செய்திகள் :

`தேர்தல் முடிவுகள் மீது கடும் சந்தேகங்களை எழுப்புகிறது; ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்!'- ஸ்டாலின்

post image

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 1.3 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது, 'படிவம் 6'-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் முன்வைத்திருக்கின்றனர்.

மேலும், முக்கிய முடிவுகள் தங்கள் கவனத்திற்கு வராமலேயே எடுக்கப்படுவதாக இரு ஆணையர்களும் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், தேர்தல் ஆணையத்திற்குள் அதிகாரிகளிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து பரவலாக பொதுவெளிகளில் விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன.

Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்
Gyanesh Kumar - தலைமை தேர்தல் ஆணையர்

அதே நேரம் இந்தக் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக பதிலளித்தது. அதில், ``கடந்த 10 மாதங்களில் நடந்த சில குறிப்பிட்ட உட்புற விவாதங்களை மட்டும் முன்னிலைப்படுத்துவது முழுமையான உண்மையைக் காட்டாது. கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சீர்திருத்தங்கள் (SIR உட்பட) மற்றும் 40-க்கும் மேற்பட்ட புதிய முயற்சிகள் அனைத்தும், முழு ஆணையத்தின் ஏகமனதான ஒப்புதலுடனே எடுக்கப்பட்ட முடிவுகளாகும். மேலும், பல்வேறு மாநிலத் தேர்தல்களும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன." எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``SIR என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கைக்குத் திமுக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பல மாநிலங்களில் தேர்தலுக்குச் சில மாதங்களே இருந்த சூழலில், அவசர அவசரமாக நடத்தப்பட்ட இந்த SIR நடவடிக்கையில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததோடு, குறிப்பாக மேற்கு வங்கத்தில் பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இன்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள ஆதாரப்பூர்வமான புலனாய்வுச் செய்தி, இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்குப் பின் நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மீதும் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையர்கள்; சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார், விவேக் ஜோஷி
தேர்தல் ஆணையர்கள்; சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார், விவேக் ஜோஷி

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலும் இன்றி தன்னிச்சையாகவும் ரகசியமாகவும் செயல்பட்டு வந்துள்ளார் என்பதை அந்தச் செய்தி அம்பலப்படுத்தியுள்ளது.

இதில் மிக அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், தாங்கள் இணைந்து நிர்வகிக்கும் ஓர் அமைப்பிற்குள் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான திரு. சுக்பீர் சிங் சந்து மற்றும் திரு. விவேக் ஜோஷி ஆகிய இருவருக்குமே தெரியப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது.

தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்படுவது குறித்து அவர்கள் தெரிவித்த எதிர்ப்புகள், வெறும் பத்தே மாதங்களில் 14 முறை அலட்சியப்படுத்தப்பட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே முற்றிலுமாகச் சிதைத்துள்ளது. தேர்தல் ஆணையம் என்பது மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு அமைப்பாகும்; இதன் முடிவுகள் சாத்தியமான வரை அனைவரின் ஒப்புதலோடு ஒருமனதாகவே எடுக்கப்பட வேண்டும். ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் அமைய வேண்டும்.

வாக்குப்பதிவு
தேர்தல்

ஆனால், ஆணையத்தின் பெயரால் என்ன நடக்கிறது என்பதே அதன் மூன்று உறுப்பினர்களில் இருவருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது என்றால், அதை ஒரு சாதாரண நிர்வாகக் குறைபாடு என்று கடந்துவிட முடியாது. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகக் கொடூரமான தாக்குதலாகும். சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், அரசியல் தலையீடுகள் இன்றியும் செயல்பட வேண்டிய ஒரு உயரிய அரசியலமைப்பு அமைப்பின் நேர்மை இங்கே கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் நடந்துள்ள விஷயங்களும் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தகுதியான வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், அதை எதிர்த்து தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மேல்முறையீடுகளுக்கு அனுமதி அளித்தது யார், இவற்றைத் தாக்கல் செய்தது யார் என்ற விவரங்கள் பதவியில் இருக்கும் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கே தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். சட்டப்படி, வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து திருத்துவதற்கு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத்தான் (EROs) முழு அதிகாரம் உண்டு.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

ஆனால், அனைத்துத் தகுதிகளும் பெற்று முறைப்படி சேர்க்கப்பட வேண்டிய வாக்காளர்களைக்கூட அதிகாரிகளால் சேர்க்க முடியாமல் முடக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் மாற்றங்கள் செய்வதற்கான 'ஈரோநெட்' (ERONet) என்ற டிஜிட்டல் தளம், முற்றிலும் ஒரே ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்கியுள்ளது. பதவியில் இருக்கும் தேர்தல் ஆணையர்களே இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகளை வைக்கும்போது, தேர்தல் ஆணையத்திற்குள் எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருந்திருக்கும் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

இதன் காரணமாகவே, கடந்த மார்ச் மாதத்திலேயே திமுக மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பதவிநீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. தன்னிச்சையாகச் செயல்பட்டு ஜனநாயகத்தைச் சீர்குலைத்த அவருக்கு, இனிமேலும் அந்தப் பதவியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. திரு. ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும். அதேபோல், இந்த SIR நடவடிக்கையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்திற்குள் நடந்துள்ள அனைத்து முறைகேடுகள் குறித்தும் நேர்மையான, முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக உறுதியாக வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`நான் இருக்கேன்' கையில் முத்தமிட்டு ஆறுதல் சொன்ன விஜய்; உருகிய வி.எஸ்.பாபு... 10 நிமிட சந்திப்பு!

75 வயதாகும் வி.எஸ்.பாபுவுக்கு சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். செப்.9-ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி வழக்கு: ``தொடர்புடைய குற்றவாளிகளும், துணைபோன முந்தைய ஆட்சியாளர்களும்"- சீமான் காட்டம்!

பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணியையும், பின்புலத்தில் உடந்தையாக இருந்த குற்றவாளிகளையும் கண்டறிந்து, விசாரணையையும், வழக்கையும் துரிதமாக நடத்தி, மரணத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட... மேலும் பார்க்க

`இடைத்தேர்தல்; இணைந்த கைகள் வெற்றி' - தூத்துக்குடியில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் - அஜித் போஸ்டர்!

எம்.ஜி.ஆர்- சிவாஜி, ரஜினி- கமல் ஆகிய ஹீரோக்களின் வரிசையில் நடிகர்களான விஜய்- அஜித் திரையுலகில் முன்னணில் இருந்த காலக்கட்டத்தில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது இருவரின் படங்களும் ஒரே நேரத்தில்... மேலும் பார்க்க

இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்குமா? அமெரிக்காவில் ஈரான் குழு! விரைவில் குட் நியூஸ்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது... Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் எ... மேலும் பார்க்க

ECI `பல உத்தரவுகள் எங்கள் அனுமதி இன்றியே வெளியாகின்றன'- SIR விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) நாடு முழுவதும் மேற்கொண்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) நடவடிக்கையின்போது, சுமார் 1.3 கோடி வாக்காளர் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பொது விவாதத்தை... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு; ``தவெகவினருக்காக மட்டும் 'Compromise' செய்துகொள்கிறாரா முதல்வர்?" - டிடிவி தினகரன்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் தவெக நிர்வாகிகள் குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கு... மேலும் பார்க்க