ஊட்டி: 7 லட்சம் பூக்களில் சென்னை சென்ட்ரல், மகாபலிபுரம்! - 10 நாள்கள் நடைபெற இரு...
நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைக்கழி முருகன் திருக்கோயில் - வினைகள் விலகும்... திருமணம் கைகூடும்!
சந்தத் தமிழ்க் கொண்டல் அருணகிரிநாத சுவாமிகள், திருப்புகழ் பாடல்களால் போற்றிப்பரவிய முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஏராளம். அவற்றில் மிகவும் முக்கியமானது திருவிடைக்கழி. பிறவிப்பேறு பெற, வாழ்வில் உயர்நிலையை அடைய இறைவனின் பாதக் கமலங்களைச் சரணடையவேண்டும் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட வரங்களை அளிக்கும் திருவிடைக்கழி முருகப்பெருமான் குறித்து அறிந்துகொள்வோம்.
கொந்துவார் குரவடி என்று இத்தலத்தைப் போற்றுகிறார் அருணகிரிநாதர். `குரவடி' என்பது `குரா மரத்தின் அடி' என்பதாகும். முருகனின் திருப்பாதங்கள் பதிந்த புண்ணிய பூமி குராவடி எனும் திருவிடைக்கழி.

திருக்கடவூரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில், தில்லையாடி வழியாகத் திருவிடைக்கழி முருகன் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதி உள்ளது. காரைக்கால், தரங்கம் பாடி வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
சூரபத்மன் மகன் இரண்யாசுரனை சம்ஹரித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் பொருட்டு, முருகப்பெருமான் இந்தத் தலத்தில் சிவலிங்க வழிபாடு செய்ததாக தலபுராணம் சொல்கிறது. எனவே, சுப்ரமண்யருக்கு முன்புறம் சிறிய ஸ்படிக லிங்கமும், பின்புறம் கருவறையில் பாபநாச லிங்கமும் திகழ்கின்றன.
கருவறையில் ஒரு முகம், இரண்டு கரங்கள் என சுமார் ஐந்தடி உயரத்தில் கண்டவர் மனம் மயங்கும் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார் முருகன். பாதங்களில் வீரக் கழல், வலது காலில் பூண் (ஓர் ஆபரணம்), மார்பில் வாகுவலயம், முகமோ சந்திர பிம்பம் - சூரிய பிரகாசம். வலது கரம் அபய முத்திரை காட்ட, இடது கரத்தை இடுப்பில் வைத்தவாறு திகழும் முருகனின் இந்தத் திருக்கோலத்தை ‘சுப்ரமண்யன்’ என்று ஆகமங்களும், சிற்ப நூல்களும் குறிப்பிடுகின்றன.
கருவறைக்குள் மற்றொரு கருவறையாக முருகனும் சிவனும் காட்சியளிக்கும் அற்புதமான அமைப்பை, இந்தத் திருவிடைக்கழி திருக்கோயிலில் மட்டுமே காண இயலும். இத்திருக்கோயிலில் பாபநாசப் பெருமானுக்கு உரிய அம்பிகை சந்நிதி இல்லை; ஆனால், மூலஸ்தானத்தில் போக சக்தி அம்மன் உண்டு.

முருகப்பெருமான் விரும்பி அணியும் மலர்களில் குரா மலர் குறிப்பிடத்தக்கது. திருவிடைக்கழியின் தலவிருட்சம் குரா மரம். ‘குரா’ என்ற வார்த்தையைத் திருப்பினால் ‘ராகு’ என்று வரும். நவகிரகங்களில் ராகு என்ற கிரகத்துக்கும் குரா மரத்துக்கும் ஓர் அதிசயமான தொடர்பு உண்டு.
திருவிடைக்கழியை `நாக தலம்' என்ற தல புராணம் கூறுகிறது. நாகமாகிய ராகு, இத்தலத்தில் குரா மரத்தடியில் குமரனை வழிபட்டதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து குமரனை வழிபாடு செய்து, ராகு தோஷம் நீங்கப்பெறுகிறார்கள். மேலும், ஜாதகத் தில் ஏழாவது வீடாகிய களத்திர ஸ்தானம் எனும் திருமண வீட்டில் ராகுவால் தோஷம் ஏற்பட்டிருந்தால், அது இந்தக் குராவடிக் குமரனை வழிபாடு செய்வதால் நீங்கும்.
நவ கோள்களின் நாயகனும் அவர்களை ஆட்டுவிப்பவனுமாகிய குமரப்பெருமானே இத்தலத்தில் பிரதானமாக இருப்பதால், இங்கு நவகிரக சந்நிதி கிடையாது. ‘குராவடிக் குமரனைக் கும்பிடுவோர்க்கு அராவின் (ராகுவின்) தோஷம் நீங்கும்’ என்பது பலரும் உணர்ந்த அனுபவம்.
குரா மரத்தருகில் ‘பத்ர லிங்கம்’ எனும் பலிபீடம் உள்ளது. முருகப்பெருமான் குரா மரத்தின் கீழிருந்து தவம் புரிந்ததை உணர்த்தும் வகையில், அர்த்தஜாமத்தில் இந்தப் பலிபீடத்துக்கு முதலில் பூஜை செய்த பிறகே மூலவருக்கு பூஜை செய்வது வழக்கம்.
ஏழாவது எண்ணுக்கும் திருவிடைக்கழி தலத்துக்கும் ஓர் அபூர்வமான தொடர்பு உண்டு. இத்திருக்கோயிலில் இதுவரை நடைபெற்றுள்ள பல்வேறு விழாக்கள், இந்த ஏழாம் எண்ணின் தொடர்புடையதாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் உள்ள குறைபாடு காரணமாக திருமணத் தடை ஏற்பட்டு வருந்தும் அன்பர்கள், அவர்களது ஜன்ம நட்சத்திரம் உள்ள தினத்திலோ, வெள்ளிக் கிழமைகளிலோ இங்கு சென்று ஆலயத்தை 25 முறை மெதுவாக வலம் வருதல் வேண்டும். வலம் வரும் போது சேந்தனார் திருவிசைப்பா மற்றும் திருவிடைக்கழி திருமணப் பிரார்த்தனை பதிகம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வது விசேஷம்.
வலம் முடித்து, திருவிடைக்கழி முருகனுக்கு அபிஷேக வழிபாடு செய்து முல்லை, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். உளுத்தம் பருப்பு கலந்த தேங்காய் அன்னத்தை நைவேத்தியம் செய்து, சேவார்த்திகளுக்கு வழங்கி பிரார்த்தனை செய்துகொள்ள, விரைவில் திருமணம் கைக்கூடும்.
இந்தத் தலம் வந்து வழிபட்டால் முன்வினைகள் நீங்கி முக்திப்பேறும் வாய்க்கும். யாருக்கெல்லாம் முக்திப் பேறு உண்டோ அவர்கள் மட்டுமே இத்தலம் வர முடியும் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை திருவிடைக்கழி சென்று வழிபட்டு வாருங்கள்.!



















