திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை ச...
``சினிமா வசனமெல்லாம் பேசுகிறார்; விஜய் தான் பாஜகவின் `சி' டீம்!" - அமைச்சர் ரகுபதி சாடல்!
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
"எஸ்.ஐ.ஆர் பணியில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பத்து நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து உண்மையிலே வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களா, வேண்டுமென்றே விட்டிருக்கிறார்களா என்பதை நிச்சயமாக கண்டுபிடித்துச் சொல்கின்றோம். நகர பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இறந்தவர்களைத் தவிர மற்ற நீக்கப்பட்ட வாக்காளர்களை சரிபார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. எங்களுடைய பி.எல்.ஏ, பி.எல்.ஏடு, பி.எல்.சி இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலை பத்து நாள்களுக்குள் சரிபார்த்து விடுவார்கள். அதற்குப் பிறகு, இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கின்றோம். பா.ஜ.க, அ.தி.மு.க ஆகியோர் எதுவாக இருந்தாலும் சரி என்றுதான் கூறுவார்கள். நாங்கள் தீய சக்தியும் இல்லை.

தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படமாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி, தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது. ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும். பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது, திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பா.ஜ.க-வின் சி டீமாக இருக்கக்கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை. அவரை பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன்தான் அவர் கட்சி உறுதியானது. அதேபோல், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தைக் காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோக்கிதை இருக்கும். ஆனால், விஜய் அந்த தேர்தலில் புறமுதுகிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்-யையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான், தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை.

பா.ஜ.க-வின் சி டீம் தான் விஜய். கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படி இருக்கையில், அவருக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்ல தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பா.ஜ.க-வின் அடிமையாக அவர் இருக்கிறார். அ.தி.மு.க கட்சிக்காரர்கள் பாவம் அவர்கள் துடிக்கிறார்கள். தி.மு.க-வை மறைமுகமாக ஆதரித்தால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும்...தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.













