தார் பாலைவனத்தின் அபாயகரமான மாற்றம்: பசுமையை சுமக்கும் மணலின் சாபக் கதை!
தேர்தல் அறிக்கை: `கவர்ச்சிகர திட்டங்கள் இல்லை; முன்னேற்ற திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை'- கனிமொழி
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வரும் 29-ஆம் தேதி மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான எம்.பி. கனிமொழி இன்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மகளிர் அணி மாநாட்டில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். பெண்கள் பாதுகாப்பாக சிரமமின்றி கலந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் பெண்கள் பாதுகாப்புடன் உள்ளதால், இந்த மாநாட்டுக்கென தனிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை இல்லை. எனினும் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கும் நிபந்தனைகள் எங்களுக்கும் பொருந்தும்.

காவல் துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் முறையாகப் பின்பற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும். எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாகவும், கடன் மாநிலமாகவும் கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்றார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் அயராத உழைப்பால் இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. உண்மை என்ன என குற்றஞ்சாட்டுபவர்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்தலுக்காக அவர்கள் பேசி வருகிறார்கள். 2026 திமுக-வின் தேர்தல் அறிக்கையில் கவர்சிகர திட்டங்களை எதிர்பார்க்க முடியாது. முன்னேற்றத்துக்கான திட்டங்களைத்தான் வாக்குறுதிகளாக வழங்குவோம். மற்ற கட்சியினர்தான் கறுப்புக் கொடிக்கு அஞ்சுவார்கள். நாங்கள் கறுப்பில் இருந்து வந்தவர்கள். எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது" என்றார்.















