``விஜய் அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது: போர்க் கவசமாக இருந்து பாதுகாப்போம்" - வைக...
`தூறலை யாசிக்க தேனருவி பொழிந்தது' | உளவன் - 05
எதிர்க்கட்சியின் பிரச்சார உத்திகளை திருடப் போய், அமெரிக்க அதிபர் நிக்ஸன் பதவி இழந்தார். பதவி விலகிய, முதல் அமெரிக்க அதிபர் என்ற கேவலமான பெருமை நிக்ஸனுக்குத்தான் உண்டு. Watergate ஊழல், அவர் அரசியல் வாழ்வையே அஸ்தமிக்கச் செய்தது. அதன் பிறகே, ஊழல் விவகாரங்களோடு gate என்ற பின்னொட்டைச் சேர்ப்பது, அரசியல் கலாச்சார குறியீடாக மாறியது.
‘நரேட்டிவ் செட் பண்ணுவது.’ - அரசியல் அரங்கில் இப்போது அதிகம் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வாசகங்கள் இவை. தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்க மட்டுமல்ல, எதிரியின் தோல்வியை நிச்சயப்படுத்தவும் ‘நரேட்டிவ்’ ரொம்ப முக்கியம்.
கடந்த நூற்றாண்டில் இப்படியெல்லாம் இல்லை. எதிரியின் பிரச்சார யுக்தி என்ன? எதிரிக்கு எங்கிருந்து நிதி குவிகிறது? இது தெரிந்தால் எதிரியை எளிதாக வீழ்த்தலாம். ஆனால், இதெல்லாம் பரம ரகசியம். தெரிந்து கொள்ள பெரிய பிரயத்தனம் தேவை.
குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் நிக்ஸன், மீண்டும் அதிபராக விரும்பினார். ஜனநாயக கட்சியின் தேர்தல் வியூகம், நிதி ஆதாரத்தை கண்டுபிடிக்க வேண்டும். வாஷிங்டனில் வாட்டர்கேட் வணிக வளாகத்திலிருந்த ஜனநாயக கட்சி தலைமை அலுவலகத்திற்கு குண்டர்களை அனுப்பினார். அதிரடியாக நுழைந்த குண்டர்கள் ஒட்டு கேட்பு கருவிகளை மறைத்து வைக்கும்போது மாட்டிக் கொண்டனர். வெள்ளை மாளிகையுடன் குண்டர்களுக்கு தொடர்பு இருந்ததை பத்திரிகைகள் கண்டுபிடித்தன. அந்த ஆதாரங்களை அழிக்க முயன்ற நிக்ஸன் பதவி விலக நேரிட்டது.

வாட்டர்கேட் ஊழலுக்குப் பின்பே, அரசியல்வாதிகளின் தொலைபேசி உரையாடல்களை ரகசியமாக பதிவு செய்ய, நீதிமன்ற அனுமதி அவசியம் (FISA Court) என்ற சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டது. அதேசமயம், அதிபர் - துணை அதிபரின் ‘அதிகாரப்பூர்வ’ தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட வேண்டுமென்ற சட்டமும் இயற்றப்பட்டது. அது பொதுவுடைமை என்பதால் தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுக்காக்கவும் சட்டம் வழிவகுத்தது.
எதையோ ஒன்றை கண்டுபிடிக்கப் போய், அது பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது போல பிரிட்டன் உளவுத்துறையிலும் ஒரு சம்பவம் அரங்கேறியது. அந்தப் பக்கம் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர். இந்தப் பக்கம் இத்தாலி - எத்தியோப்பியா இடையே மோதல். இன்னொரு பக்கம் ரைன்லாந்து ஆக்கிரமிப்பு. முதல் உலகப் போருக்குப் பின் வெர்சாய் ஒப்பந்தப்படி ரைன்லாந்துப் பகுதியில் ஜெர்மன் காலடி எடுத்து வைக்கக் கூடாது. ஆனால் அதை ஜெர்மன் மீறியது.
இப்படி போர் மேகம் சூழ்ந்ததால் பிரிட்டன் உஷாரானது. யுத்த மழையை எதிர்பார்த்து வெளிநாடுகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. குறிப்பாக ஜெர்மனியில்.
அது பொருளாதார மந்தநிலைக் காலம். கடும் பண நெருக்கடி. பிரிட்டன் உளவுத்துறையிலும்தான். பிரிட்டனுக்காக வெளிநாடுகளில் உளவு பார்க்க MI6 அணி. உள்நாட்டில் உளவு பார்க்க MI5 அணி. மாத ஊதியத்துக்கு உளவாளிகளை பணியமர்த்தி கட்டுப்படியாகவில்லை. உளவுத்துறைக்கு ஒப்பந்த ஊழியர்களை தேடியது பிரிட்டன்.
அந்நேரத்தில்தான் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த பேட்டரி வியாபாரி ஒருவர் சிக்கினார். அவர் பெயர் ஆர்தர் ஓவன்ஸ் (Arthur Owens). தொழில் தொடர்பாக அடிக்கடி ஜெர்மன் போய் வந்தார். ஓவன்ஸின் ஆசையைத் தூண்டினர் MI6 அதிகாரிகள்: அங்குள்ள கப்பல் கட்டும்தளம், துறைமுகப் பகுதிகளை படம் எடுத்து தந்தால் பணம் தருகிறோம்.
எவ்வளவு தருவீர்கள்? பேட்டரி வியாபாரம் பெரிதாக கல்லா கட்டவில்லை. பகுதி நேரமாக உளவு வேலை பார்க்க இறங்கி வந்தார் ஓவன்ஸ். தகவலைப் பொறுத்து 5 முதல் 10 பவுண்டுகள் வரை. போவது போகிறோம். அப்படியே சில இடங்களை ஃபோட்டோ பிடித்து கொடுத்தால் பணம். ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. இது நல்லா இருக்கே. கொஞ்சம் சுதாரித்தால், பிரிட்டன் ராணுவத்துக்கு பேட்டரி வழங்கும் ஆர்டரைக்கூட பிடித்து விடலாம். ஒப்புக் கொண்டார்.

இப்படித்தான், 1936-ம் ஆண்டு தொடக்கத்தில் MI6-ல் இணைந்தார் ஓவன்ஸ்.
வியாபார நிமித்தம் ஜெர்மனி போய் வந்த போதெல்லாம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்தார். MI6 - ஓவன்ஸ் உறவு சிறப்பாக போய்க் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில், அனுப்பிய படங்களையே மீண்டும் அனுப்பினார். பைசா பிரயோஜனமில்லாத தகவல்களைத் தந்து ஏமாற்றினார். MI6 அதிகாரிகள் ஓவன்ஸ் மீது அதிருப்தி அடைந்தனர். ஆளை மாற்றிவிடலாம் என யோசித்தனர்.
ஆனால், சொகுசு கார், மதுபார்களில் சூதாட்டம், காதலிகளை மாற்றிக் கொண்டே இருப்பது என ஓவன்ஸ் பந்தாவாக வலம் வந்தார். எங்கேயோ இடிக்குதே? ஓவன்ஸை கண்காணிக்கத் தொடங்கியது MI6.
ஜெர்மனியில், நண்பர் மூலம் அப்வேர் உளவு அதிகாரிகள் ஓவன்ஸுக்கு அறிமுகமாகின்றனர். பிரிட்டன் பற்றிய தகவல் தந்தால் மாதம் 250 பவுண்டுகள் ஊதியம் தருவதாக அவரை வளைக்கின்றனர். 250 பவுண்டா? ஆச்சரியம் தாளாமல் வாய் பிளந்தார். 5-க்கும் 10-க்கும் பிரிட்டனுக்கு வேலை செய்தோமே. தாய்நாட்டுக்காரன் ஏமாற்றிவிட்டான். உள்ளுக்குள் சிந்தித்தார் ஓவன்ஸ்.
போதாதா? இன்னும் ஏதாவது வேண்டுமா? அழகான துணைகளை உங்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம். அப்வேர் இறங்கி வர, ஓவன்ஸ் படுத்தே விட்டார். 1938 மத்தியில் அப்வேரில் இணைந்தார். அப்வேர் அவருக்கு வழங்கிய ரகசிய பெயர் ஜானி (Johnny).
ஓவன்ஸின் உல்லாச வாழ்க்கைக்கு பின்னால் இருந்தது ஜெர்மன் உளவுத்துறை. அவர் ஜெர்மனிக்கு அனுப்பிய கடிதம் ஒன்றை இடைமறித்து MI6 சோதித்தது. அப்வேருக்கு வேலை செய்வது உறுதியானது. விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். மாட்டிக் கொண்டதும் மண்டியிட்டார். பிரிட்டனுக்காக உளவு பார்க்கவே அப்வேரில் இணைந்ததாகக் கூறினார். அதை MI6 நம்பவில்லை. அப்வேர் கொடுத்த வானொலி Transceiver-ரை (Transmitter-Receiver) காண்பித்தார். பிரிட்டன் உளவுத்துறை வைத்திருப்பதைவிட மேம்பட்ட தொழில்நுட்பத்தில் அது இயங்கியது.
எதிரி நாட்டுக்கு உளவு பார்த்தால் பிரிட்டனில் மரண தண்டனை உறுதி. ஓவன்ஸ் விஷயத்தில் சற்று நிதானம் காட்டியது MI6. அப்வேர் எப்படி உளவு பார்க்கிறது? ஜெர்மனிக்கு பிரிட்டன் குறித்த என்னென்ன தகவல்கள் தேவை? இதைத் தெரிந்து கொள்ள பிரிட்டன் உளவுத்துறை ஆர்வம் காட்டியது.
அரசியல் படுகொலையை நிகழ்த்த, குறிப்பிட்ட அரசியல் தலைவர் எங்கு போகிறார், எத்தனை மணிக்கு புறப்படுகிறார், யாரைச் சந்திக்கிறார், என்ன உணவு சப்பிடுகிறார் போன்ற தனிநபர் சார்ந்த உளவு தகவல்களைச் சேகரிக்க வேண்டும். ஆனால், ஒரு நாட்டையே உளவு பார்ப்பது எப்படி? யுத்த தயாரிப்புகளில் அதன் அவசியம் என்ன? இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், ஓவன்ஸை ஜெர்மனிக்காக உளவு பார்க்க அனுமதித்தது.

ஓவன்ஸிடமிருந்து என்னென்ன தகவல்களை அப்வேர் கேட்கிறது? கவனமாக ஆராய்ந்தனர். அப்வேர் உளவுத்துறையின் மனநிலையை முழுமையாக படித்தனர். இதனிடையே உள்ளூர் உளவுப் பிரிவான MI5-ல் ஓவன்ஸ் இணைக்கப்பட்டார். அவருக்கு MI5 சூட்டிய பெயர் ஸ்னோ (Snow).
ஜெர்மன் உளவுத்துறையான அப்வேரின் நாடி, நரம்பு, மூளையை அறிந்து கொள்ள ஸ்னோவை பயன்படுத்தியபோதுதான் ‘இரட்டை உளவாளி’ என்ற கருத்தாக்கத்தையே பிரிட்டன் உளவுத்துறை கண்டுபிடித்தது. இந்தச் சிந்தனையை, 20 அதிகாரிகளைக் கொண்டு விரிவான திட்டமாக மாற்றியது. அந்தத் திட்டத்திற்கு XX (Double Cross) என பெயரிட்டது.
1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. எதிர் நாடுகளில் உள்ள உளவாளிகள் அனுப்பும் தகவல்கள் ஓரிடத்துக்கு வந்தன. அந்தத் தகவல்கள், நார்வேயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் கப்பலிலிருந்து அப்வேர் தலைமையகத்துக்கு அனுப்பப்பட்டது. பிரிட்டன் உளவுத்துறையின் குறியீட்டு உடைப்பு அணி இதை கண்டுபிடித்தது. பிரிட்டனில் இருந்து ஏஜெண்ட்டுகள் அனுப்பும் தகவல்களை அப்வேர் அதிகாரிகள் சலித்தனர். அதில் முக்கியமான - நம்பகமான தகவல்களை ரகசிய குறியீடுகள் (Cipher Text) மூலமாக ஹிட்லருக்கு அனுப்பினர். அது ஆங்கில எழுத்துக்களின் கலவையாக இருந்தது. எப்படி முயன்றும் அந்தத் தகவல்களை புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த எழுத்துக்கு இந்த எழுத்துதான் குறியீடாக மாற்றப்பட்டுள்ளது என்பதை ஒரு நாள் கண்டுபிடித்தால், மறுநாள் அது வேலை செய்யவில்லை. அது வேறொரு எழுத்தாக மாற்றப்பட்டிருந்தது. பிரிட்டன் உளவுத்துறை குழம்பிப் போய் கையைப் பிசைந்தது. எனிக்மா (Enigma) என்ற எந்திரம் மூலம் குறியாக்கம் (Encoding) செய்யப்பட்ட தகவல்கள் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
டைப் ரைட்டர் போன்ற எந்திரம்தான் எனிக்மா. இதில், நாள்தோறும் 150 குவிண்டில்லியன் (1 குவிண்டில்லியன் = 1 பில்லியன் பில்லியன்) ரகசிய குறியீடுகளை உருவாக்க முடியும். இதற்காக, மூன்று பிரத்யேக அமைப்புகள் (Rotor, Reflector, Plugboard) உள்ளன. மூன்று பிரத்யேக அமைப்பையும் தினந்தோறும் அப்வேர் மாற்றிக் கொண்டே இருந்தது. அனுப்பும் இடத்தில் மூன்று பிரத்யேக அமைப்பும் எப்படி இருக்கிறதோ, அதே அமைப்பில் வைத்து இயக்கினால்தான் தகவலைப் பெறும் இடத்தில் உள்ள எனிக்மா கருவி சரியான தகவலைத் தரும்.

தினந்தோறும் மூன்று பிரத்யேக அமைப்பும் எப்படி இருக்க வேண்டும் என்ற அட்டவணை மாதந்தோறும் உருவாக்கப்படும். ரகசிய மையால் டைப் செய்யப்பட்ட அந்த அட்டவணை உயர் அதிகாரிகளிடம் மட்டுமே இருக்கும். இதனை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
நம்மிடம்தான் கைவசம் ஸ்னோ இருக்கிறாரே, ஏன் தடுமாற வேண்டுமென யோசித்தது MI5. அப்வேருக்கு ஸ்னோ அனுப்ப வேண்டிய தகவல்களை MI5 தயாரித்தது. அது எப்படி மாற்றப்படுகிறது என்பதை குறியீட்டு உடைப்பு அணி கண்காணித்தது. இப்படியே, எனிக்மா மெஷின் மூலம் ஹிட்லரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் எல்லா தகவல்களையும் பிரிட்டன் எளிதாக கண்டுபிடித்தது.
இரட்டை உளவாளியின் பயனை இப்போதுதான் முதன்முறயாக ரசித்து ருசித்தது MI5. அது மட்டுமல்ல. எனிக்மா மூலம் இன்னொரு நன்மையும் விளைந்தது. பிரிட்டனுக்குள் திரிந்த அப்வேரின் அத்தனை உளவாளிகளின் பெயர், இடங்களையும் குறியீட்டு உடைப்பு அணி கண்டுபிடித்தது. அவர்களை துரத்தி துரத்தி மடக்கியது. அந்த உளவாளிகளை கூண்டோடு பிடித்து இரட்டை உளவாளிகளாக்கியது. அதேபோல ஜெர்மன் அனுப்பிய புதிய உளவாளிகளையும் அவர்களின் வான்குடை தரையைத் தொட்டதுமே வளைத்தனர்.

இப்படியாக அப்வேரின் உளவு வலைப் பின்னலின் சுக்கான் முழுவதும் பிரிட்டன் கை வசம் வந்தது. ஸ்னோ என்ற உளவாளியை இரட்டை உளவாளியாக்கியதே, ‘ஜெர்மன் உளவு அமைப்பைப் பற்றிய முழுமையான அறியாமையிலிருந்து நம்மைக் காப்பாற்றியது’ என MI5-ன் துணைத் தலைவர் டிக் ஒயிட் பெருமைப்பட்டுக் கொண்டார்.
உளவு பார்ப்பது எளிது. ஆனால், எதிரியும் இதேபோலத்தானே நம்மையும் உளவு பார்ப்பான். எனில், எதிருளவு (Counter Intelligence)தான் உளவுத்துறையில் பிரதானம். எதிருளவு, உளவுப் பணியின் முழுமையான குறிக்கோள் கிடையாது. ஆனால் முக்கியம்.
எதிருளவை மூன்று சொற்களில் வரையறுக்கலாம்: மறுப்பது, குழப்புவது, ஏமாற்றுவது. எதிரிக்கு தேவையான உண்மையான தகவல்கள் கிடைக்காமல் தடுப்பது / மறுப்பது (Negate / Deny). எதிரிக்கு மாறுபட்ட தகவல்களைக் கொடுத்து குழப்புவது (Confuse). தவறான தகவலை உண்மையான தகவலைப் போல கொடுத்து ஏமாற்றுவது (Deceive).
எதிருளவை சரியானச் செய்ய இரட்டை உளவாளிகளே மிகச் சிறப்பான கருவி.
நவீன கருவிகளைக்கூட மனிதர்கள் மூலம் உளவு பார்க்க முடியும். இதை நம்ப வைக்க உதவினார் ஸ்னோ என்ற ஆர்தர் ஓவன்ஸ். ‘இரட்டை உளவாளிகள்’ என்ற புதிய உளவு வரலாற்றின் முதல் அத்தியாயத்தை அவரே எழுதினார். இதன் பிறகே எடி சேப்மேன், கார்போ போன்ற எமகாதக இரட்டை மாயாவிகளெல்லாம் களத்துக்கு வந்தனர்; இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை மண்ணை கவ்வ வைத்தனர்.!



















