`எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் கனிமொழி மேடம்... ராசாவைக் கண்டிக்க வேண்டும்!'...
திருச்செந்தூர்: ரூ.100 தரிசன கட்டண போலி ரசீது; ரூ.25 லட்சம் மோசடி; பெண் ஊழியர் சிக்கியது எப்படி?
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இக்கோயிலில் பொது தரிசன வரிசை, 100 ரூபாய் கட்டண வரிசை, முதியோருக்கான சிறப்பு தரிசன வரிசை என மூன்று வகையில் முருகனைத் தரிசனம் செய்யலாம். இந்நிலையில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் 25,24,100 ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் ராமு முறைகேட்டில் ஈடுபட்ட மேனகா என்ற பெண் ஊழியரைப் பணியிடை நீக்கம் செய்தார்.

திருக்கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வகையிலும், கோயிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்திய வகையிலும் ஊழியர் மேனகா மீது சட்டரீதியாக குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி திருச்செந்தூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து திருக்கோயில் அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ”திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 100 ரூபாய் கட்டண சீட்டு விற்பனை நிலையங்ளை ஆய்வு செய்தபோது, கம்ப்யூட்டரில் ஐ.டி.எம்.எஸ்., பயனர் உள்ளிட்டை பயன்படுத்தி ஒருமுறை மட்டும் கட்டண சீட்டு நகல் எடுக்கும் வசதியைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அத்துடன் ‘சி.சி.டி.வி’ கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் திருக்கோயில் பணியாளர் மேனகா என்பவர் பணியில் இருந்த நேரத்தில் மட்டும் கட்டண சீட்டுகள் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. அவர், 25,24,100 ரூபாய் முறைகேடாகக் கையாடல் செய்தது தெரிய வந்தது.
அத்துடன் தினசரி கட்டண சீட்டு மூலம் பெறப்படும் அறிக்கைகளை கம்ப்யூட்டர் வழியாக ஆய்வு செய்யாமலும் கம்ப்யூட்டரில் அச்சிடப்பட்ட கட்டண சீட்டுகளை ஒப்பிட்டு சரி பார்க்காமலும் பணியில் அலட்சியமாக இருந்ததால் திருக்கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோருக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மேனகா இழப்புத் தொகையில் 5 லட்சம் ரூபாயைத் தானாக முன்வந்து தவறை ஒப்புக்கொண்டு செலுத்தி உள்ளார். மீதித் தொகையைத் திருப்பி செலுத்துவதாக அவர் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்” என்றனர்.
''ரூ.25 லட்சம் மோசடி என்பது திருக்கோயிலுக்குப் பெரிய வருவாய் இழப்பு. ஒருவர் மட்டுமே இந்த மோசடியில் ஈடுபட்டிப்பதாகத் தெரியவில்லை. பலருக்கும் சம்மந்தம் இருப்பதாகவே கருதுகிறோம். அதே நேரத்தில் வருவாய் இழப்புத் தொகை ரூ.25 லட்சத்தையும் தாண்டுவதாகச் சந்தேகிக்கிறோம். எனவே, கீழ் நிலை ஊழியர் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரை முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்கின்றனர் பக்தர்கள்.















