வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலிய...
சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ்.ஐ.ஆர் திருத்தம் போன்ற பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறந்தன. இதற்கிடையில், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவிலும் வழக்கமான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எம்.பி சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகுர், மத்திய அமைச்சர்களான ராம் மோகன் நாயுடு (டிடிபி) மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் (ஜேடியு) மற்றும் சிராக் பஸ்வான் (எல்ஜேபி-ஆர்விபி) உள்ளிட்ட எம்.பி-கள் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், பிரியங்கா காந்தி பிரதமரிடம் அவரது சமீபத்திய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கு பிரதமர் மோடி, ``இந்தியாவில் உள்ள மக்கள் நினைப்பதை விட எத்தியோப்பியா மிகவும் வித்தியாசமானது. அது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது." என்றார். இதற்கிடையில் தலைவர்களுக்கு மத்தியிலான உரையாடலில் சிரிப்பலைகள் எழுந்ததாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், "நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர்களில் ஒன்று" எனக் கூறியதற்கு கவுன்ட்டர் கொடுத்த பிரதமர் மோடி, ``பல நாள்கள் நான் கத்த வேண்டியதில்லை என்பதால் இந்த தேநீர் விருந்தும், இந்த குறுகிய காலக் கூட்டத் தொடரும் என் தொண்டைக்கு நல்லது" என்று வேடிக்கையாகப் பதிலளித்தார்.














