Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! - லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த ...
ஆப்கன்: எலும்பு முறிய கூடாது, காயம் தெரியகூடாது!- பெண்களை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய தாலிபான்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தாலிபான் அரசு பெண்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. படிப்பதற்கு கூட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தனியாக வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தியை தாலிபான் அரசு செய்து இருக்கிறது. அதாவது குடும்ப வன்முறையில் குடும்ப ஆண்கள் தங்களது மனைவி அல்லது குழந்தைகளை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்படும் நபரைப் பொறுத்து தண்டனையும் மாறுகிறது.
இதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கு அந்நாட்டு இஸ்லாமியக் குழுவின் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாடா கையெழுத்திட்டுள்ளார். குற்றவாளி "சுதந்திரமானவரா" அல்லது "அடிமை"யா என்பதைப் பொறுத்து வெவ்வேறு அளவிலான தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை அடிக்கும்போது காயம் தெரியாமலும், எலும்பு முறியாமலும் அடிக்கவேண்டுமாம். அதேசமயம் ஆபாசமான வன்முறை சம்பவங்களில் பெண்களுக்கு கணவன் எலும்பு முறிவுகள் அல்லது காயங்களை ஏற்படுத்தினால், கணவருக்கு 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மேலும், நீதிமன்றத்தில் பெண் துஷ்பிரயோகத்தை வெற்றிகரமாக நிரூபிக்க முடிந்தால் மட்டுமே ஆண் குற்றவாளி என அறிவிக்கப்படுவார். பெண் தனது காயங்களை முழுமையாக மூடிக்கொண்டு நீதிபதியிடம் காட்ட வேண்டும். நீதிமன்றத்திற்கு வரும்போது அவரது கணவர் அல்லது ஒரு ஆண் உதவியாளரும் அவருடன் வர வேண்டும். அதேசமயம் கணவரின் அனுமதி இல்லாமல் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றால் அப்பெண்ணிற்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.
2021ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானில் ஆட்சியை பிடித்த தாலிபான் அரசாங்கம் அண்மையில் அங்கீகரித்த தீமையை தடுத்தல் மற்றும் நற்பண்புகளை மேம்படுத்துதல் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ் ஆப்கான் சமுதாயம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தண்டனைகளும் மாறுபடுகிறது. உலமாக்கள், மேல்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், கீழ் மட்டத்தினர் என்று பிரிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் உலமாக்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் தவறு செய்தால், அவர்களுக்குத் தனியாக அறிவுரை கூறுவது, மென்மையாக நினைவூட்டுவது அல்லது எச்சரிக்கை செய்வது மட்டுமே போதுமானது. அவர்களின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு தண்டனை அமையும். அதேசமயம் சாதாரண மற்றும் கீழ் மட்டத்தினர் தவறு செய்தால் அதே குற்றத்திற்காக அவர்கள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது கடுமையான உடல் ரீதியான தண்டனைகளைப் பெறலாம்.
தாலிபான்களின் இந்த பாரபட்சமான தண்டனை, `சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற அடிப்படை மனித உரிமை விதிகளை மீறுவதாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தாலிபான் அரசு 2009-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு அரசு பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டது.

தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள சட்டம் குறித்து பொதுமக்கள் பேசவே பயப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள்
இரண்டாம் நிலை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 12 வயதிற்கு மேல் பெண்களுக்குக் கல்வி கற்கத் தடை விதித்துள்ள உலகின் ஒரே நாடு இதுவாகும். அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) உட்பட பெரும்பாலான வேலைகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண் துணையின்றி நீண்ட தூரம் பயணிக்கவோ அல்லது வீட்டை விட்டு வெளியேறவோ பெண்களுக்கு அனுமதி இல்லை. பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பொதுக் குளியலறைகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்க வேண்டும். மேலும், பொது இடங்களிலோ அல்லது வீட்டின் அருகிலோ பெண்கள் உரக்கப் பேசவோ அல்லது பாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.



















