IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்...
திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் - முடிவுக்கு வராத காரணம் என்ன?!
``காங்கிரஸ் கட்சி தி.மு.க விவகாரத்தில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க காரணமே தி.மு.க-வின் சில தவறான அணுகுமுறைகள்” என்று கிசுகிசுகிறார்கள் கதர்சட்டைக்காரர்கள்.
காங்கிரஸ் கட்சிக்காக காத்திருக்கும் நிலை இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் முகாமில் நடக்கும் விவரங்கள் குறித்து விசாரித்தோம்.
த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கப் போகிறது காங்கிரஸ் என்கிற செய்திகளும், அதன் பின்னணியில் த.வெ.க தரப்புடன் காங்கிரஸ் புள்ளிகள் நடத்திய பேச்சும் பொதுவெளியில் பெரும் பேசு பொருளானது. ஆனால், இந்த விவகாரங்கள் வெடிப்பதற்கு முன்பே இப்படி ஒரு சீனை உருவாக்க வேண்டும் என்கிற மூடில் காங்கிரஸ் டெல்லி தலைமை தெளிவாக இருந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் கடந்த நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை ஒரு பொருட்டாகக்கூட தி.மு.க தரப்பு மதிக்கவில்லை என்பதை பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமைக்குப் புகாராகத் தெரிவித்திருந்தனர், தமிழக காங்கிரஸ் புள்ளிகள்.

திமுக-வுக்கு செக்!
“தி.மு.க-வுக்கு செக் வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது த.வெ.க. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று ராகுல் திட்டமிட்டுதான் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் த.வெ.க தரப்பை தொடர்புகொள்ள வைத்தார்” என்கிறார் மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்.
ராகுலின் இந்த மூவ்வை அறிந்த தி.மு.க தலைமை, கடந்த டிசம்பர் மாதமே முதல்வரின் மருமகனை வைத்து ராகுலை சந்திக்க வைத்தனர். அப்போதும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தொடரும் என்கிற நம்பிக்கையை கொடுத்தார் ராகுல். ஆனால், தொடர்ந்து காங்கிரஸ் பிரமுகர்கள் தி.மு.க-வை சீண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு நடவடிக்கை இருக்கும் என்று தி.மு.க தலைமை எதிர்பார்த்தது. ஆனால், காங்கிரஸ் தலைமை அதை ஒரு பொருட்டாகக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கடும் டென்ஷனில் தி.மு.க இருந்தது. காங்கிரஸ் கட்சிதான் தி.மு.க வுக்கு எதிராக செயல்படுகிறதோ என்கிற எண்ணம் தி.மு.க கீழ் மட்ட நிர்வாகிகளிடம் இருந்தது.

ராகுலுக்குச் சந்தேகம்?
ஆனால், காங்கிரஸ் தரப்பில் மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. “தி.மு.கவுக்கு நாங்கள் செக் -வைத்தது உண்மை. அதேநேரம் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் கரைசேர விடாமல் செய்யும் வேலையை பா.ஜ.க தரப்பு செய்துவருகிறது. அதற்கு தி.மு.க-வும் ஒத்துப்போகிறதோ என்கிற சந்தேகம் ராகுலுக்கு உள்ளது. சில தினங்களுக்கு முன் டெல்லியில் ராகுலை சந்தித்த தி.மு.க குடும்பத்தை சேர்ந்த முக்கியப் புள்ளி, சந்திப்பு நடத்தி தொகுதி எண்ணிக்கை குறித்தெல்லாம் பேசினார்.

ஆனால், அவர் சொன்ன தொகுதி எண்ணிக்கையும் அவரது பேச்சும் தி.மு.க-வுடன் காங்கிரஸ் இணைந்து போகாத வகையில் இருந்தது. இது ராகுலுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தி.மு.க தரப்பு தங்களைக் கழற்றிவிட எண்ணுகிறதோ என்கிற எண்ணம் அப்போது தான் ராகுலுக்கு உருவானது. அதன்பிறகே தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் பேசியிருக்கிறார் ராகுல். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பிலிருந்து கூட்டணி பேச்சு குறித்த அழுத்தம் தி.மு.க-வுக்கு சென்றது. அதன்பிறகே கனிமொழியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினர். தி.மு.க குழுவை அமைத்த பிறகு பேசி முடிவெடுக்கலாம் என்று அப்போது ராகுல் உறுதி கொடுத்தார்.
கண்ணாமூச்சி ஆட்டம்!
இப்போது வரை குழு அறிவிப்பை தி.மு.க வெளியிடவில்லை. அவர்களுக்கு காங்கிரஸ் இல்லாத அணியை அமைக்கும் எண்ணம் உள்ளது. அதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து தி.மு.க புள்ளிகளுக்கு ஏதும் அழுத்தம் வந்திருக்குமோ?” என்று காங்கிரஸ் டெல்லி தலைமை நினைக்கிறது என்கிறார்கள்.
அதே நேரம் தி.மு.க-வினரோ, “காங்கிரஸ் கட்சியை கழற்றிவிடும் எண்ணம் ஒருபோதும் தி.மு.க-வுக்கு இல்லை. அவர்களை கழற்றிவிட்டால் பா.ஜ.க -வை நாங்கள் சரிகட்டிக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால், தேர்தலில் நாங்கள் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியும் முக்கியம் வேண்டும். அவர்கள்தான் கூட்டணியை விட்டு வெளியே செல்லும் பாதையை ஏற்படுத்துகிறார்கள்” என்கிறார்கள்.
இந்த மறைமுக கண்ணாமூச்சி ஆட்டமே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகாமல் இழுத்தடிக்க காரணமாக உள்ளது. இதையே ஒரு செக் பாயின்ட்டாக வைத்து தங்களின் சீட் கணக்கையும் நேர் செய்து கொள்ள காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. இந்த ஆட்டம் இன்னும் ஒரு வாரம் நீடிக்கும் என்கிறார்கள் இரண்டு கட்சிகளையும் நன்கு அறிந்தவர்கள்.















