செய்திகள் :

தவெகவில் இணைகிறாரா சி.விஜயபாஸ்கர்? - தொகுதியில் `திடீர்' சந்திப்பு கூட்டம்; தொடரும் கருத்துக் கேட்பு

post image

தமிழக அரசியலில் தினமொரு திருப்பம் அரங்கேறி வரும் வேளையில், தவெக அரசுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் சில்லு சில்லாகச் சிதறிய அண்ணா திமுக, இப்போது திடீரென ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால், இந்த ஒட்டுதல் நிரந்தரமானதா அல்லது அடுத்த புயலுக்கு முந்தைய அமைதியா என்கிற திக் திக் கேள்வியோடு புதுக்கோட்டையில் சுழன்றடிக்கிறது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அரசியல் வியூகம்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அண்ணா திமுக-வுக்குள் உட்கட்சிப் போர் வெடித்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்ததும், சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இ.பி.எஸ்-ஸின் உத்தரவை மீறி சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கடுப்பான இபிஎஸ் தரப்பு, இவர்களைத் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்தது.

ஆனால், தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்காததால், கடந்த புதன்கிழமை இபிஎஸ் இல்லத்தில் ஒரு ‘திடீர்’ சமாதானப் படலம் அரங்கேறியது. வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் இபிஎஸ்-ஸைச் சந்தித்து சமாதானம் ஆயினர். இரு தரப்பும் தகுதிநீக்கப் புகார்களை வாபஸ் பெற்றன. ஆனால், இந்தச் சமாதானக் கூட்டத்தில் சி.வி.சண்முகம் ‘ஆப்சென்ட்’ என்பதுதான் அண்ணா திமுகவின் தற்போதைய ஆகப்பெரிய சஸ்பென்ஸ்

விராலிமலையில் வெடித்த ‘அவசியக் கூட்டம்’:

இந்தச் சமாதானப் படலம் முடிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், புதுக்கோட்டையில் தன் ஆதரவாளர்களைத் திரட்டி ‘அதிரடி’ காட்டியிருக்கிறார் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.வி.விஜயபாஸ்கர். சென்னையிலிருந்து நேராக விராலிமலை தொகுதிக்கு வந்த விஜயபாஸ்கரின் இலுப்பூர் இல்லத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. 

செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த சி.விஜயபாஸ்கர், ``இங்கு எந்தவித அவசரக் கூட்டமும் நடைபெறவில்லை. வழக்கமாக நான் சென்னையிலிருந்து நம்முடைய தொகுதிக்கு வந்தவுடன், காலையில் என்னுடைய இல்லத்தில் இருப்பது வழக்கம். ஆனால், இன்றைய தினம் மிகக் கடுமையான கூட்டம் கூடியுள்ளது. நீங்கள் குறிப்பிட்டது போல இது அவசரக் கூட்டம் அல்ல; ஓர் அவசியமான கூட்டமாகவே தெரிகிறது. நம்முடைய கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட அவைத் தலைவர்கள் தொடங்கி, ஒன்றியக் கழக மற்றும் நகரக் கழகச் செயலாளர்கள், அதேபோல விராலிமலை தொகுதியைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள், தேர்தலில் எனக்காக மிகக் கடுமையாகத் தொடர்ந்து பணியாற்றிய கழக நிர்வாகிகள், நண்பர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் அன்பு தம்பிகள் என என்னோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இன்றைய தினம் வருகை தந்துள்ளனர். அவர்கள் அனைவரும் என்னைச் சந்திக்க வேண்டும் என்றும், அவர்களின் கருத்துக்களை நான் கேட்டு அதற்குச் செவிமடுக்க வேண்டும் என்ற முறையிலும் நான் அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன்" என்றார்.

கேள்வி: `இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தையில் மூன்று தெரிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார்களே, நீங்கள் கட்சிக்குள் என்னென்ன கருத்துக்களை முன்வைத்தீர்கள்?'

சி.விஜயபாஸ்கர்: ``முதற்கண் ஒரு விஷயம், நம்முடைய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்தான் நம்முடைய பயணம் தொடர்கிறது. அதே நேரத்தில், எனக்கு மிக முக்கியமானது என்னுடைய தொகுதி மக்கள் மட்டுமே. அதுவே என்னுடைய முதல் முன்னுரிமை  ஆகும். இந்த மாபெரும் அலையில்கூட, 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தவர்கள் விராலிமலை மக்கள். இந்த மக்களுக்கு நான் நன்றியுடையவனாக இருக்க வேண்டும், அவர்களுக்குப் பணியாற்ற வேண்டும். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும். அது மிக மிக முக்கியமான விஷயம். எனக்காக உழைத்தவர்களிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டியது என் கடமை. அதனடிப்படையில் அவர்கள் பல்வேறு கருத்துக்களை ஆதங்கமாகவும், வருத்தத்தோடும், வேகமாகவும் வெளிப்படுத்தினர். அந்த அனைத்துக் கருத்துக்களையும் நான் உள்வாங்கியுள்ளேன். கருத்துக்களைக் கேட்பது என் கடமை என்பதால் அவற்றுக்குச் செவிமடுத்து, பொறுமையாகக் கேட்டுள்ளேன். அவர்களைப் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். ஆனால், அவர்கள் மிகுந்த வேகத்துடன் இருக்கிறார்கள். இதுதான் காலையில் நடைபெற்றது."

கேள்வி: `அவர்கள் என்னென்ன கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்?'

சி.விஜயபாஸ்கர்: ``அவர்கள் பல கருத்துக்களைக் கூறினர்..."

கேள்வி: `தனித்துவமாகப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறதே?'

சி.விஜயபாஸ்கர்: ``யூகங்களுக்குப் பதில் கூற இயலாது. அவர்கள் எண்ணற்ற கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். மிக முக்கியமாக உங்களுக்குத் தெரியும், தற்போது எனக்கு 51 வயது ஆகிறது. 25 ஆண்டுக்காலப் பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையைக் கடந்து வந்திருந்தாலும், கல்லூரியிலிருந்தே அண்ணா திமுக என்ற மாணவர் பருவ அமைப்பிலும், தந்தையின் காலத்திலிருந்தும் இணைந்து, கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து பொது வாழ்க்கையில் நான் பயணிப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளேன். கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் தொய்வில்லாமல் பயணித்து வருகிறேன். கொரோனா பேரிடர் காலத்தில் என் உயிரைப் பொருட்படுத்தாமல், தமிழக மக்களுக்காக நான் பணியாற்றியது உங்களுக்கே தெரியும். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைத்தது முதல், காவேரி - குண்டாறு இணைப்புத் திட்டம் வரை பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். எனவே, தற்போதும் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே எண்ணம். எனக்கு எப்போதும் மக்களுக்கு அடுத்தே மற்றவை. அந்த மக்களுடைய நம்பிக்கையும் அவர்களின் முடிவுமே என்னுடைய முடிவாக இருக்கும். இதுவே என்னுடைய இறுதி நிலைப்பாடு."

கேள்வி: `முன்பு செங்கோட்டையன் அண்ணா திமுக-விலிருந்து பிரிந்து சென்றபோது, அவரும் பொதுமக்களிடமும் தொகுதி மக்களிடமும் கருத்துக்களைக் கேட்டுத்தான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி தமிழக மக்களிடம் சென்றார். தற்போது உங்களுக்கும் அத்தகையதொரு சூழ்நிலை நிலவுகிறதா?'

சி.விஜயபாஸ்கர்: ``இல்லை, தற்போதைய சூழல் அதுவல்ல. நான் வழக்கம்போல காலையில் அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்துள்ளேன். ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் எனத் தொகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ, நான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ, அந்த நம்பிக்கையை நான் நிச்சயமாகக் காப்பாற்றுவேன். இது முதலாவது விஷயம். எனக்காக என்னோடு பயணித்தவர்கள், கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள், ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்கள் என்ன கருத்துக்களைக் கூறுகிறார்களோ, அது இரண்டாவது விஷயம். சுருக்கமாகக் கூறின், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அவர்களின் முடிவுதான் என்னுடைய முடிவாக இருக்கும். கருத்துக்களைக் கேட்கத் தொடங்கியுள்ளேன். காலையில் பல்வேறு கருத்துக்களைக் கேட்டு, அவற்றுக்குச் செவிமடுத்து உள்வாங்கியுள்ளேன். இவ்வளவுதான் இதிலுள்ள விஷயம்."

கேள்வி: `விராலிமலை மக்கள் மூன்று முறையும் உங்கள் மீது அன்பு செலுத்தி, ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு வித்தியாசத்தை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளனர். அந்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனில், நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் அல்லவா? அது என்ன மாற்றம் என்று கூறிவிடுங்களேன்!'

சி.விஜயபாஸ்கர்: ``அதற்காக மாற்றம் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அவர்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் நான் தீவிரம் காட்டி வருகிறேன். விராலிமலை மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் எனக்கு வாக்களித்தார்களோ, அதை நான் செய்ய வேண்டும். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். என்னோடு பயணிப்பவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகே எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும். தற்போது கருத்துக்களைக் கேட்டுள்ளேன், அவ்வளவுதான்."

கேள்வி: `அண்ணா திமுகவில் நீங்கள் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளீர்கள், அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள். அண்ணா திமுகவின் தற்போதைய செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா? ஏனெனில், இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்த நீங்கள் நேற்றுதான் ஒன்று சேர்ந்துள்ளீர்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய தினம் நீங்கள் அதிரடியாகக் கூட்டம் கூட்டி கருத்துக்களைக் கேட்பதை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்வது?'

சி.விஜயபாஸ்கர்: ``நான் மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். இதில் 'அதிரடி', 'பரபரப்பு' போன்ற வார்த்தைகள் தேவையில்லை. நான் மிகுந்த நிதானத்துடனும், பொறுமையுடனும், அமைதியுடனும் இருக்கிறேன். கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கருத்துக்களைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன். அதனால்தான் மதியம் 12 மணிக்கு மேல் கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு, தற்போது திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். நீங்களும் என்னைச் சூழ்ந்துகொண்டதால் இதற்குப் பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். அனைவரும் வந்து சந்தித்துத் தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர், அதைக் கேட்க வேண்டியது என் கடமை."

கேள்வி: `நாளை சபாநாயகரைச் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?'

சி.விஜயபாஸ்கர்: ``நாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் எண்ணற்ற திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எனக்கு நாளொன்றுக்கு 40 முதல் 50 அழைப்பிதழ்கள் வருகின்றன. என்னுடைய பயணம் அதை நோக்கியே இருக்கும்."

கேள்வி: `நேற்று இரண்டு அணிகளும் இணைந்துவிட்டதாக அனைத்து அதிமுகவினரும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். தற்போது நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள்?'

சி.விஜயபாஸ்கர்: ``புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில்தான் என்னுடைய பயணம் தொடர்கிறது என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்."

கேள்வி: `இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசும்போது, 90 சதவீத அதிமுகவினர் இன்னும் வந்து இணைந்துகொண்டிருக்கிறார்கள் என்றும், சனிக்கிழமை கூட பல முன்னாள் அமைச்சர்கள் இணைய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளாரே?'

சி.வி.விஜயபாஸ்கர்: ``நான் திருமண நிகழ்ச்சிகளில் இருந்ததால் அந்தச் செய்தியையோ, பேட்டியையோ பார்க்கவில்லை. இதில் எவ்வித ஒளிவுமறைவும் இல்லை. நீங்கள் எவ்வளவு ஆர்வமாகக் கேட்டாலும் என்னுடைய பதில் ஒன்றுதான். காலையில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்தது உண்மை. நான் எதிர்பார்க்காத அளவிற்கு எண்ணற்ற மகளிரும், இளைஞர்களும், ஒன்றிய மற்றும் நகரச் செயலாளர்களும் வருகை தந்தனர். கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது என்பதும் உண்மை. அவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர், அதை நான் முழுமையாக உள்வாங்கி, மனதில் இருத்தியுள்ளேன். தகுந்த தருணத்தில் அது குறித்து உங்களிடம் விரிவாகக் கூறுவேன்."

சி.விஜயபாஸ்கர் தன் நேர்காணலில் எவ்வளவுதான் "நான் நிதானமாக, பொறுமையாக, அமைதியாக இருக்கிறேன்" என்று மழுப்பினாலும், இபிஎஸ் தலைமைக்கு ஒரு மெல்லிய ‘செக்’ வைத்துள்ளார் என்பது ரத்தத்தின் ரத்தங்களுக்குப் புரியாமல் இல்லை.

 "மக்கள் என்ன நினைக்கிறாங்களோ... அவர்கள் எதை விரும்புகிறார்களோ, அதை ஒட்டித்தான் என்னுடைய கருத்து இருக்கும்" என்று அவர் அழுத்தமாகக் கூறுவது, கட்சித் தலைமையின் முடிவை விட தொகுதி மக்களின் முடிவே தனக்கு முக்கியம் என்பதைத் துல்லியமாக உணர்த்துகிறது.

ஏற்கனவே அண்ணா திமுகவின் முக்கியத் தலைகள் தவெக பக்கம் தாவிக் கொண்டிருக்கும் நிலையில், விராலிமலை வேந்தர் சி.வி.விஜயபாஸ்கரின் அரசியல் பயணமும்  இறுதியில் தவெக பக்கம் சாயவே அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்கள் அவரை நன்கறிந்த அரசியல்  புள்ளிகள்...!

வேலூர்: குறைகளைச் சொன்ன தூய்மைப் பணியாளர்கள்; குறிப்பெடுத்துக்கொண்ட தவெக எம்எல்ஏ வினோத் கண்ணன்!

உலக பட்டினி தினத்தையொட்டி, வேலூர் சட்டமன்றத் தொகுதி த.வெ.க சார்பாக இன்றைய தினம் சி.எஸ்.ஐ மத்திய தேவாலய வளாகத்தில் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள்... மேலும் பார்க்க

'ஜூலைக்கு மேலும்' கச்சா எண்ணெய் விலை $90 டாலர்களா? இந்தியாவிற்கு காத்திருக்கும் நிதிச்சுமைகள்!

ஈரான் போர் முடிந்து, ஹார்முஸ் நீர்சந்தி திறக்கப்பட்டால் கூட, சர்வதேச சந்தையில், ஒரு பீப்பா கச்சா எண்ணெயின் விலை 85-90 டாலர்களுக்குத் தான் விற்பனையாகும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ந... மேலும் பார்க்க

’மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுக-விற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?’– காங்கிரஸ் பதிலடி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “த.வெ.க கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் பங்கேற்றது முதல் தி.மு.க... மேலும் பார்க்க

எஸ்.பி.வேலுமணியை வரவேற்க செல்லாத அதிமுக முக்கிய நிர்வாகிகள் – காரணம் என்ன?

சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வகித்து வந்த அ.தி.மு.க. கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டத... மேலும் பார்க்க

`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்சர் வன்னிஅரசு பேட்டி

தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராக வி.சி.க.வைச் சேர்ந்த வன்னிஅரசு மே 22, 2026 அன்று பதவியேற்றார். அமைச்சர் வன்னிஅரசு அவர்களை சந்தித்து அண்மை நிகழ்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.``... மேலும் பார்க்க

கொளுத்தும் வெயில்; அச்சுறுத்தும் Heat Stroke - பாதுகாப்பாக இருப்பது எப்படி? டாக்டர் டிப்ஸ்!

"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது, அதோடு பல சவால்களும் சேர்ந்து வந்துள்ளன. இந்த வெயிலின் தாக்கம் நம் எல்லோரையும் வாட்டி வதைக்கிறது. எனவே, நீங்கள் அனைவரும் தேவையான ம... மேலும் பார்க்க