அரசியல்வாதிகள் - போலீஸ் கூட்டணி: தொழிலதிபர்களை மிரட்டி ரூ.100 கோடி சேர்த்த உ.பி....
``திருமணத்தின் புனிதம், அடக்குமுறை துன்பத்தை தாங்கிக்கொள்வதில் இல்லை''- உயர்நீதிமன்றம் உத்தரவு
"கணவரின் வயது மூப்பின் காரணமாக தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது" என்று, ரத்து செய்யப்பட்ட தண்டனையை மீண்டும் வழஙகி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றக் கிளை.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், தன் கணவர் இளம்பெண் ஒருவருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததை கண்டித்ததால் தன்னை தாக்கி, உணவு வழங்காமல் பராமரிக்காமல் தனிமைப்படுத்தி துன்புறுத்துவதாக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கணவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும, ரூ 5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கணவர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், நேரடி சாட்சிகள் இல்லையென்று விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து அப்பெண் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவில், "திருமணத்தின் புனிதம் அடக்குமுறை அல்லது துன்பத்தை அமைதியாக பொறுத்துக்கொள்வதில் இல்லை. அந்த உறவின் உண்மையான சாரம்சம், பரஸ்பரம் மரியாதை, நட்பு மற்றும் கருணையில்தான் உள்ளது.
இவ்வழக்கில் வயது முதிர்ந்த பெண் குடும்ப மரியாதை, திருமண புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பெயரில் அவமதிப்பு புறக்கணிப்பை எதிர்கொண்டுள்ளார்.
உடல், மன ரீதியான துன்புறுத்தல்களை சகித்துக்கொள்ளும் தலைமுறையைச் சேர்ந்த இந்திய பெண்களின் பிரதிநிதிதான் மனுதாரர்.
வயதான கணவரை தண்டிக்க வேண்டும் என்றே மனைவி கோருவது பழிவாஙகும் நடவடிக்கை அல்ல. மனைவியை தனிமைப்படுத்தி உணவு, மரியாதையை பறித்துவிட்டால் அது துன்புறுத்தல் எனும் வரம்பை தாண்டி விடுகிறது.
ஒவ்வொரு செயலுக்கும் நேரடி சாட்சி வேண்டும் என கூறுவது சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும். முதியவர் என்பதற்காக தண்டனையில் சலுகை கோருவது ஏற்புடையதல்ல. முதியவருக்கு அதிக பொறுப்பு உண்டு.

குடும்பம், மரியாதை என்ற பெயரில் துன்புறுத்தல் மறைந்திருக்கும்போது அம்முகமூடியை சட்டம் அகற்ற வேண்டும்.
கணவரின் வயது மூப்பின் காரணமாக அவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவரது துன்புறுத்தல் வாழ்நாள் முழுவதும் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை விடுதலை செய்த மாவட்ட நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் ரூ 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே மீதமுள்ள தண்டனை காலத்தை அனுபவிக்க அவரை சிறையில் அடைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

















