Muslim மதத்தைச் சேர்ந்த முன்னாள் MP-ஐ Hindu ஆக்கிய SIR Draft |Adani -க்காக மாற்ற...
`கோவைக்கு நோ...' - கரூர் சென்டிமென்ட்டை டிக் அடித்த செந்தில் பாலாஜி!
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில சட்டமன்றத் தேர்தல்களாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி பெறவில்லை. இதை சரி செய்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்துள்ளனர். கோவை, கரூர், நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களுக்கான பொறுப்பு செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்குப் பதிலாக, கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் கோவை திமுக ஒருங்கிணைந்த நிர்வாகிகள் கூட்டம், அவிநாசி சாலையில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் விடுபட்டுள்ளார்களா, தகுதியற்றவர்கள் சேர்க்கபட்டுள்ளனரா என்பதை பூத் வாரியாக ஆராய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் பழைய அரசியல் கட்சிகள், புதிய அரசியல் கட்சிகள் அனைவரும் திமுக-வை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது. விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும். பாஜக, அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் திமுக-வை மட்டுமே விமர்சிப்பார்கள். எனவே யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். நான் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் பரவுகிறது. எனக்கு கரூர் தொகுதி நன்றாகத்தான் உள்ளது. கரூர் மக்கள் என்னை 5 முறை வெற்றி பெற வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் வரும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை. கரூர் மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதால் அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. கோவையில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களின் இலக்கு." என்றார்.













