திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும...
திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளிடையே பல வருடங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பெருமாள் கோவில்பட்டி கிராமத்திற்கு மட்டும் நேற்று 144 தடை உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பிறப்பித்தார்.

இதனால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், 144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்றைய விசாரணையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையின் போது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.

தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு இன்று வர உள்ளதால் 144 தடை உத்தரவு இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












