"தோழமை தொடர்வோம்; களத்தில் வெல்வோம் -175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது!"- ...
தத்தெடுத்த குழந்தைகள் பெரும்பாலும் உயிரோடு இல்லை; ஆனாலும்..! - பேரன்புக்காரார் முகமது பீஸிக்
'முகமது பீஸிக் தத்தெடுத்த குழந்தைகள் பெரும்பாலும் இப்போது உயிரோடு இல்லை' - இந்த வாக்கியத்தைப் படிக்கும் போது அதிர்ச்சியாக தான் இருக்கும். ஆனால், இதற்குப் பின் பெரிய 'பேரன்பு' கதை உள்ளது.
பெரும்பாலும், உயிருக்கு ஆபத்தான நோய் உள்ள குழந்தைகளை யாருமே தத்தெடுக்கமாட்டார்கள். ஆதரவற்றோர் இல்லத்திலோ, விடுதியிலோ வளரும் இவர்கள் அன்பிற்கு மிகவும் ஏங்குவர். மேலும், நீண்ட நாள்களாக தனிமையில் வேறு காலத்தைக் கழித்து வருகின்றனர்.
இந்தக் குழந்தைகளைத் தான் முகமது பீஸிக் தத்தெடுத்து வளர்க்கிறார்.

பிறந்த சில வாரங்களான இப்படிப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்குப் பெயர் வைத்து, அன்பு கொடுத்து, அவர்களுடைய கடைசி மூச்சு வரை கூடவே இருந்து, தேவையான எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதே முகமது பீஸிக்கின் வாழ்க்கை.
இதுவரை 80-க்கும் மேற்பட்ட குழந்தைகளை இவர் வளர்த்துள்ளார். அதில் சில குழந்தைகள் இவரது பராமரிப்பிலேயே உயிர் நீத்துள்ளனர்.
இவர் இந்த வாழ்க்கையைத் தொடங்கியதற்கான ஊக்கம் இவரின் மனைவி டான். டான் குடும்பம் வளர்ப்புப் பெற்றோராக இருந்திருக்கின்றனர். அதைப் பார்த்து வளர்ந்த டானுக்கு வளர்ப்பு பெற்றோராக இருக்க விருப்பம்.
1989-ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு, முகமது பீஸிக் - டான் இணைந்து முதலில் வளர்ப்புப் பெற்றோராக இருந்திருக்கின்றனர்.
பின்னர், உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் இருக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
2016-ம் ஆண்டு டான் இறந்த பிறகும், அவரது நினைவுகளுடன் இந்தச் சேவையை முகமது பீஸிக் தொடர்ந்து செய்து வருகிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில், உயிருக்கு ஆபத்தான நோயுள்ள குழந்தைகளை வளர்க்க முன்வரும் வளர்ப்புப் பெற்றோர்களில் இவரும் ஒருவர்.

தற்போது அசுசாவில் உள்ள இவரது வீட்டில் குழந்தைகளுடன் தொடர்ந்து வசித்து வருகிறார். மருத்துவத் தேவைகளுக்காக பயிற்சி பெற்ற நபர்களின் உதவியும் இவருக்கு கிடைக்கிறது.
இந்த குழந்தைகள் பலரும் நீண்ட காலம் வாழ வாய்ப்பு இல்லாதவர்கள் என்பதால், பெரும்பாலான வளர்ப்புப் பெற்றோர்களும் அவர்களை ஏற்க தயங்குகிறார்கள்.
ஆனால் முகமது பீஸிக், “இந்தக் குழந்தைகளுக்கு நீண்ட வாழ்க்கை இல்லையென்றாலும், அன்பு நிறைந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும்”
என்பதையே தனது கொள்கையாக வைத்துள்ளார்.
மருத்துவமனையின் இயந்திர சத்தங்களுக்கிடையில் அல்லாமல், ஒரு வீட்டின் அமைதியிலும் அன்பிலும் அந்தக் குழந்தைகள் தங்கள் நாள்களைக் கழிக்க வேண்டும் என்பதே இவரது விருப்பம்.
முகமது பீஸிக் 2016-ம் ஆண்டு பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அந்த அனுபவத்தை நினைவுகூரும் போது, “60 வயதில் தனியாக சிகிச்சைக்குச் செல்வதே எனக்கு பயமாக இருந்தது. அப்படியிருக்க, இந்தக் குழந்தைகள் தங்களின் கடைசி நேரங்களில் எப்படி உணர்ந்திருப்பார்கள்?" என்று கேட்கிறார்.
“நான் வளர்க்கும் ஒவ்வொரு குழந்தையும் என் சொந்தக் குழந்தைகள்தான். அவர்களுக்கான அன்பை என்னால் முடிந்த அளவு தருவேன்" என்றும் சொல்லியுள்ளார்.

இவரது சொந்த மகன் அடாமிற்கு உடையக்கூடிய எலும்பு நோய் மற்றும் குள்ளத்தன்மை உள்ளது. அவரும் இந்தக் குடும்பத்தின் ஒரு பகுதிதான்.
உடல்நலம் அனுமதிக்கும் வரை இந்தச் சேவையைத் தொடர வேண்டும் என்பதே முகமது பீஸிக்கின் முடிவு.
சமூகத்தில் பலர் கவனிக்காமல் கடந்து செல்லும் இந்தக் குழந்தைகளுக்கு, இவர் ஒரு குடும்பமாகவும், பாதுகாப்பாகவும், இறுதி ஆறுதலாகவும் இருந்து வருகிறார்.














