தவெக: ``என்னை மட்டும் போகஸ் செய்து விமர்சிக்கிறார்கள்!" - எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ...
தனியார் டிவி ரிப்போர்டரை வீடு புகுந்து தாக்கிய கும்பல்; கஞ்சா போதை காரணமா? திருவாரூர் போலீஸ் விசாரணை
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (38), இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரிப்போர்டராக வேலை செய்கிறார். நேற்று கோவிலூர் பகுதியில் செய்தி சேகரிக்க சென்று விட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இரவு வழக்கம் போல் வீட்டில் ஹாஜா தூங்கி கொண்டு இருந்துள்ளார். சுமார் 11.30 மணியளவில் அப்துல் பாசித் என்பவர் தலைமையில் மொத்தம் நான்கு பேர் ஹாஜா முகைதீன் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.

வீட்டில் இருந்த அவரது மாமியார் கதவை திறக்க ஹாஜா முகைதீனிடம் பேச வேண்டும் வரச்சொல்லுங்கள் என்றுள்ளனர். அவர்கள் போதையில் இருந்ததால் `ஹாஜா தூங்குறார் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம்' என சொல்லியிருக்கிறார். உடல், ரொம்ப அவசரம் என்று அவர்கள் சொல்ல, மாமியார் ஹாஜாவை எழுப்பி வரவைத்தார். அப்துல் பாசித் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவர் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அப்துல் பாசித் தன்னை தாக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என ஹாஜாவிடம் சொல்லி அழைத்திருக்கிறார்.
`நான் ஸ்டேஷன்ல சொல்றேன், நீங்க போய் புகார் கொடுங்கள்' என ஹாஜா உடன் செல்வதற்கு மறுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து அப்துல் பாசித் தரப்பு வலுக்கட்டாயமாக அழைக்க வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அப்துல் பாசித் கும்பல் கத்தியால் ஹாஜா நெஞ்சில் குத்தி கிழித்துள்ளனர். மேலும் பாட்டிலால் தலையில் அடித்து விட்டு செல்போனை பிடிங்கி கொண்டு தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த ஹாஜா மயக்கமடைய... அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த ஹாஜா தற்போது தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். இது குறித்து ஹாஜா தரப்பினர், ``நள்ளிரவில் வீட்டுக்கு வந்து தாக்குதல் நடத்திய கும்பல் கஞ்சா போதையில் இருந்ததாக தெரிகிறது. ஒரு பத்திரிகையாளருக்கு இந்த நிலை என்றால் என்ன சொல்வது. போலீஸார் உரிய விசாரணை நடத்தி அந்த கும்பல் மீண்டும் இது போன்ற சம்வங்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
















