திண்டுக்கல்: நாட்டு மாடுகளைக் காக்க மாரத்தான்; விலங்கு பொம்மைகளுடன் ஓடிய அரசுப் பள்ளி மாணவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பி.வி.பி கல்லூரி சார்பில் ஜல்லிக்கட்டு நாட்டுமாடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனத் தனித்தனியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை தொழிலதிபர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
பத்து வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற செங்கட்டாம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வனவிலங்குகளைப் பாதுகாக்க வலியுறுத்தி விலங்குகளின் பொம்மைகளைக் கையில் தூக்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி ஓடினர். இது அப்பகுதி மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.
வத்தலகுண்டு காளியம்மன் கோவிலில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிங்காரக்கோட்டை கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
போட்டிகள் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...