Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
'தூத்துக்குடி போகாத எடப்பாடி பழனிசாமி விஜய்யை பற்றி பேசலாமா' - செங்கோட்டையன் பதிலடி!
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சினிமாவில் இருந்து எம்ஜிஆர் 3 முறை முதலமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.

திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என்கிற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்டிஆர் உருவாக்கியுள்ளனர் . இப்போதுள்ள நிலையில் தவெக, திமுக இடையேதான் போட்டி. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்ற நிலை இல்லை.
பிரதமரின் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை. யாரை நம்பி இவர் கட்சி நடத்துகிறார். எடப்பாடி பழனிசாமி முகத்திற்காகவா மக்கள் ஓட்டு போடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.
அதையே அவர் இன்னும் உணராமல் இருக்கிறார். அதிமுக, திமுக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்றாலும், அவர்களின் குடும்பத்தினரின் வாக்கு தவெகவுக்கு செல்லும் நிலை உள்ளது. எங்களது சர்வே முடிவில் தவெகவுக்கு 40% வாக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டு கொன்றார்கள். அப்போது எடப்பாடி பழனிசாமி எட்டி பார்த்தாரா. ஜெயலலிதா தங்கி இருக்கும் கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றது.
அந்த சம்பவம் காலையில்தான் எனக்கு தெரியும் என்று சொன்னவர் தான் எடப்பாடி. அவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதையும் நாடே அறியும். அவருக்கு விஜய்யை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை” என்றார்.













