'மாநகராட்சியில் சொத்துக்கணக்கை காட்டாத மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள்!' - ...
"தனித்துவமான நடிப்பு பாணியை உருவாக்கிய கலைஞன் சலிம்குமார்"- வி.டி.சதீசன், பினராயி விஜயன் புகழஞ்சலி!
300-க்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்து பல்வேறு விருதுகளை பெற்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன், எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரள முதல்வர் வி.டி.சதீசன் தனது இரங்கல் பதிவில், "சலிம்குமார் எனக்கு வெறும் புன்னகையின் மன்னன் மட்டுமல்ல, அவருக்கும் எனக்கும் இடையே மிகவும் தீவிரமான ஓர் ஆத்மார்த்த பந்தம் இருந்தது. எனது சொந்த ஊரின் பெருமையாக விளங்கிய ஒருவர். 'எனக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது' என்று உரக்கச் சொன்ன மனிதர். தனது தனிப்பட்ட இழப்புகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், தன் அரசியல் நிலைப்பாட்டின் உறுதியைத் திரும்பத் திரும்பச் சொன்னவர். 'நான் ஒரு காங்கிரஸ்காரன்' என்று சொல்வதற்கு யாருக்கும் பயப்படாத துணிச்சலான கலைஞர். எனது தேர்தல் களங்களில், தேர்தல் குழு அலுவலகத்தைத் திறக்கும் உரிமையைத் தன் சொந்த உரிமை போலப் பிடிவாதமாகப் பெற்றுக் கொண்டவர் சலிம்குமார். கட்சியின் வெற்றிகளில் அந்த அளவிற்கு மகிழ்ச்சியடைந்த என் உடன் பிறந்த சகோதரர் அவர். நகைச்சுவை மட்டுமன்றி எந்தக் கதாபாத்திரமும் தனக்கு மிக எளிதாகக் கைவரும் என்பதைப் பலமுறை அவர் நிரூபித்திருக்கிறார். நடிப்பின் பல்வேறு தளங்களிலும் வழிகளிலும் சலிம்குமார் உலகத்தரம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். முகத்தின் ஒரு பக்கத்தால் சிரிப்பை வாரி வழங்கும்போது, மறுபக்கத்தால் கண்ணீரின் ஈரப்பதத்தை நம் இதயங்களுக்குள் கடத்தியவர் சலிம்குமார். மலையாள சினிமா ஒரு மாபெரும் திறமையாளரையும், நான் எனது உடன் பிறந்த சகோதரரையும் இழந்துவிட்டோம். சலிம்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், "திரைப்பட கலைஞர் சலிம்குமாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன். சலிம்குமாரின் மறைவு மலையாளத் திரைப்படத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். ஒரு மிமிக்ரி கலைஞராகத் தொடங்கி, நகைச்சுவை நடிகராக மாறி, பின்னர் தேசிய விருது வரை வென்றெடுத்த ஒரு சிறந்த நடிப்புத் திறமையாளராக அவர் மேற்கொண்ட பயணம், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு எப்போதும் ஒரு ஊக்கமாய் அமையும். மற்றவர்களைப் பார்த்து நகல் எடுக்காமல், தனக்கென்று ஒரு தனித்துவமான நடிப்பு பாணியை உருவாக்க சலிம்குமாரால் முடிந்தது. நகைச்சுவையின் புதிய பரிமாணங்களை அனுபவித்த ரசிகர்கள், அவருடைய கதாபாத்திரங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர். தமக்கு நகைச்சுவை மட்டுமன்றி அனைத்துமே கைவரும் என்பதை நிரூபித்த சலிம்குமார், தனது நடிப்பை புதிய தளங்களுக்கு வளர்த்தெடுத்ததை கேரள மக்கள் வியப்போடும் பெருமையோடும் வரவேற்றனர். அவருடைய நினைவு நம் இதயங்களில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும். சலிம்குமாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஏற்பட்டுள்ள துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். அவருக்கு எனது அஞ்சலிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தனது இரங்கல் குறிப்பில், "தனது வித்தியாசமான நகைச்சுவை மூலம் தலைமுறைகளைச் சிரிக்க வைத்த ஒரு அரிய திறமையாளர் அவர். நகைச்சுவைத் தாண்டி, இதயம் தொடும் வலிமையான கதாபாத்திரங்கள் மூலமும் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையை நிரூபித்தார். மலையாள சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துவிட்டு அவர் விடைபெறுகிறார். அவர் உயிர் கொடுத்த அழியாத கதாபாத்திரங்கள் மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மோகன்லால் தனது இரங்கல் குறிப்பில், "ரசிகர்களை ஒரே நேரத்தில் சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் செய்த எத்தனையோ சிறந்த கதாபாத்திரங்களைப் பரிசாக அளித்துவிட்டுத்தான் அன்பிற்குரிய சலிம்குமார் விடைபெற்றிருக்கிறார். தேசிய விருது வரை வென்ற அசாத்திய திறமை கொண்ட கலைஞர். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதிலும், அவர்களைத் தன் சொந்தச் சகோதரர்களைப் போல அணைத்துக் கொள்வதிலும் அப்பழுக்கற்ற அன்பிற்குச் சொந்தக்காரர். பல திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சினிமாவிற்குள்ளும் வெளியேயும் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பராகவும் விளங்கினார். சமூகப் பிரச்னைகளைக் கூர்ந்து கவனிப்பதும், அதைப் பற்றித் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்யும் குடிமைப் பொறுப்பும் எல்லாக் காலத்திலும் அவரிடம் இருந்தது. பிரியமான நண்பனுக்கு வேதனையுடன் என் அஞ்சலிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ள இரங்கல் குறிப்பில், "சிரித்துக் கொண்டும், மற்றவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டும், சிந்தித்துக் கொண்டும், மற்றவர்களைச் சிந்திக்க வைத்துக் கொண்டும், இடையில் அழுதும், மற்றவர்களை அழவைத்தும் வந்த சலீம்...
இப்போது நீ எங்களை அழ வைத்துக் கொண்டு மட்டும்தான் இருக்கிறாய். சகோதரா, உன்னுடைய மறைவு ஒருபோதும் தீராத பெரும் துயரமாக மாறிவிட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார்.




















