சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசரவைத்த போட்டியாளர்கள் - ஈரோட்டில் கவனம் ஈர்த்த குதிரை...
தனியாக 4 பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தந்தை; முதியோர் இல்லத்தில் இறந்தபோது பார்க்கவராத பிள்ளைகள்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்ந்த கன்ஷ்யாம் என்பவர் தனது மனைவி இளம் வயதில் 4 குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்ட நிலையில் தனியாக வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளைப் போராடி வளர்த்தார்.
இந்தூரில் மிதிவண்டி டயர் மற்றும் டியூப் விற்பனை செய்யும் ஒரு சிறிய தொழிலை நடத்தி வந்த அவர், ஒரு சாதாரண வீட்டில் இருந்து கொண்டு தனது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு குழந்தைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தார்.
நான்கு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள் நாட்டின் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக வசிக்கின்றனர்.

ஆனால் கன்ஷ்யாம் தனது வாழ்நாளின் கடைசி நான்கு ஆண்டுகளை, குடும்பத்தினரின் அன்பும் அரவணைப்பும் இன்றி போபாலில் உள்ள 'அப்னா கர்' எனும் முதியோர் இல்லத்தில் கழிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இறப்புச் சான்றிதழை மட்டும் அனுப்புங்கள்
கடந்த 4-ஆம் தேதி கன்ஷ்யாம் இறந்துபோனார். முதியோர் இல்லத்தினர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து, போபாலுக்கு வருமாறு அவர்களைத் தொடர்ந்து வற்புறுத்தினர். ஆனால், அவர்கள் வருவதற்குச் சாக்குப்போக்குகள் கூறினர்.
அவர்கள் எப்படியும் தந்தையைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கையில் உடலை இரண்டு நாட்கள் அடக்கம் செய்யாமல் வைத்திருந்தனர். ஆனால் நான்கு பிள்ளைகளில் யாரும் வரவில்லை. நீண்ட இழுபறிக்குப் பிறகு, அவரது உடலைத் தகனம் செய்துவிட்டு, இறப்புச் சான்றிதழை மட்டும் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு முதியோர் இல்லத்தினரிடம் பிள்ளைகள் கேட்டுக்கொண்டனர்.
இது குறித்து அப்னா கர் முதியோர் இல்லத்தை நடத்தும் மாதுரி மிஸ்ரா கூறுகையில், "அவரது மனைவி இறந்தபோது, அவரது இளைய மகளுக்கு வயது இரண்டுதான். ஒரு காலத்தில் ஒரு தந்தையால் தனியாக மனைவி இல்லாமல் நான்கு அல்லது ஐந்து குழந்தைகளை வளர்க்க முடிந்தது. ஆனால் இன்றோ, நான்கு குழந்தைகள் சேர்ந்து ஒரு தந்தையைக் கூடக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. கன்ஷ்யாம் தனது சொத்துக்களை விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தை தனது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொடுத்துவிட்டார்.
'அவரை எனக்கு தெரியாது'
கன்ஷ்யாம் கொடுத்த போன் நம்பருக்கு நாங்கள் அழைத்தபோது, 'எனக்கு அவரைத் தெரியாது, நான் அவரை விட்டுவிட்டேன். அவருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று போனில் பேசிய நபர் குறிப்பிட்டார். மேலும், தந்தையின் வீட்டில் கிடைத்த பணம் சகோதர சகோதரிகளுக்கு இடையே பிரித்து வழங்கப்பட்டுவிட்டதாகவும், இனி அவர்களுக்கும் தங்கள் தந்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எங்களிடம் அந்த நபர் தெரிவித்தார்.
கன்ஷியாம் எங்களிடம் வந்தபோது, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மேலும் அவரால் பேச முடியவில்லை. அவர் ஒரு சிறிய டயர், டியூப் கடை மற்றும் ஒரு சிறிய வீடு இருப்பதாக எங்களிடம் கூறினார். அவரது உடலில் பாதி செயலிழந்துவிட்டது.
போபாலின் பேருந்து நிலையத்தில் கன்ஷியாமைச் சில இளம் சமூக சேவகர்கள் கண்டுபிடித்து அப்னா கர்க்கு அழைத்து வந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் கன்ஷ்யாமிற்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போதெல்லாம், நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் அவர்கள் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து அவரைப் பராமரித்து வந்தோம்" என்று அவர் கூறினார்.



















