"இது 'லவ் ஜிகாத்' திருமணம் கிடையாது!"- விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த கும்பமேளா...
`தாமதம் நல்லது' - பெரு வெள்ளமும் எல்லீஸ் பாலம் உருவாக்கமும்! | அணை ஓசை 09
1924-ம் ஆண்டு காவிரி–மேட்டூர் திட்டத்தின் முழு வரைவு முடித்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த காலத்தில், காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் வரலாற்றிலேயே முக்கியமான நிகழ்வாக அமைந்தது. 1896-ல் விநாடிக்கு 2,07,000 கன அடி நீர் அதிகபட்சமாக பதிவான நிலையில், 1924 ஜூலை 26-ல் விநாடிக்கு 4,56,000 கன அடி நீர் வெளிப்பட, அது முந்தைய அளவை இரண்டரை மடங்கு மீறியது. கர்னல் எல்லீஸ் தயாரித்த திட்டத்தில் உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,50,000 கன அடி வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்ததால், புதிய வெள்ள அளவு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது.

ஒருவேளை மைசூர்–சென்னை மாகாண அரசுகளின் நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் இல்லாமல், அணை 1924 க்கு முன்னரே கட்டப்பட்டிருந்தால், இந்த வெள்ளம் அணையை தகர்த்திருக்கக் கூடிய அபாயம் இருந்திருக்கும். உண்மையில் பின்னாளில் 1933-ஆம் ஆண்டு அணை 100 அடி உயரத்தில் கட்டுமானத்தில் இருந்தபோது கூட, வெள்ளம் அப்போதைய உயர அணைச்சுவரைத் தாண்டியது. ஆனால் சேதமின்றி கடந்து சென்றது பெரிய அதிர்ஷ்டமாகும். எனவே, ஆரம்பத்தில் தாமதம் நல்விளைவாக அமைந்தது என்றே கருத இடமுண்டு.
மாற்றங்கள்
1924 வெள்ளத்துக்குப் பின், உபரி நீர் வெளியேறும் அமைப்புகளில் மாற்றம் அவசியம் என உணரப்பட்டது. எல்லீஸ் மதகுகளின் (spillway) அளவுகளை அதிகப்படுத்த இயலாததால், அணையின் வலது புறம் டைகர் ஹில்ஸ் பகுதி வழியாக கூடுதல் நீர் வெளியேறும் வாய்ப்பு குறித்து ஆராயப்பட்டது. இறுதியில், spillway முகடுகளின் உயரம் குறைக்கப்பட்டு, 25% கூடுதல் வெள்ளம் ஏற்பட்டாலும் அணை பாதுகாப்பாக இருக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதற்கிடையில், முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சைட்-D இடம் உபரி நீர் வெளியேற வசதி இல்லாததால் பேரழிவு ஏற்படுத்தியிருக்கும் என்ற உணர்வு வலுத்தது. அதற்கு மாறாக, புதிய “சைட்-Y” உயரத்தில் இருந்ததால், அதிக செலவில்லாமல் spillway-ஐ (உபரி நீர் வெளியேற்றம்) மாற்றி, விநாடிக்கு 5 லட்சம் கன அடி வரத்து ஏற்பட்டாலும் அணையை காக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.

பின்னர், “சைட்-Y-ல்” பள்ளங்களை அமைத்து, பவர் ட்ரில் மூலம் பாறைகளின் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. ஆற்றுப்படுகை சமமாகவும் வலுவாகவும் இருப்பது கண்டறியப்பட்டதால், சில இடங்களில் 30 அடி ஆழம் தோண்டி திடமான அஸ்திவாரம் அமைத்து, பாதுகாப்பான அணை சுவர் கட்ட முடிந்தது. இவ்வாறு 1924 வெள்ளம், மேட்டூர் அணை இடத் தேர்வு, spillway வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இன்று மேட்டூர் அணை என்று நினைக்கும்போதே, இந்த உபரி நீர் திறப்பு எல்லீஸ் பாலம் தான் அனைத்து ஊடகங்களும் காட்சிப் படுத்துகின்றன. மனதை கொள்ளை கொள்ளும் அற்புத காட்சியாக கண்களை வியக்க வைக்கும் அமைப்பு அமைந்தது மக்களின் நல்வாய்ப்பு!
காவிரி – மேட்டூர் அணை திட்டம் வெறும் அணைச்சுவரை மட்டுமல்லாமல், அதை சுற்றியிருந்த முழு குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய பெரும் முயற்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டிய சூழலில், தற்காலிக முகாம்களில் மட்டும் போதாமல், திட்டமிட்ட நகரம் ஒன்றை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
காலரா பாதிப்பு
முதலில் கர்னல் எல்லீஸ் சுட்டிக்காட்டிய “SITE-D” அருகே முகாம்கள், அலுவலகங்கள், வீடுகள் அமைப்பதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாறை தன்மை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இடம் மாற்றப்பட்டதால், அந்தப் பணிகள் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையில் வேலை தேடி வந்த தொழிலாளர்கள் சுகாதார வசதியின்றி நேரடியாக ஆற்றைப் பயன்படுத்தியதால் காலரா பரவியது. சிறிய மருத்துவக் குழுவின் முயற்சியால் அது கட்டுப்படுத்தப்பட்ட போதும், சுகாதார நடவடிக்கைகளின் அவசியம் தெளிவானது.
இதையடுத்து, மேட்டூர் கிராமம் "மேட்டூர் நகரியம்" (METTUR TOWNSHIP) என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டது. தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் முதலில் மண் சுவர்க் குடிசைகளாக அமைக்கப்பட்டாலும், மழையால் அவை விரைவில் சேதமடைந்தன.
எனவே, சுட்ட செங்கற்கள், கற்கள், சிமெண்ட் பயன்படுத்தி சுவர்கள் எழுப்பப்பட்டு, ஓடு கூரைகள் போடப்பட்டன. உள்ளூர் மற்றும் மங்களூர் ஓடுகள், களிமண் டைல்ஸ் ஆகியவை பயன்பட்டன. சிறிய வீடுகளுக்கு மூங்கில், பெரிய கட்டிடங்களுக்கு வனத்துறையில் இருந்து மரங்கள் எடுக்கப்பட்டன. கதவுகள், ஜன்னல்கள் கான்கிரீட் சட்டம் அல்லது பில்லமருது போன்ற நாட்டு மரங்களால் செய்யப்பட்டது.
முகாம்களில் சாலைகள் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. வாகன போக்குவரத்துக்கு ஏற்றபடி பெரிய ஜல்லிகள் போடப்பட்டு, இடைவெளிகளில் சிறு பாலங்கள் கட்டப்பட்டன. சாலையோர வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டதால் வெள்ளம், மழை, மண் சரிவு ஆகியவற்றுக்கு சிக்காமல் இருந்தது.
குடியிருப்புகள் தொகுதி முறையில் (Blocks) கட்டப்பட்டு, வீடுகளுக்கு இடையே இடைவெளி வைக்கப்பட்டது. எல்லா பகுதிகளுக்கும் குடிநீர் குழாய்கள், நவீன கழிப்பிடங்கள், நிலத்தடி கழிவுநீர் அமைப்பு (Underground Drainage System) வழங்கப்பட்டது. சுத்திகரிப்பு நிலையங்கள், பம்பிங் மோட்டார்கள், வடிகட்டிகள் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது.

அலுவலர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கு நிலை (GRADE) அடிப்படையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஊரின் கிழக்குப் பகுதியில் தபால் நிலையம், கிளார்க் குடியிருப்புகள் இருந்தன. மையப்பகுதியில் “ஸ்கொயர் மார்க்கெட்” (சதுரங்காடி) அமைக்கப்பட்டு கடைகள், விற்பனை இடங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மூத்த அதிகாரிகளின் வீடுகள் நகரத்தின் தெற்குப் பகுதியில் சுற்றுச்சுவரோடு அமைக்கப்பட்டன. விருந்தினர்களுக்கான தனி விடுதிகளும் (Guest House) கட்டப்பட்டன.
“மருத்துவமனை” மிக முக்கிய பங்காற்றியது. அது தொழிலாளர்கள் குடியிருப்புக்கும் அணைச் சுவற்றுக்கும் இடையில் அமைக்கப்பட்டதால், விபத்துகள் நடந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடிந்தது. சுகாதார ஆய்வகமும் அங்கே செயல்பட்டது.

மலேரியா, தொற்று நோய்கள் போன்றவை தடுக்கப் பெரும் கவனம் செலுத்தப்பட்டது. பின்னாளில், Smith’s Knoll என்று குறியிட்ட பகுதியில் தற்காலிக பம்பிங் நிலையம் நிறுவப்பட்டு காவிரியில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டது. பின்னர், இடது கரையில் நிரந்தர நீர் நிலையம் அமைக்கப்பட்டு, ஆற்றைக் கடக்கும் புதிய பாலம் கட்டிய பின் குடிநீர் விநியோகம் எளிதானது.
இவ்வாறு, ஓர் சிறிய கிராமமாக இருந்த மேட்டூர், திட்டமிட்ட முறையில் “Township” ஆக மாற்றப்பட்டது. இன்று மேட்டூர், தமிழகத்தில் அதிகமான பொறியாளர்கள் வசிக்கும் ஒரு நகரமாக உருமாறியிருப்பது, காவிரி – மேட்டூர் அணை திட்டத்தின் வரலாற்றுச் சான்றாக திகழ்கிறது. காவிரித்தாய் நன்றிக்கு உரியவள்!
காவிரி நன்னீர் சிறப்பு



















