`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' - கோயம்பேடு பேருந்து நிலையத்தின...
திருச்செந்தூர்: அன்னதானத்தில் வழங்கிய சாம்பாரில் புழு; பக்தர்கள் அதிர்ச்சி; வைரலான வீடியோ
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
திருக்கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் காலை முதல் இரவு வரை தொடர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் எண்ணிக்கை வரையிலான பக்தர்களுக்கு சாதம், சாம்பார் மற்றும் கூட்டு வகைகள், ரசம், மோர், அப்பளம், பாயாசம் ஆகியவை பரிமாறப்படுகின்றன.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதானத்தை அருந்திச் செல்கின்றனர். இந்த நிலையில், நேற்றும் (25-ம் தேதி) வழக்கம்போல் அன்னதானம் வழங்கப்பட்டது, அப்போது மதியம் வழங்கப்பட்ட அன்னதானத்தில் கலந்து கொண்ட திருப்பூரைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அன்னதானத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அதில் சாதத்துடன் ஊற்றப்பட்ட சாம்பாரில் புழுக்கள் இருந்துள்ளது.
இதைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். சாம்பாரில் கிடந்த புழுக்களையும், அன்னதானக்கூடத்தில் பிற பக்தர்கள் உணவு அருந்துவதையும் தனது செல்போனால் வீடியோ எடுத்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து அங்குள்ள பணியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் முறையான பதில் ஏதும் தெரிவிக்காமல் அலட்சியமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பணியாளர்களின் கவனக்குறைவின் காரணமாக புழுக்கள் நெளிந்த சாம்பாரை பக்தர்களுக்குக் கொடுத்துள்ளது அன்னதானத்தை நம்பி வரக்கூடிய பக்தர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக திருக்கோயில் இணை ஆணையர் அருணாச்சலத்தைப் பலமுறை போனில் தொடர்பு கொண்ட போதும், அவர் நம் அழைப்பினை எடுக்கவில்லை. இதுகுறித்த குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையிலும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















