பங்குச் சந்தை இறக்கம்... இப்போது என்ன செய்ய வேண்டும்? - சுனில் சுப்பிரமணியம் காட...
`டிரெஸிங் ரூமில் நிறவெறி; அழவைத்த சக வீரர்கள்' - கசப்பான அனுபவம் பகிர்ந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆரம்பக்கால கிரிக்கெட் பயணத்தின்போது, தான் சந்தித்த நிறவெறி பாகுபாடுகள் குறித்த தனது கசப்பான அனுபத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
'Indian Express' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் லஷ்மன் சிவராமகிருஷ்ணன், "என்னுடைய வீட்டில் கிரிக்கெட் தொடர்பான பொருள்கள் எதுவும் இல்லை. எனது விளையாட்டு கால நினைவுகளில் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன். ஏனென்றால் அந்த அளவிற்கான அவமானங்களை நான் சந்தித்திருக்கிறேன்.

ஒரு முறை மூத்த பேட்ஸ்மேன் ஒருவர் என்னை அழைத்து அவருடைய காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார். நான் அவரை நிமிர்ந்து பார்த்து 'அது என் வேலையல்ல, நீங்கள் செய்ய வேண்டியதை நீங்களே செய்துகொள்ளுங்கள்' என்று கூறினேன்.
அந்த கிரிக்கெட் வீரர், என்னை மைதான ஊழியர் என்று தவறாக நினைத்துக்கொண்டார். இனவாதம் அல்லது நிற பாகுபாடு என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. இந்த மனிதர் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இது போன்ற நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
1982-83 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியில் எனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு வந்த சக இந்திய வீரர் ஒருவர், `சரியான நிறத்தில் கேக் ஆர்டர் செய்துள்ளீர்கள். கருப்பு நிற பையனுக்கு ஏற்ற டார்க் சாக்லேட் கேக்' என்று நிறத்தை வைத்து கேலி செய்தார்.
நான் கேக் வெட்ட மறுத்து அனைவர் முன்பும் கண்ணீர்விட்டு அழுதேன். பின்னர் சுனில் கவாஸ்கர் வந்து என்னை சமாதானப்படுத்தி கேக் வெட்ட வைத்தார்.

அதேபோல ஒருமுறை பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக மும்பையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நான் பங்கேற்றிருந்த போது பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்போது எனது தோற்றத்தைப் பார்த்த காவலாளி என்னை உள்ளே அனுமதிக்க மறுத்தார்.
சுமார் 1 மணி நேரம் கழித்து சக வீரர் ஒருவர் வந்த பிறகே என்னை உள்ளே அனுமதித்தார். ஓர் இந்திய வீரராக நான் இருந்தபோது இத்தகைய புறக்கணிப்புகளை நான் சந்தித்திருக்கிறேன்" என தனது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார்.



















