Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த ...
மேட்டூர் அணையின் இடத்தேர்வு... A,B,C நிராகரிக்கப்பட்டு தேர்வான `D' சாம்பள்ளி | அணை ஓசை 06
ஒரு பெரிய அணையின் வெற்றிக்கு, இடத்தேர்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு அடி உயரத்திற்கு எவ்வளவு நீரைச் சேமிக்க முடியும், அடித்தள பாறைகளின் வலிமை, உபரி நீர் வெளியேற வசதி, கட்டுமானப் பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதி... இவை அனைத்தும் ஒரு பொறியாளர் கவனிக்க வேண்டிய அடிப்படை அம்சங்களாகும். இந்தக் காரணிகளை கருத்தில் கொண்டு, மேட்டூர் அணை அமைந்த இடத்தை `கர்னல் எல்லீஸ்' அறிவுபூர்வமாக தேர்வு செய்தார்.
ஒரு நீர்த் தேக்கமானது நல்ல உயரத்திலும், அதே சமயம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஓரளவு தேவையான கொள்ளும் வசதி உடைய நீள அகலங்களும், அதிக வெள்ளம் ஏற்படும் காலங்களில் உபரி நீர் தனியாக வழிந்தோடி அணைக்கு பாதிப்பு ஏற்படாமலும் இருப்பது (முக்கியமாக பேசின் வடிவில் இருப்பது) மிகவும் முக்கிய தேவையாக கருதப்பட்டது.

ஒகேனக்கல் அருவியிலிருந்து 15 மைல் நீளப் பகுதி மிகக் குறுகிய பள்ளத்தாக்கு கொண்டதால், பெரிய அணைக்குச் சாத்தியம் இல்லை. மேட்டூர் அருகிலுள்ள காவேரிபுரம் – சாம்பள்ளி இடையே பரந்த நிலப்பரப்பு காணப்பட்டது. அங்கிருந்து நெரிஞ்சிப்பேட்டை என்ற இடம் வரை நீளமான பள்ளத்தாக்கு பேசின் போல விரிந்து கிடந்தது. இதனால் சாம்பள்ளி மற்றும் ஊராட்சி கோட்டைக்கு இடையே அணை கட்டும் யோசனை வந்தது.
அணை கட்ட 1910 க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு பரிசீலனையில் இருந்த முக்கிய இடங்கள்:
1. ஊராட்சி கோட்டை
2. நெரிஞ்சிப்பேட்டை
3. நவப்பட்டி
4. சாம்பள்ளி (A, B, C, D என்று குறியிட்ட இடங்கள்)
ஊராட்சி கோட்டை – பவானி வழியாக போக்குவரத்து வசதியோடு பல நன்மைகள் இருந்தாலும், அடித்தளப் பாறைகள் தரமற்றதால் கைவிடப்பட்டது.
நெரிஞ்சிப்பேட்டை –கி.பி.1901-ல் மோஸ் பரிந்துரைத்த இடம். கொள்ளளவு இருந்தாலும், கட்டுமானச் செலவு 14% அதிகமாகும்; உபரி நீர் வெளியேற்ற வசதி இல்லாததால் நடைமுறைக்கு ஏற்றதல்ல எனப்பட்டது.

நவப்பட்டி – சிறிய அணைக்குத் தகுதியானதாய் இருந்தது; பெரிய அணைக்குப் பொருத்தமற்றது என கைவிடப்பட்டது.
சாம்பள்ளி – A, B, C, D என 4 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, முதலிரண்டு இடங்கள் பாறைகளின் தரக்குறைவால் நிராகரிக்கப்பட்டன.
இறுதியில் “Site D” சிறந்ததாக உறுதியானது. அங்கு பெரிய பாறைகள் (“Benton’s Bluff”, “Smith’s Knoll”, “Stoney’s Ridge”, “Campbell’s Hill”) பெயரிடப்பட்டு அடித்தள ஆதாரங்களாகக் கருதப்பட்டன.
ரூ 385 லட்சம்...
மேலும், இயற்கையான உபரி நீர் வெளியேற்ற பாதை அமைந்திருந்ததால் இது மிகவும் பொருத்தமான இடமாக மதிப்பிடப்பட்டது. கர்னல் எல்லீஸ், 1910 இல் விரிவான அறிக்கையில், மேட்டூரில் அணை கட்டுமானம் சிறந்த தீர்வாக இருப்பதை உறுதி செய்தார். அந்த அறிக்கையில் அணையின் மதிப்பீடு சுமார் ரூ 385 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டு, இந்திய அரசின் G.O. No. 386 I, தேதி 3 டிசம்பர் 1910ல் பதிவு செய்யப்பட்டது. அணையின் வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது.
* ஆற்றுப்படுகை உயரம்: +620 அடி MSL (MEAN SEA LEVEL)
* முழு கொள்ளளவு: +785 அடி MSL
* அதிகபட்ச மட்டம்: +788 அடி MSL
* அணையின் உயரம்: 174 அடி MSL
* நீளம்: 6,000 அடி
கட்டப்போகும் அணையின் நீளம் மொத்தம் 6000 அடியாக இருக்கும் எனவும், (பின்னாளில் இந்த நீள அளவு மாற்றம் கண்டது) அணையின் மூன்று இடங்களில் தேவையான மதகுகளை பொருத்தி நீர் வெளியேற வடிவமைக்கப்பட்டு ஆழமான இடதுபுறம், அணையின் மத்திய பகுதி, மற்றும் அணையின் வலது புறத்தில் நீர் வெளியேற்றும் மதகுகள் பொருத்த திட்டமிடப்பட்டது. நீர்ப்பாசனத்திற்கும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உபரி நீர் வெளியேற மதகுகளை அமைப்பது குறித்தும் திட்டங்கள் வரையப்பட்டன.
"எல்லீஸ் மதகுகள்"
உபரி நீர் வெளியேறும் மதகுகள் அணையின் இடது புற ஓரத்தில் காவிரிக் கரையிலிருந்து சுமார் ஒன்றேகால் மைல் தூரத்தில் அமையப்பெற்று அந்த மதகுகள் "எல்லீஸ் மதகுகள்" என பெயர் பெறும் என்று திட்டமிடப்பட்டது.
உபரியாக அதன் வழியாக வெளியேறும் தண்ணீர் சீதா மலையின் கிழக்கே பாய்ந்து சுமார் ஒன்றரை மைல்கள் ஓடி மீண்டும் பள்ளத்தாக்கில் ஓடும் காவிரி ஆற்றுடன் அமையவிருக்கும் அணை கட்டுமானத்திற்கு இறங்கு முகத்தில் (அணைக்கு தெற்கே) நீர் கலந்து விடும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டது.
உபரி நீர் வெளியேற்றம் 19 மதகுகள் வழியாக நடக்கும் (ஒவ்வொன்றும் 40 அடி அகலம்), அவை “எல்லீஸ் மதகுகள்” என பெயரிடப்பட்டது. (பின்னாளில் 16 எல்லீஸ் மதகுகளாக வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது)
வெள்ளப் பதிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. 1896 ஜூலை 30ம் தேதி மற்றும் ஆகஸ்ட்-1ம் தேதிகளில், காவிரியில் அதிகபட்சம் விநாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதாகத் தரவுகள் தெரிவித்தன. எனவே, அணை +785 அடி வரை நிரம்பும்போது கூட, 2,50,000 கனஅடி நீரைப் பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் திட்டமிடப்பட்டது.

இந்த அளவுகள், பவானி பாலத்தின் நீர் அளவு மானியை வைத்து பதிவு செய்யப்பட்ட தரவுகள் ஆகும். 2,70,000 மற்றும் 2,01,000 கன அடி நீர் வெளியேற்றம் முறையே மேற்குறிப்பிட்ட இரண்டு தேதிகளில் நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது.
இதனால், கர்னல் எல்லீஸ் தேர்வு செய்த மேட்டூர் இடம், அனைத்து தொழில்நுட்ப அடிப்படை களுக்கு ஏற்ப பொருத்தமானது என உறுதி செய்யப்பட்டது.
மேட்டூர் ஒரு சிறு குக்கிராமம்
அந்த கால கட்டத்தில் மேட்டூர் ஒரு சிறு குக்கிராமம். சில நூறு பேர்கள் மட்டுமே வசித்த விவசாய பூமி! அப்போதைய கோயம்புத்தூர் மாவட்டம் பவானி என்ற ஊரிலிருந்து மட்டுமே சாலை வசதி – அதுவும் கரடு முரடான ஒழுங்கற்ற சாலை இருந்தது.
சேலத்திலிருந்து மேட்டூர் செல்ல சாலை வசதி என்பதே கிடையாது! நடுவில் சீதா மலை மற்றும் காவிரி ஆற்றை கடந்தாக வேண்டும். இதுபோன்ற ஒரு இடம்தான் அணை கட்ட பொருத்தமானதாக இருந்துள்ளது.
இந்த முடிவு, அணை கட்டுமான வரலாற்றின் முக்கிய திருப்புமுனை. ஆனால், எதிர்பாராத இடர்பாடுகளையும், திருப்பங்களையும் பின்னாளில் சந்தித்தது என்னவோ நிஜம்!
(தொடர்ந்து பயணிப்போம்….)
காவிரி நன்னீர் சிறப்பு




















