிறகு தங்கள் நிலங்களும் வீடுகளும் நீரில் மூழ்கி விட கிபி 1930 முதல் 1935 ஆம் ஆண்டு வரை, அந்தப் பகுதிகளில் போய் குடியமர்ந்தவர்கள் அதிகம்.

குறிப்பாக காவிரி ஆற்றின் கரையோர கிராமம் “ஞாயம்பாடியில்” இருந்து குடிபெயர்ந்து மார்ட்டள்ளி, ஜல்லி பாளையம், ஜக்கள்ளி, தோமையார்பாளையம், பிரகாஷ் பாளையம், ஜகேரி, கௌதள்ளி, புஷ்பகிரி, ஜம்பநள்ளி, மரியமங்கலம் போன்ற கிராமங்களில் குடியேறியவர்களில் பெரும்பாலோனோர் கிறிஸ்தவர்கள்.

மார்ட்டள்ளி கிராமத்தில் திரு. சம்மனசு நாதன் என்ற பெரியவரின் வீட்டிற்கு நம்மை முதலாக அழைத்துச் சென்றார் நண்பர் செல்வம். சம்மனசு நாதன் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். வயது 94. இவருக்கு புலம் பெயர்ந்து வந்த அனைவரையும் அறிந்திருக்கும் வாய்ப்பு இருந்ததாலும், இவரே ஞாயம் பாடியிலிருந்து மார்ட்டள்ளி கிராமம் வந்து குடியேறி வாழ்ந்து வருவதாலும் நமக்கு நம்பகத் தன்மை கொண்ட வரலாற்றுச் செய்திகளே கிடைத்தன.

மார்ட்டள்ளி கிராமம்

இவர் அறிமுகப்படுத்திய 'மங்களம் மேரி' மார்ட்டள்ளியில் வசிக்கிறார். இந்த ஆத்தாவின் வயது 94. கணவர் பெயர் சிலுவை முத்து. இன்னமும் சுறுசுறுப்பாக இயங்குகிறார் மங்களம் மேரி. இந்த ஆரோக்கியத்தின் காரணம் என்ன என்று கேட்டபோது, 'கடவுள் தான் துணை' என்று வானத்தை கை காட்டுகிறார்.

மங்களம் மேரி

ஞாயம் பாடி கிராமத்தில் வசித்து வந்த 'மரிய சூசை கவுண்டர்' என்பவர் முதன் முதலாக மார்ட்டள்ளி வந்து இங்கே 'ஊர் கவுண்டராக' இருந்துள்ளார். மேட்டூரில் அணை நீர் சூழ்ந்ததால், ஞாயம் பாடியிலிருந்து சுமார் 36 குடும்பங்கள் மார்ட்டள்ளி வந்து வாழ வழி செய்துள்ளார். மிகப்பெரும் வசதி படைத்தவராக இருந்துள்ளார், மரிய சூசை கவுண்டர். இவர் அழைத்து வந்த ஒரு குடும்பத்தின் பெண் மகவு தான் நாம் நேரில் கண்ட "மங்களம் மேரி".

"வீடு பூரா தண்ணி சூழ ஆரம்பிச்ச பிறகு மார்ட்டள்ளி வந்துட்டோம். நான் பெரிய பொண்ணா ஆனா பொறவு சில முறை கொளத்தூர் போய் எங்க அப்பன், ஆத்தா வாழ்ந்த இடங்களை எல்லாம் பார்த்து விட்டு வந்தேன். இப்போ பலகாலம் ஆச்சுது. அங்கே இருந்த 'சர்ச்சின்' இரட்டை கோபுரத்தை பார்த்தேன். அந்த தேவாலயத்தில் இருந்த சிலையை எடுத்து வந்து தான் இங்கே மார்ட்டள்ளி தேவாலயத்தில் வச்சிருக்காங்க.

அப்பனாத்தா இங்க வரும்போது எங்க நிலங்களுக்கு ஈடாக வெள்ளிப் பணம் மூட்டையில் கட்டி கொடுத்தாங்க. அந்தப் பணத்தை வெச்சு இங்க கொஞ்சம் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். நஷ்ட ஈடாக கெடச்ச அந்த வெள்ளிக் காசுல செஞ்சது தான் இதோ இந்த வளையல்" என்று தன் கைகளை நீட்டி ஆர்வமாக காண்பித்தார்.

மூதாட்டி 97 வயது, வெள்ளி வளையலுடன்

எனக்கும், உடன் வந்த அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை தந்தது. இதே போல இன்னும் சில 90 வயதை கடந்த மூதாட்டிகள் இதே ஊரில் தங்கள் கைகளில் இது போன்று வளையல்களை செய்து அணிந்திருப்பதாக கூறினார். அங்கேயே வாழும் பலருக்கும் இது புதிய செய்தியாக இருந்தது. திகைப்படைந்தனர்.

இந்த வெள்ளி 99.5% சுத்தமான வெள்ளியாகும். பிரிட்டிஷ் கால கணக்குப்படி 12 வெள்ளி பணம் ஒரு ரூபாய். தோராயமாக ஒரு ஏக்கர் நிலத்துக்கு நஷ்ட ஈடு ரூபாய் 150 என அரசு அளித்திருக்கும் பட்சத்தில் சுமார் 1800 வெள்ளிக்காசு (பணம்) கிடைத்திருக்கும். இதை அரசு ஆயிரம் வெள்ளிப் பணத்தை கொண்ட ஒரு சிறிய மூட்டையில் சீல் வைத்து தந்திருக்கிறார்கள்.

5 அல்லது 6 ஏக்கர் நிலம் வைத்திருந்தவர்களும் உண்டு. அப்போது நாமே கணக்கிட்டுக் கொள்ளலாம். கட்டி எடுத்து வர பல மூட்டைகள் தேவை. இப்படி வந்த ஒரிஜினல் வெள்ளியினால் செய்யப்பட்ட வளையல்களை "ஞாயம் பாடி சொத்து" என்கிறார் இந்த மூதாட்டி.

இந்தப் பெண்களின் கைகளில் உறவாடுவது வெள்ளியல்ல, தங்கள் பூர்வீக மண்ணின் வாசம், சொந்தங்களின் ரத்தம் கலந்த மண்ணின் தொப்புள் கொடி உறவு, ஒரு நினைவுச்சின்னம். ஓர் மதிப்புறு உலோகம் அல்லவா இந்த வளையல்கள்! காவிரி ஆற்று நீரின் ஸ்பரிசத்தை எப்போதும் தங்கள் கைகளில் அணிந்துள்ள வெள்ளி வளையல்களின் ஊடே உணர்ந்து வாழ்கிறார்கள். தங்கள் குடும்பங்களின் வரலாற்றை தங்களின் வளையல்களின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு கடத்திக் கொண்டு செல்வதில் இவர்களின் பெருமையையும், மகிழ்ச்சியையும் காணமுடிந்தது.

இந்த கிராமம் மலையடிவாரத்தில் மிக அமைதியாக காட்சி அளிக்கிறது. இங்கிருந்து வடக்கு திசையில் சென்று ஏறும் மலைப்பாதை, மாதேஸ்வரன் மலை வழி கொளத்தூர் மற்றும் மேட்டூர் சென்றடையலாம். மார்ட்டள்ளியில் இருந்து தெற்கு திசை சென்று "நான்கு ரோடு" என்ற இடத்தில் இருந்து கிழக்கில் திரும்பி மலைப்பாதையில் ஏறி பர்கூர், ஊசிமலை வழியாக அந்தியூர் வந்தடையலாம். யானைகள் சகஜமாக வலசை வரும் பகுதி பர்கூர்.

“மார்ட்டள்ளிக்கு புலம்பெயர்ந்த மக்கள் இங்கு வந்து தங்களுக்கான இடங்களை தங்கள் கைகளினால் உருவாக்கிக் கொண்டார்கள். முன்பு விவசாயம் மட்டுமே தொழிலாக இருந்தது. மக்கள் தொகை பெருகி அடுத்த தலைமுறை மக்கள் வந்த பிறகு நன்கு படிக்கவும், வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லவும் ஆரம்பித்தனர். அங்கிருந்து சுமார் 200 பேர் இப்போது வேறு ஊர்களுக்கு சென்று பல வேலைகள் செய்து சம்பாதிக்கிறார்கள்.

சாம்ராஜ் நகரம், ஹாசன், கிருஷ்ணகிரி போன்ற ஊர்களில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரானைட் தொழிற்சாலைகளுக்கு ஆட்களை சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்யும் சிறு தொழில் முனைவோரும் இங்கு உள்ளனர்” என்று நம்மிடம் விளக்கினார் ஆசிரியர் சம்மனசு நாதன்.

மங்களம் மேரி. ஞாயம்பாடி சொத்து வளையல்களுடன்

"ஞாயம்பாடியில் இருக்கும் போது எங்க பெரியவங்க சொல்லுவாங்க. வீட்டு பொம்பளைக்கு ஒரு சேலை எடுத்து வந்தால், அதிலே ஓரமா கொஞ்சம் கிழிச்சு புருசன் கிட்ட கொடுத்துடுவாங்களாம். அதுதான் புருசனுக்கு கோமணம். மிச்சமுள்ள சேலையை பொண்டாட்டி உடுத்துவாங்களாம். அப்போதைய நிலை அதுதான். விவசாயிக்கு இதுக்கு மேலே என்ன வேணும்”? என்றார் வருத்தமுடன். தொடர்ந்து, “ஆனால், காலம் கனிஞ்சு இப்போ நல்லாவே வாழறோம். கர்த்தர் எங்களை நல்லாவே வைத்திருக்கிறார்” என்று நன்றியுடன் தனது தாய் ஞானசுந்தரியையும் நினைவு கூர்ந்து நம்பிக்கையோடு பதிலுரைக்கிறார் ஞானம் கைகூடிய “மங்களம் மேரி”!

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. உழைக்கத் தயங்காதவர்களுக்கு சென்றவிடமெல்லாம் பொன் விளையும் பூமி கைவசமாகும். வானமும் வசப்படும். இனி கற்றோரை காண்போம்..

மரிய சூசை அந்தோணி

மார்ட்டள்ளி கிராமத்தில் அமைதியான அந்த வீட்டில் வசித்து வந்தார் "மரிய சூசை அந்தோணி". ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரிப் பேராசிரியர். படித்தது M.A., M.Com, B.Ed. இவரது பூர்வீகம் மேட்டூர் கொளத்தூரை அடுத்த சவேரியார் பாளையம். பாட்டி வீட்டு பூர்வீகம் அது. பாட்டனார் பூர்வீகம் காவிரி ஆற்றோர கிராமமான "ஞாயம் பாடி".

மரிய சூசை-மனைவியுடன்

மெல்லிய குரல், மிகவும் மரியாதையான வார்த்தை பிரயோகம், ஆங்கிலமும் தமிழும் கலந்த உரையாடல். மெத்தப் படித்தவர் அதேசமயம் மரியாதைக்குரியவர் என்பது அவரின் உரையாடும் தன்மையிலிருந்தே தெளிவாக புரிந்தது!

இவரிடமிருந்து தான் ஆதாரப்பூர்வ தகவலாக ஞாயம் பாடியிலிருந்து 20 குடும்பங்கள் அணை கட்டுவதற்கு முன்பே புலம் பெயர்ந்ததாகவும் (பஞ்சம் காரணமாக), அணை நீர் சூழ்ந்த பிறகு 36 குடும்பங்கள் மார்ட்டள்ளி கிராமத்திற்கு வந்து குடியேறிய தகவலும் கிடைத்தது. இவர் கூறிய தகவலாக மற்றொன்று, அவரின் உறவினரான 99 வயது பெரியவர் இப்போதும் கௌதள்ளி கிராமத்தில் இருக்கிறார் என்பது! நம்மால் அங்கு சென்று அவரை காண இயலவில்லை.

தீர்க்க தரிசனம்

காவிரி ஆற்றின் கரையோர கிராமம் மேட்டூர் ஞாயம்பாடியில் இருந்த கிறிஸ்தவ தேவாலய பாதிரியாருக்கும் அங்கு வாழ்ந்த சில வாலிப கிறிஸ்துவ நபர்களுக்கும் ஏதோ காரணமாக பல நாட்கள் அந்த காலத்தில் தீவிர வாக்குவாதம் நடந்திருக்கிறது. அந்த தேவாலயத்தின் பாதிரியார் பிரெஞ்சு தேசத்தைச் சேர்ந்தவர்.

அவர், "இந்த ஞாயம் பாடி தேவாலயம் நீரால் சூழப்பட்டு முதலைகள் வந்து வசிக்கும் காலம் விரைவில் வரப்போகிறது. மக்கள் வசிக்க இயலாத ஓர் இடமாக இங்கு மாறப்போகிறது. கவனமாக இருங்கள்" என்று மக்களிடம் கூறியதாக, தனது பாட்டனாரும் தந்தையும் தெரிவித்ததாக நினைவு கூறுகிறார் அந்தோணி! இந்த கூற்றை புலம்பெயர்ந்த பலரிடம் நாம் உரையாடிய போது உறுதிப்படுத்துகிறார்கள்.

பாதிரியாரின் தீர்க்கதரிசனம் அல்லது சாபமே பல குடும்பங்களை அங்கிருந்து புலம் பெயர வைத்தது என்ற நம்பிக்கை மார்ட்டள்ளி கிராம மக்களிடம் இன்றளவும் உள்ளது ஒரு ஆச்சரியம் கலந்த உண்மை! மதம் மாறிய வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே (படையாட்சி கவுண்டர் சமூகம்) மலையை தாண்டி கொள்ளேகால் பக்கம் சென்றுள்ளனர்.

மேட்டூர் ஞாயம்பாடி கிராமத்தில் நீரில் மூழ்கிய தேவாலயத்தின் மாதிரி வடிவில் மார்ட்டள்ளியில் இரட்டை கோபுரங்களுடன் ஒரு தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலரா பெரியம்மை போன்ற நோய்களின் பாதிப்பு பெருமளவில் இங்கு இருந்துள்ளது. மிஷனரி (Missionary) ஐ சேர்ந்தவர்கள் இதற்கும் வைத்தியம் பார்த்து உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

“அந்த காலங்களில் இங்குள்ள மக்களின் உணவு கம்மங்கூழ், சாமை, கேழ்வரகு மற்றும் ராகி போன்றவையே. கடலையும் உண்டு. பின்னாளில் மக்காச்சோளம் விதைகளை வெளிநாட்டிலிருந்து பாதிரியார்கள் தான் முதன்முதலாக இங்கு கொண்டு வந்தார்கள். அப்போது மக்கள் இங்கே நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்" என்கிறார் மரிய சூசை. (மணி என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறார்).

ஞாயம்பாடி கிராம தேவாலயம் போல எழுப்பப்பட்ட மார்ட்டள்ளியில் உள்ள தேவாலயம்

"பூசணியை வெட்டி உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விட்டு மிளகாய், உப்பு போன்றவற்றை சேர்த்து நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் சிறப்பான ருசி கொண்ட சிற்றுண்டியாக இருக்கும். இப்படி உண்பவர்கள் இங்கு அதிகம். மற்றுமொரு உணவு கிழங்கு" என்கிறார் இவர். இப்படியான உணவுகளை இவர்கள் சாப்பிடதால்தான் 90+ வயதுள்ள பலர் சர்வ சாதாரணமாக இங்கு வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது.

காவிரி கரையோர ஞாயம் பாடி கிராம ஆற்று மணலில் சிறுவர்கள் மற்றும் வாலிப வயதினர் மாலை வேலைகளில் "வெல்லம் திருடி பட்டை" மற்றும் "உப்பு பட்டை" போன்ற பெயர் கொண்ட விளையாட்டுகளை விளையாடுவார்கள் என்று இதுகுறித்து விளக்கமாகவும், ஆர்வமாகவும் எடுத்துரைத்தார். "அதுமட்டுமன்றி ஆற்றங்கரை ஓரம் மணலில் அமர்ந்தபடி மகுடி மற்றும் நீளமான புல்லாங்குழல் வைத்து இசைப்பது சிலரின் அன்றாட வாடிக்கை.

பெரும்பாலும் ஆடு மாடு மேய்த்து பட்டியை பாதுகாக்கும் கிராமவாசிகள்தான் இப்படி இசைப்பார்கள். அவ்வளவு இனிமையாக, ரம்மியமாக இருக்கும். இவர்கள் முறையான இசை பயின்றவர்கள் இல்லை எனினும் கிராம மக்கள் அனைவரும் அவர்களது இசையில் மயங்கினார்கள் என்பது தான் உண்மை. அந்தக் குடும்பங்கள் இங்கு மார்ட்டள்ளிக்கு வந்த பிறகும் மாலை வேளைகளில் சங்கீதம் பல காலம் தொடர்ந்தது. இப்போது சில வருடங்களாக அத்தகைய பழைய நபர்கள் இல்லாததால் அது மறைந்து போன, மறந்து போன கலையாக ஆகிவிட்டது" என்றார் பேராசிரியர்.

மார்ட்டள்ளி கிராமம்

"அந்த காலத்திலேயே மக்கள் சாராயத்துக்கு அடிமையாக இருந்தார்கள். நிறைய பேர் தினமும் சாராயம் குடிப்பார்கள். சிலர் சாராயம் காய்ச்சியதும் கூட உண்டு! மக்கள் அவ்வளவாக கல்வி அறிவு பெற்றவர்களாக அப்போது இல்லை.

மேட்டூர் அணை கட்டும்போது டிராம் ரயில் வண்டியில் இணைத்திருக்கும் சிறிய சைஸ் இரும்பு வேகனை சிலர் தலையில் தூக்கிக் கொண்டு திருடிக் கொண்டு வந்த கதையெல்லாம் எனது பாட்டனார் சொல்லிக் கேட்டிருக்கிறேன். பின்னர் அவை பெரிய பஞ்சாயத்துக்களுக்கு வழி வகுத்த கதையெல்லாம் உண்டு”.

“ஞாயம்பாடி மக்கள் இங்கே மார்ட்டள்ளிக்கு புலம் பெயர்ந்த பிறகு சொந்த ஊர் கொளத்தூர் வார சந்தைக்கு வியாழன் காலை மார்ட்டள்ளியில் இருந்து கிளம்புவோம். பாலாறு கரையோரமாக காட்டினூடே வண்டித்தடத்தில் நடந்தே போய் இரவு சேர்ந்து விடுவோம். வெள்ளிக்கிழமை கொளத்தூர் சந்தை. வழியில் யானைகளை இடையில் பார்ப்பது வெகு சகஜம். அதுபாட்டுக்கு போய்விடும். நான் சிறுவனாக இருந்தபோது பலமுறை இப்படி நடந்தே போயிருக்கிறேன். வெள்ளி இரவு திரும்பி சனிக்கிழமை விடியற்காலை மார்ட்டள்ளி வந்து சேர்வோம் " என்று தன் பழைய நினைவுகளை பகிர்ந்தபடியே இருந்தார்.

"பஞ்சம் அல்லது வறுமை காலங்களில் அலங்காட்டில் ( Forest) கிடைக்கும் "இருளைக் கிழங்கு" மட்டுமே முக்கிய உணவாகும். முல்லைக் கொடியில் காய் கொத்துக்கொத்தாக இருக்கும். பறித்து வேகவைத்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவை" என்று கூறி "நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று நம்மை கேட்டார்".

'ஙே' என்று விழித்து அந்த கொடுப்பினை நமக்கு இல்லையே சார் என்று சிரித்தேன்.

அணை கட்டியதால், உங்கள் குடும்பம் புலம்பெயர்ந்து வந்ததினால் நீங்கள் வாழ்க்கை இழந்து போனதாக கருதுகிறீர்களா?" என்று கேட்டேன்.

"நோ! தற்போது படிப்பு, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் போன்ற பல விஷயங்களில் நாங்கள் மிகவும் முன்னேறி இருப்பதாகவே நினைக்கிறோம். இங்கு வந்த பலர் கல்வி கற்க கிறிஸ்தவ மிஷனரிகள் உதவினர். ஆரம்பக் கல்வி, சுகாதாரம் பேண நர்சுகள் கிராமம் தோறும் இருந்தனர். அவர்கள் சிறார்களுக்கு ஒழுக்கத்தை போதித்து கல்வியையும் புகட்டினர் என்று பெருமை ததும்ப கூறியதை காண முடிந்தது. இவருடைய மகன் ஒரு மருத்துவராக இருக்கிறார்.

"சோம்பல் இருக்கக் கூடாது. நேர்மை மற்றும் கடும் உழைப்பு இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம். அதுதான் நான் என் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அட்வைஸ்" என்று இன்னும் பல விஷயங்களை பகிர்ந்தார் மணி எனும் மரிய சூசை அந்தோணி.

மார்ட்டள்ளி 'ஒட்டர் தொட்டி' என்ற பகுதியைச் சேர்ந்தவர். பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். ஒடிசலான தேகம். மெல்லிய குரலில் ஆனால், மிகவும் தெளிவாக தன் அனுபவங்களையும், கருத்துக்களையும் எடுத்து வைத்தார். காவிரி கரையோர கிராமத்திலிருந்து மார்ட்டள்ளிக்கு புலம் பெயர்ந்தவர்.

"என் இளவயதில் நிறைய கதைகளை மாணவர்களுக்குச் சொல்வேன். ஊக்கப்படுத்துவேன். பணம் பெரிதாக சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. அதிகமாக பணம் குறித்து சிந்திக்கவில்லை. அப்போது வாழ்க்கைக்கு போதுமான அளவு பணம் எங்களிடம் இருந்தது. இந்தக்காலத்தில் வாழ பணம் இவ்வளவு அதிகமாக தேவைப்படும் என்றெல்லாம் முன்பு கணிக்க முடியவில்லை. காரணம், நூற்றுக்கணக்கான ஆடு, மாடு மற்றும் நிறைய நிலம் இருந்தது. எங்களிடம் வேலையாட்கள் நிறைய பேர் வேலை செய்தார்கள்.

வாத்தியார் அந்தோணியப்பன்

மாட்டின் பால் யாருக்கும் காசுக்காக வெளியே விற்க மாட்டோம். குழந்தைகளுக்குப் போக கன்றுக்குட்டிகளுக்கு தான் பால். அந்த அளவுக்கு வாழ்ந்த குடும்பங்களும் இங்கு உண்டு. ஞாயம் பாடியிலிருந்து வந்து விட்டாலும் எங்களுக்கு வருத்தம் ஒன்றுமில்லை. உழைத்து இப்போது நன்றாகத் தான் இருக்கிறோம்".

" தினக்கூலி நாலணா அல்லது எட்டணா வரை தான் மேட்டூர் அணை கட்டும்போது வேலையாட்களுக்கு கூலி கொடுத்தார்கள். அதிகாரிகள் ஜனங்களை எதுவும் இம்சை செய்யவில்லை. அடிமைகளைப் போல் எல்லாம் நடத்தவில்லை என்பது உண்மையே. அணை கட்டும் போது நல்ல சூழ்நிலை இருந்ததால்தான் ஆயிரக்கணக்கான பேர் வெவ்வேறு ஊர்களில் இருந்து வேலை செய்ய மேட்டூருக்கு வந்து குவிந்தார்கள். அப்போதெல்லாம் காசு பணம் சோற்றுக்கு இருந்தால் போதும். ஆட்களுக்கு அதுவே திருப்தி".

"தாத்தா இருந்த போது நாங்கள் ஞாயம்பாடியிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு குடியேறினோம். எனது 13 வயது வரை தாத்தா உயிரோடு இருந்தார்.

தேக்கு மரம் போல உயரமாக, திடகாத்திரமாக இருப்பார். கையில் வெள்ளி அங்கி, மணிக்கட்டில் தங்கத்தில் நான்கு பவுனில் காடை (பிரேஸ்லெட்), இரண்டு காதுகளிலும் கடுக்கன், பெரிய மீசை, காலிலும் வெள்ளியில் காடை வளையம்- இப்படி பெரிய உருவம் தாத்தா. ஆனால், எதிர்மறையாக பாட்டி சிறிய உருவம். தலைகீழாக பொருத்தமில்லாமலிருந்தாலும் உள்ளப்பொருத்தம் மிகச்சிறப்பு! அவர்களுக்கு நான்கு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள். ஞாயம்பாடியில் இருந்து இங்கு வரும்போது தாத்தா அங்கு வளர்த்த நாய்க்குட்டியோடுதான் வந்தார். அது வெகு காலம் இங்கும் வளர்ந்தது.

ஒரு சமயம் கருங்காலி மரம், கருவத்தடிக்கு வெட்டுவதற்காக போனபோது கையில் அரிவாள் இல்லாததால் அந்த மரத்தை காலில் ஒரே மிதி உடைத்து விட்டார். என் கண் முன்னே இது நடந்தது. அவ்வளவு வலிமை எங்கள் தாத்தாவுக்கு" என்று தன் இளமை நினைவுகளில் மூழ்கினார்.

சாதிப் பாகுபாடுகள் குறித்து உரையாடல் திரும்பியது. "விவசாயிக்கு மாடு பிரதானம். அதேபோல சமூகத்திற்கு பார்பர், டோபி, ஆசாரி இன்னும் பல தொழில் செய்பவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் தேவை! இவர்கள் சமூகத்துக்கு பிரதானமானவர்கள். அவர்களில் ஏற்றத்தாழ்வு என்பது கிடையாது. நாங்கள் படையாச்சி கவுண்டர் வம்சம். எங்களை பலர் சாமி, பன்னாடி என்றுதான் அழைப்பார்கள். ஆனாலும், அனைத்து சமூகத்தினரிடத்திலும் அன்னியோன்யமாக இருப்போம். இருப்பினும் ஒரு கொடுமை நான் கண்டதுண்டு.

அப்போதெல்லாம் காட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு தட்டில் சோறு போட மாட்டார்கள். கம்பு, ராகி இவற்றைக் கரைத்து கூழ் மாதிரி ஒருவர் ஊற்ற கைகளில் ஏந்தி தான் குடிப்பார்கள். நான் நினைப்பதுண்டு. அப்போது ஏன் இப்படி செய்தார்கள் என்று? என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அது நடந்தது என்பது நிஜம்! என் மனதுக்கு நெருடலான விஷயமாக இன்றுவரை உள்ளது. இது நினைவுக்கு வரும்போதெல்லாம் நான் வருந்துவேன்.

மார்ட்டள்ளி கிராமம்

நான் பெரியவனாகி, ஆசிரியராகி, தாழ்த்தப்பட்டவர் என்ற சாதி மக்களின் பல சிறுவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறேன். உட்கார்ந்து வகுப்பறையில் எல்லா பாடங்கள், நியாயங்கள் சொல்லித் தந்திருக்கிறேன். ஆனால், இவர்களின் பாட்டனார்களுக்கு அந்த காலத்தில் இந்த கல்வி வாய்ப்பு இல்லையே என்று மிகவும் மனம் நொந்து வருத்தப்பட்டு இருக்கிறேன். கொடுமை தான் அது”.

“அவ்வப்போது சந்தோஷமாக இருந்த காலங்களும் நினைவில் ஆடும். உயர்சாதியினர் வேலையாட்களை துன்புறுத்தியதாக நான் பார்க்கவே இல்லை. அப்படி செய்திருந்தால் இங்கு விவசாயம் நாங்கள் செய்திருக்கவே முடியாது. அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்து சாதிக் கலவரம் இல்லவே இல்லை. இப்போது தான் தலைவிரித்தாடுகிறது. காரணம் பொறாமை! ஒருத்தன் நன்றாக இருந்தால் மற்றவனுக்கு பிடிக்காது என்ற உளவியல் சிக்கல்கள் மக்களிடையே இருக்கிறது”.

“அரசியல் பிரிட்டிஷ் காலத்திலேயே இருந்தது. இப்போதும் இருக்கிறது. அது மட்டும் மாறவில்லை. கொள்ளேகால் ரோட்டில் இருந்து மார்ட்டள்ளி ரோடு வரை பாருங்கள். 10 வருடத்திற்கு மேல் இப்படியே மோசமாகத்தான் உள்ளது. இந்தத் தொகுதி எம்எல்ஏ 15 வருஷமாக இவரே தான் MLA ஆக இருக்கிறார். இப்படி சாலையை வைத்துக் கொண்டிருப்பதற்கு எதுக்கு நாம் ஓட்டு போடணும்”? என்கிறார் கோபமாக. துன்பத்தின் காயம் பெரிதாக அவரை பாதிக்கிறது. என்ன செய்ய”?

“சுதந்திரம் அடைந்து இவ்வளவு வருடங்கள் கடந்தும் கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. இன்றைக்கும் உடல்நலம் இல்லாதவங்களை பாலமலையிலிருந்து தோளில் கட்டி தூக்கி வராங்க! அந்த கால கற்கால மனுசனை போல நாம் இந்த சமயத்திலும் வாழ்வதா”?

‘நாலுரோடு’ துவங்கி ‘பாலாற்று பள்ளம்’ வழியாக கொளத்தூருக்கு காட்டில் அந்த காலத்தில் பலமுறை நடந்து சென்றிருக்கிறேன். காட்டில் சென்ற அந்த அனுபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காவிரி ஆற்றங்கரையோரம், ஞாயம் பாடி வாழ்க்கை, கிராமத்தின் வாழ்க்கை, எங்கள் தாத்தா வழியாக எங்களிடத்தில் வேறூன்றி நினைவில் நிற்கிறது. இன்னமும் சொந்தங்களை பார்க்க நாங்கள் கொளத்தூருக்கு சென்று வந்து கொண்டுதான் இருக்கிறேன்" என்று தன் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

வருத்தம்

ஒரு வருத்தமான செய்தியையும் நாம் இங்கே பதிவிட வேண்டும். நாம் நேர்காணல் நடத்தி வந்த பிறகு சமீபத்தில் வாத்தியார் அந்தோனியப்பன் உடல்நலமின்றி (கேன்சர்) மறைந்தார் என்று கேள்விப்பட்டு வருந்தினேன். அவர் மட்டுமல்ல சில மாதங்கள் முன்னதாக நம்மை கொளத்தூரில் இருந்து பல இடங்களுக்கும் அழைத்துச் சென்ற திரு. செல்வம் அவர்களும் திடீர் மாரடைப்பால் காலமானார் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வருத்தம் அளித்த செய்தியாகும்.

கொளத்தூர் செல்வம்

புலம் பெயர்ந்தோர் சிலரின் பின்னணியை நாம் அறிந்து கொண்டோம். இன்னும் சிலரின் நேர்காணல்களை தொடரின் பிற்பகுதியில் காண்போம்.

நிலம் கையகப்படுத்தியதால் நிலத்தை இழந்தவர்களின் இந்த கதைகளுக்கு ஊடாக, அந்த சமயத்தில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் பங்கு, அங்கு நடந்த இதுகுறித்தான வாக்குவாதங்கள், உரையாடல்கள் மிகுந்த சுவாரசியமானவை! காவிரி-மேட்டூர் அணை திட்ட வடிவமைப்பு, மானிய கோரிக்கை, ஒப்புதல், நிதி ஒதுக்கீடு, செயலாக்கம் போன்ற அனைத்து அம்சங்களும் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டன.

திட்ட செயலாக்கத்தின் அதிகார பீடத்தில் அதுவும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் செயல்பட்ட மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தின் நிகழ்வுகள் இதுவரை வெளிவராத தகவல்கள். கோர்வையாக பல விஷயங்களை புரிந்து கொள்ள சட்டமன்ற நிகழ்வுகளை இப்போது இடையில் பின்தொடர்வது அவசியமாகிறது! பின்தொடர்வோமா?

வாருங்கள் "மெட்ராஸை பார்க்கப் போவோம். நாமும் மெட்ராஸ் கோட்டைக்குள் நுழைவோம்!".

காவிரி நன்னீர் சிறப்பு

புலம் பெயர்ந்த மக்கள்: 'விராலிக் கரடு' `மாதையன் கரடு' `உக்கம்பருத்திக் காடு' | அணை ஓசை 16

'விராலிக் கரடு' பெரியண்ணன்மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் மளிகை கடை நடத்தி வரும் திரு. ராஜேந்திரன் தனது டூவீலரில் என்னை அமர்த்திக் கொண்டு சிலரிடம் அழைத்துச் சென்றதில் 'விராலிக் கரடு' பெரியண்ணன் என்பவர... மேலும் பார்க்க

`15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டைக்கு எப்போதும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. அந்த மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளைவிடவும், இன்று அதன் மார்பின் மேல் உயர்ந்து நிற்கும் 'பப்ளிக் ஆபீஸ்' கட்டடம் என்று அழைக்கப... மேலும் பார்க்க

'தமிழகத்திலிருந்துதான் தேர்தல் முறை உலகமெங்கும் சென்றது'- தொல்லியல் துறை சி.சுதாகர்

இங்கு மக்களை நெறிப்படுத்துவதற்காகவே தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆதரவாளர்களைத் திரட்டி, ஆயுதம் ஏந்தவும் துணிந்தார்கள். இவ்வாறே மன்... மேலும் பார்க்க

''தண்ணீரிலே மூழ்கிடிச்சி'' - கிராம மக்களின் இடப்பெயர்வு; சாட்சிகளிடம் நேர்காணல் | அணை ஓசை 15

ஏழு வருடங்களில் அணைச்சுவரைஅரசுக்கு அனுப்பிய அறிக்கைசிறப்பு அதிகாரி அரசுக்கு அனுப்பிய ஓர் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. “மேட்டூர் கிராமத்திற்கு வடபுறம் பழைய மண்ணாலான கோட்டை ஒன்று ‘காவேரிபுரம்’ மற்றும்... மேலும் பார்க்க

`வருகிற மொத்த பணத்தையும் செலவு பண்ணிட மாட்டாங்க' - அந்தக் கால 'சத்திரங்களின்' நிதிக் கணக்கு!

சத்திரம் - இந்த வார்த்தையை நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருப்போம். வகுப்பறையில் ஆசிரியர், "இது ஒன்றும் சத்திரம் கிடையாது?" என்பார், மக்கள் பேச்சு வழக்கில் சத்திரம் என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துவ... மேலும் பார்க்க

புலம்பெயர்வு: கண்ணீர் வரவழைக்கும் பல கதைகள்; பாதிக்கப்பட்ட கிராமங்கள் | அணை ஓசை 14

தொடருக்காக நேர்காணல்புலம்பெயர்வுகண்ணீர் வரவழைக்கும் பல கதைகள் இருந்தன. மேட்டூர் அணை கட்டப்படுவதால் தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகள், கிராமங்களில் வாழ்ந்து வந்த பொதுமக்கள், முதியவர்கள், தங்கள் குழந்தை ... மேலும் பார்க்க