வட கொரியா தேர்தலில் Kim Jong Un வெற்றி; ஆனால், மக்கள் கொடுத்த 'அதிசய' ட்விஸ்ட் -...
திருச்சி: 'முறையாக சிகிச்சை அளிக்காததால் நான்கரை வயது மகன் பலி' - சிறுவனின் பெற்றோர் குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கண்ணனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் தெரு நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (வயது:34 ). இவரது மனைவி திவ்யா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவருடைய மகன் பிரஜன் (வயது: 4 1/2). இந்த சிறுவன் துறையூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சரியாகி மீண்டும் சளி தொந்தரவு இருந்ததாக கூறப்படுகிறது. பிரஜனுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெறுவதற்காக காலை 11. 30 மணி அளவில் சென்றுள்ளார்கள்.

ஆனால், பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் இல்லாமல் ஒரே ஒருவர் மட்டும் பணியில் இருந்து உள்ளார். அவர் நடுநிலை மருத்துவ உதவியாளர் என்று தெரிய வருகிறது. அங்கே சென்றபோது குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த நடுநிலை உதவியாளர் உடனடியாக 108 அவசர ஊர்த்தியை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். அப்போது, செவிலியர் யாரும் இல்லாமல் 108 ஓட்டுநர் மட்டுமே வந்ததாக தெரிய வருகிறது. உடனடியாக தாமதிக்காமல் பெற்றோர்கள் அவர்களுடைய சொந்த வாகனத்தின் மூலமாக துறையூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்த போது சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவனின் பெற்றோர் கூறுகையில்,
"கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கும் சேர்த்து இந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. என் குழந்தை போல சுற்று வட்டார கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு இந்த நிலை ஏற்படக்கூடாது. அவசர உதவிக்கு சென்றால் கூட மருத்துவ செவிலியர் யாரும் பணியில் இருப்பதில்லை. இங்கு, இருக்கக்கூடிய செவிலியர் குடியிருப்பில் செவிலியர்கள் தங்குவதில்லை. முதல் உதவிக்கு சென்றால் மருத்துவர்கள் இருப்பதில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக முழு நேரமாக செயல்படக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். அல்லது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், இந்த சிறுவன் இறந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




















