பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகனங்கள்; வாட்டர் பாட்டில், கேன்களில் நிரப்பி சென்ற...
`டேமேஜை சரிக்கட்டும் அன்பில்? டு வாய்திறக்காத சிட்டிங் MLA-க்கள்; கொதிக்கும் சிறுத்தைகள்' | கழுகார்
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் வி.சி.க - தி.மு.க இடையே நாளுக்கு நாள் கசப்பு மேலோங்கி வருகிறது. வி.சி.க மாணவரணி மாநில நிர்வாகி நெப்போலியன் என்பவர் வெளியிட்ட பதிவில், 'தி.மு.க-விலிருக்கும் தலித் அமைச்சர்களும் நிர்வாகிகளும் வி.சி.க-வை காலி செய்துவிட வேண்டும். அவர்களை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது' என்று பதிவிட, விவகாரம் கட்சிக்குள் தீயாய் பரவுகிறது. 'குறைந்த சீட்டுகளில் நம்மை முடிக்கப் பார்க்கிறது தி.மு.க' என்ற கோபத்தில் கட்சி தொண்டர்கள் கொதிக்கிறார்கள்.

ஆனால், எதுவுமே நடக்காதது போல சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் நால்வரும் தங்களுக்கான சீட்டுகளை உறுதிசெய்ய அவரவருக்கு தெரிந்த ஆளுங்கட்சி லாபிகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இதனால், 'இப்படிப்பட்ட கையறு நிலையில்கூட கட்சிக்காகக் குரல் கொடுக்காத சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை தலைவர் கட்டம் கட்ட வேண்டும்' என்ற குரல் வி.சி.க-வுக்குள் ஓங்கி ஒலிக்கிறது.
தலைநகரைச் சேர்ந்த சிட்டிங் கதர் எம்.எல்.ஏ இம்முறை தொகுதி மாறத் திட்டமிடுகிறாராம். அவர் பிறந்து வளர்ந்த வடசென்னை பகுதியில் இருக்கும் தொகுதியைக் கேட்டு சத்தியமூர்த்தி பவனில் காய் நகர்த்தி வருகிறாராம். அந்தத் தகவல் தெரிந்ததில் இருந்து, சம்பந்தப்பட்ட தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ கடும் அப்செட். 'இரண்டு முறை தொடர்ச்சியாக தொகுதியில் வென்றிருக்கிறார் எங்கள் எம்.எல்.ஏ. அவர் இம்முறையும் வெற்றிபெற்று அமைச்சராகும் கனவுடன் தொகுதியில் வேலையையும் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டார். இந்தச் சூழலில், கதர்க் கட்சியின் எம்.எல்.ஏ இங்கு ஜாகை மாறவிருப்பதால், கடும் மன உளைச்சலில் இருக்கிறார்' என்கிறார்கள் உடன்பிறப்புகள். சுதர்சன சக்கரத்தை வீசி வெற்றியை ஈட்டும் மகாவிஷ்ணு போல அந்த தி.மு.க எம்.எல்.ஏ., தன் தொகுதியைத் தக்கவைப்பதற்காக தன்னுடைய ஸ்டைலில் மாம்பழக் கூடைகளோடு 'சித்தரஞ்சன் சாலை'க்கு விசிட் அடிக்க ஆரம்பித்திருக்கிறாராம்.
வரும் தேர்தலில், காரைக்குடிக்குப் பதிலாக சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க அறிவாலயத்தில் பேச்சுவார்த்தைகள் தடதடக்கின்றனவாம். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், இப்போதே காரைக்குடி தொகுதியைக் கேட்டு தி.மு.க உடன்பிறப்புக்கள் முட்டி மோதத் தொடங்கியிருக்கிறார்கள். அதிலும், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளரான ஜோன்ஸ் ரூஸோ, தனது சீனியாரிட்டி மற்றும் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து சீட்டுக்காக கடுமையாகவே காய் நகர்த்துகிறாராம். அதேநேரத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், துணை முதல்வரிடம் தனக்குள்ள செல்வாக்கை வைத்து 'சீட்' ரேஸில் நுழைந்திருக்கிறாராம். இருவரும் அறிவாலயம், அன்பகம் என்று மாறி மாறி முட்டி மோதுவதால் காரைக்குடி அரசியலில் அனல் பறக்கிறது.
'ஜெயில் மாஜி'யுடன் சேர்த்து 'இனிப்பு' மாண்புமிகுவுக்கும் கொங்கு மண்டலத்தில் ஏராளமான தொகுதிகளை பொறுப்பாக அளித்திருக்கிறது சூரியக் கட்சியின் தலைமை. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, கொங்குப் பகுதியில் தடம் பதிக்கத் தீவிரம் காட்டி வருகிறாராம் 'இனிப்பு' மாண்புமிகு. அதேசமயம், தன்னுடைய தொகுதியில் வெற்றியைத் தவறவிடக்கூடாது என்பதற்காக, இப்போதே தொகுதியில் பரிசு மழையைப் பொழிந்து கொண்டிருக்கிறாராம் அவர். இன்னொரு பக்கம், 'ஜெயில் மாஜி'யும் இப்போதே தனது தொகுதியில் கொலுசு தொடங்கி எக்கசக்க பரிசுப் பொருள்களை வாரி இறைக்கிறாராம். இவர்கள் இருவருக்கும் இடையேயான போட்டா போட்டியில் தொகுதிவாசிகள் படு குஷியில் இருக்கிறார்கள்.
தஞ்சாவூர் நிர்வாகிகள் சந்திப்பின்போது, த.வெ.க தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜுக்கு சொந்தமான காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் அந்த இளைஞரை, த.வெ.க-வினர் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லையாம்.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ், அந்த இளைஞரை நேரில் பார்த்து நலம் விசாரித்ததுடன், அவரது பெற்றோரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இளைஞரின் மருத்துவச் செலவுகளுக்கும் பொறுப்பேற்றிருக்கிறாராம். கரூர் துயர சம்பவத்தில் 'கண்டிஷனை பாலோ பண்ணுங்க' என்று அமைச்சர் பேசி அழுதது சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், 'த.வெ.க-வினரே கண்டுகொள்ளாத தொண்டரை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பதால், கரூர் விவகாரத்தில் டேமேஜான தன்னுடைய பெயரை சரிக்கட்டப் பார்க்கிறார் அமைச்சர்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.















