BB Tamil 9: "கொஞ்சம் கூட தைரியம் இல்லை" - அட்டாக் மோடில் திவாகர்; களேபரமாகும் பி...
"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது" -அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு பணி நியமனங்கள் நடைபெற்று பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கு கே.என்.நேரு, "நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை முறியடிக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து திருவாரூரில் நடைபெற்ற திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, " திமுக கூட்டணியில் இருந்து யாரும் வெளியேறவில்லை. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாகப் பிரிந்துள்ளது. சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர் பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். திமுக கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது.
மு.க. ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக்குவது திமுகவினரின் கடமை. இது அவருக்காகவோ, கழகத்திற்காகவோ அல்லாமல், பொதுமக்களின் நன்மைக்காகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைப்பதற்காகவும் செய்யப்பட வேண்டும்.

திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலியாக நான் ஆகியிருக்கிறேன். இருப்பினும், எந்தத் தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம். அடிக்க அடிக்க பந்து மாதிரி எழ வேண்டும் துவண்டு விடக்கூடாது" என்று பேசியிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.




















