Vikatan : இந்தவாரம் தொடங்கப்பட்ட `புதிய' ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? |...
'டெல்லி சலோ' : திமுக-வா... தவெக-வா?'; பரபரப்பில் சத்தியமூர்த்தி பவன்!
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள்தான். "தி.மு.க-வே கதி" எனக் கார்கே, சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஒரு பக்கம் நிற்க... "ஏன் த.வெ.க-வுடன் கைகோக்கக் கூடாது?" எனக் கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்பு ரூட் மாற்றுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஐவர் குழு, "70 தொகுதிகள்... ஆட்சியில் பங்கு!" என ஸ்டாலினிடம் தூதுவிட்டது.

கொளுத்திப் போட்ட பிரவீண் சக்கரவர்த்தி!
இதனால் தி.மு.க, காங்கிரஸ் "கூட்டணி ஓகே" என அனைவரும் நினைத்த நேரத்தில், ராகுலுக்கு நெருக்கமான பிரவீண் சக்கரவர்த்தி திடீரென விஜய்யைச் சந்திக்க, கூட்டணிக்குள் நிலநடுக்கமே ஏற்பட்டது. "இது தனிப்பட்ட சந்திப்பு" எனத் தலைவர்கள் சமாளிப்பதற்குள், "தமிழ்நாடுதான் கடனில் முதலிடம்" எனக் கனிமொழியின் பேட்டியை வைத்தே ட்விஸ்ட் கொடுத்தார் பிரவீண்.
விளைவு? தி.மு.க பாசறையில் புகைச்சல் ஆரம்பமானது. கரூர் எம்.பி ஜோதிமணியோ, "சிலரின் சுயநலத்தால் காங்கிரஸ் அழிவுப்பாதையில் செல்கிறது" எனச் சீற, சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் ஏ.பி. சூர்யபிரகாசமோ, "தமிழக காங்கிரஸை தி.மு.க-வின் அடிமைக்கூடாரமாக மாற்றுகிறார் செல்வப்பெருந்தகை" என வெடிவைத்துவிட்டு வெளியேறினார்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், அவசர அவசரமாகச் சென்னைக்கு ஓடிவந்து, "எங்க கூட்டணி தி.மு.க-வோடுதான். த.வெ.க-வுடன் பேசுவதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி" என்றார். அதற்குள்ளாக அமைச்சர் ஐ.பெரியசாமி, "ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது... கூட்டணி ஆட்சிக்கு இடமே இல்லை" எனத் தெறிக்கவிட, "அதை டெல்லி பார்த்துக்கொள்ளும்" எனச் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுக்க... பரபரப்பு பற்றிக்கொண்டது!
"சி.எம் ரொம்ப அப்செட்!"
இப்படியான சூழலில்தான் சமீபத்தில் கூடலூர் வந்திருந்தார், ராகுல் காந்தி. அதில் பங்கேற்ற நீலகிரி எம்.பி ஆ.ராசா, "உங்க ஆட்கள் பேசுவது கூட்டணிக்கு வேட்டு வைக்கிறது. சி.எம் ரொம்ப அப்செட்!" எனச் சொல்ல, ராகுலோ கூலாக, "நான் பார்த்துக் கொள்கிறேன்" என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாக பரபரப்பை கிளப்பியது.
இப்படி நிலைமை திக் திக்... என இருக்கும் சூழலில்தான் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை' எனச் சொல்லிப் பரபரப்பை எகிற வைத்தார். இதற்கிடையில்தான் தமிழக காங்கிரஸாருக்கு டெல்லி அவசர அழைப்பு விடுத்திருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள் சிலர், "தமிழக காங்கிரஸில் தி.மு.க, த.வெ.க என இரண்டு தரப்பு இருக்கிறது. சமீபத்தில் சச்சின் பைலட் அளித்த பேட்டிக்குப் பின்னால் கூடக் கரூர் எம்.பி ஜோதிமனிதான் இருக்கிறார். இதற்கிடையில் தலைவர் ராகுல் தனியாக எடுத்த சர்வேயில், 'தி.மு.க சரியான மரியாதை கொடுப்பதில்லை. எனவே, த.வெ.க-வுடன் செல்லலாம்' எனப் பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதையடுத்துத்தான் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்பதற்கு அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அதன்படி இன்று மாலை டெல்லி இந்திரா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் தரும் பதிலையடுத்து ராகுல் கூட்டணிகுறித்த இறுதி முடிவை எடுப்பார். இதற்கிடையில் த.வெ.க-வுடன் செல்லும் முடிவை அகில இந்திய தலைமை எடுத்தால் தனது பதவியை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்யக்கூடும்" என்றனர்.
இப்படியான நிலையில் காங்கிரஸ் கூடாரம், பரபரப்புடனே காணப்படுகிறது.
















